தமிழக வரலாற்றை மறைத்து சட்டசபையில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கை:
கோவில்களைத தமிழர்கள் கலவரமாக பார்க்காமல் கலையாக பார்த்ததால் கோவில் நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் பேசியுள்ளார். அமைச்சராவதற்கு முதல்வரின் அடிமையாக இருந்து ஆமென் போட்டால் போதும். எந்த தகுதியும் தேவையில்லை என்பதை இவரது பேச்சு வெளிக்காட்டுகிறது. சேகர் பாபுவிற்கு சரித்திரமும் தெரியாது தமிழகத்தில் உள்ள ஆலயங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் முகலாயர், ஆங்கிலேயரால் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்று தெரியாமல் பேசியிருக்கிறார்.
எந்த சட்டசபையில் நின்று இவர் பேசுகிறாரோ அந்த இடத்தில்தான் சென்ன மல்லீஸ்வரர் கோவில், சென்ன கேசவ பெருமாள் கோவில் இருந்தது. அதனை பிரிட்டிஷ் காரர்கள் இடித்து தான் ஜார்ஜ் கோட்டை கட்டினார்கள்.
அதற்கு அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இருந்த இடத்தில் தான் கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் இருந்தது. அதனையும் இடித்தார்கள். தன்மானத்தோடு ஆங்கிலேய கொடுங்கோலனை இந்துக்கள் எதிர்த்தனர். மக்களின் எதிர்ப்பிற்கு பின்னர் பணிந்து போனான். அதன்பிறகு இந்துக்கள் ஒன்று சேர்ந்து தேவராஜ் முதலியார் தலைமையில் கட்டிய கோவில்கள் தான் தற்போது ஒரு கிலோமீட்டர் தாண்டி பூக்கடை பகுதியில் உள்ளது.
சென்னையின் தலக் கோவில்களே இவைதான். அதனால் தான் இதற்கு சென்னை என்ற பெயரே வந்தது என்பதை மறந்துவிட முடியாது.
சென்னை மைலாப்பூர் கடலையொட்டி இருந்தது கபாலீஸ்வரர் கோவில். அதனை இடித்து அங்கு கட்டப்பட்டது தான் செயிண்ட் தாமஸ் சர்ச். இப்போது உள்ள கோவில் அதன் பிறகு கட்டப்பட்டது.
இப்படி பல கோவில்களை மதவெறி பிடித்த ஆங்கிலேயர்கள் இடித்த வரலாறு உள்ளது. சாம்பலில் இருந்து உயிர்ப்பெறும் ஃபினிக்ஸ் பறவை போல இந்துக்கள் மீண்டும் கட்டிய கோவில் வரலாறு அமைச்சர் சேகர்பாபுவிற்கு தெரிந்தால் வாய்க்கு வந்தபடி இப்படி பேசுவாரா?
மதவெறியர்களான முகலாயர், திப்பு சுல்தான், ஹைதர்அலியால் பாதிக்கப்பட்டது வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில். 400 ஆண்டுகள் சாமி (சிவலிங்கம்) இல்லாத கோவிலாக வேலூர் மாவட்டமே பாழடைந்து கிடந்தது. இந்து முன்னணி நிறுவனர் ஐயா வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் இந்துக்களை ஒன்று திரட்டி 1981-ல் சுவாமியை பிரதிஷ்டை செய்ய வைத்தார்.
செஞ்சி கோட்டை மீது இருந்த கோவில் பெருமாள் ஆக்கிரமிப்பாளனால் பாதிக்காமல் அப்புறப்படுத்தினர் பக்தர்கள். சில ஆண்டுகளுக்கு முன் தான் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திண்டுக்கல் அபிராமி மலைக்கோவிலில் இருந்த சுவாமிகள் திப்பு சுல்தான் ஆக்கிரமிப்பு சமயத்தில் கொடியவர்களால் அகற்றப்பட்டது. அதனை மீண்டும் வைக்க இந்துக்கள் போராடி வருகிறார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயமும் திருவரங்கமும் 40 ஆண்டுகள் முகலாயர்களின் ஆக்கிரமிப்பால் மூடி கிடந்த சரித்திரம் அமைச்சருக்கு தெரியுமா?
விஜயநகர பேரரசின் தளபதி கம்பண்ண உடையாரின் படைகளால் இவ்விரு கோவில்களும் மீட்கப்பட்டன.
வரலாறு தெரியாத அமைச்சருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் முகலாயர்களால் சிதைக்கப்பட்ட லிங்கமும் அதன் அருகில் இந்த சரித்திர நிகழ்வு குறித்து தகவல் பலகை இருப்பது தெரியுமா?
அந்த தகவல் பலகையை வைத்தவர் என்றும் மக்களால் போற்றப்படும் எம்.ஜி.ஆர். ஆவார்.
அதுபோல பல சரித்திர உண்மைகளை தமிழர்களிடம் மறைத்தது தி.மு.க.வின் மோசடி அரசியல். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி உள்ளது உண்மைதானே. அதற்கு என்ன காரணம் சொன்னாலும் அதே காரணங்களால் இடிக்கப்பட வேண்டிய வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களை இடித்தது உண்டா? காரணம் இந்துக்கள் ஏமாளிகள் என்ற அகம்பாவம்தானே.
முகலாய ஆக்கிரமிப்பாளர்கள் தமிழகத்தில் சுமார் 300 கோவில்களை இடித்து மசூதி / தர்கா கட்டியதற்கு ஆதாரபூர்வமான பட்டியல் இருக்கிறது அமைச்சர் அவர்களே.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று பெரியோர்கள் கூறுவார்கள் மறந்து விடாதீர்கள். இந்த உண்மைகள் உங்களுக்கும் முதல்வருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதற்காக உண்மையை மறைக்க நினைக்காதீர்கள்.
நீங்கள் கோவிலை கலையாக பார்த்து இருந்தால் நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்து குப்பையாக குவித்து இருப்பீர்களா?
முகலாயனும் ஆங்கிலேயனும் இடித்து சேதப்படுத்திய வரலாறை மூடி மறைத்து பேசுவீர்களா??
அப்படி கோவிலை ஆன்மிக கேந்திரமாக தாங்கள் பார்க்காவிட்டாலும், கலையாக பார்த்தாலும் கோவில் இடிப்பதை கைவிடுங்கள். திண்டுக்கல் அபிராமி மலைமீது ஈசனும் அம்பாளும் எழுந்தருள செய்யுங்கள்.
தமிழகத்தின் திருக்கோவில்களை திட்டமிட்டு சிதைக்கும் கயவாளிகளை மனநிலை பாதித்தவர்கள் என்று வழக்கை முடிப்பதை கைவிட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுங்கள். அப்போதுதான் சமூக விரோதிகளுக்கு அச்சம் வரும்.
எனவே அமைச்சர் சேகர் பாபு அவர்களே மதவெறி இஸ்லாமிய படையெடுப்பாளர்களை பக்தி நெறியோடு வாழ்ந்த தமிழ் மன்னர்களும், பாளையக்காரர்களும்,
வடக்கே இருந்த மன்னர்களும், விஜயநகர பேரரசும், மராட்டிய வீரசிவாஜி வம்சத்தவர்களும்,
தடுத்து நிறுத்தியதால் தான் தமிழக திருக்கோவில்கள் ஓரளவேணும் காப்பாற்றப்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.
அதே சமயம் கோவில்கள் பாதிக்கப்படாமல் இருக்க கவனம் செலுத்திடவும் கோவிலின் புனித தன்மை காத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.