
சிஷ்யன் : மோக்ஷத்திற்குக் காரணம் என்ன
ஆச்சார்யாள் : ப்ரஹ்ம ஞானம்தான் மோக்ஷத்திற்குக் காரணம்
ஞானாதேவ து கைவல்யம்
(ஞானத்திலிருந்துதான் மோக்ஷம் பெறலாம்)
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி,
நான்ய:பந்தா வித்யதேsயனாய
(அவனைத் தெரிந்து கொண்டால்தான் ஒருவன் மரணம் அற்றவனாகிறான், வேறு வழியில்லை .) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன
சி : இப்படியென்றால் கர்மா ஞானத்திற்கு நேரடியான காரணமில்லை. என்றுதானே பொருளாகும்.?
ஆ : ஆம். சாஸ்திரங்கள் இவ்விஷயத்தில் தீர்மானத்துடன் இருக்கின்றன. உதாரணத்திற்கு சாஸ்திரங்களிலேயே,
ந கர்மணா… (கர்மாவினால் இல்லை …)
என்று மோஷத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள்.
சி : ஞானம் எப்போது உண்டாகும்?
ஆ : எப்போது மனம் சுத்தமாகி, ஆசையற்றதாக இருக்குமோ அப்போது அங்கு ஞானம் உண்டாகும்.
சி : இறைவனுக்கு அர்ப்பணித்துக் கர்மா செய்வதால் மனதிற்குத் தூய்மை ஏற்படாதா?
ஆ : ஆம், தூய்மை ஏற்படும்
சி : அப்படியென்றால் கர்மாவும் மோக்ஷத்திற்குக் காரணம் என்றுதானே கூறவேண்டும்? ஏனென்றால் கர்மாவை இறைவனுக்கு அர்ப்பணித்துச் செய்தால் மனம் புனிதமாகிறது. புனிதமான மனதில்தான் ஞானம் ஏற்படுகிறது. ஞானத்தினால்தான் மோக்ஷம் ஏற்படுகிறது. ஆதலால் கர்மா மோஷத்திற்குக் காரணம் என்றுதானே கூற வேண்டும்.?
ஆ : நீ தந்த காரணமே கர்மா மோக்ஷத்திற்கு நேரடியான காரணமில்லை என்று தெளிவுபடுத்துகிறது. பானைக்கு மண் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோல் பானையை எவன் செய்கிறானோ அவனும் ஒருவிதமான காரணம் என்றுதான் கூற வேண்டும். செய்தவனின் தந்தையும் காரணமா? ஏனெனில் செய்தவனின் தந்தை இல்லாமல் செய்தவன் வந்திருக்க முடியாது. அவனில்லாமல் பானை வந்திருக்க முடியாது.
சி : செய்பவனின் தந்தையைக் காரணமாகக் கூறமுடியாது. ஏனென்றால் செய்பவனின் தாத்தா, அவருக்கும் அப்பா என்று போய்க் கொண்டே யிருக்கும்.
ஆ : அதே யுக்தியை இங்கும் உபயோகப்படுத்தினால் கர்மா மோஷத்திற்குக் காரணமாகாது என்பதைத் தெரிந்து கொள்ளலாம், மேலும் எது கர்மாவினால் ஏற்படுகிறதோ அதற்கொரு முடிவும் உண்டு. ஏனென்றால் கர்மா ஒரு பலனைக் கொடுக்கத் தொடங்குகிறதென்றால் அங்கு ஒரு தொடங்கும் காலமிருக்கிறது. எது தொடங்குகிறதோ அதற்கு முடிவிருக்க வேண்டும். ஆதலால் மோஷம் கர்மாவினால் ஏற்பட்டால் அது நித்யமாக முடியாது ஆனால் மோக்ஷம் நித்யமென்றுதான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அது நிலை பெறாதது என்று ஒரு சாஸ்திரமும் கூறுவதில்லை, புக்திக்கும் அது பொருத்தமாக இல்லை. ஆதலால் ஞானம்தான் மோஷத்திற்கு நேரடியான காரணம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.