கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம்.
இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன?
கரன் என்ற அசுரன் மோட்சம் அடைவதற்காக சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். தவத்திற்கு மகிழ்ந்த சிவன் அவனிடம் 3 இலிங்கங்களைக் கொடுத்து அதை பிரதிஷ்டை செய்து பூஜை செய்யக் கூறினார்.
வலக்கையில் ஒரு இலிங்கமும், இடக்கையில் ஒரு இலிங்கமும், வாயில் ஒரு இலிங்கமுமாக அவன் எடுத்து சென்றான். அச்சமயத்தில் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், சிவனை நோக்கித் தவம் இருந்தார்.
இவரது தவத்தின் பலனாக கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி தினத்தில் சிவன் காட்சிதந்து,”வேண்டும் வரம் கேள்” என்றார். அதற்கு வியாக்ரபாதர்,”இதே நாளில் தங்களை இவ்விடத்தில் வந்து தரிசிப்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும்” என வேண்டினார். (இதுவே “வைக்கத்தஷ்டமி” விழாவாகக் கொண்டாடப்படுகிறது)
இதன் பின் கரன், தனது வலக்கையில் கொண்டு வந்த இலிங்கத்தை வியாக்ரபாதரிடம் கொடுக்க, அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அந்த இடம் தான் “வைக்கம்” என அழைக்கப்படுகிறது.
கரன் இடக்கையில் கொண்டு வந்த இலிங்கத்தை ஏற்றமானூரில் மேற்கு நோக்கியும், வாயில் கடித்து கொண்டு வந்த மூன்றாவது இலிங்கத்தைக் கடித்துருத்தியில் கிழக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்தான்.
இத்தலத்தில் வைக்கத்தஷ்டமி தினத்தன்று அன்னதானம் செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு “பிராதல்” என்று பெயர். இந்த அன்னதானத்தில் சிவனும் பார்வதியும் கலந்து கொள்வார்கள் என்பது ஐதீகம்.
பத்மாசுரனும், அவனது தம்பி தாரகாசுரனும், தேவர்களுக்கு மிகவும் கொடுமை செய்தனர். அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், நெற்றிக்கண்ணில் இருந்து, முருகனை உருவாக்கினார். முருகன், தாரகாசுரனை அழித்து, பத்மாசுரனை அடக்கி, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி விட்டார்.
நியாயத்துக்காகச் செய்த கொலையானாலும், பாவம் வந்து சேரும். அந்தப் பாவத்திற்கு பரிகாரம் தான், அன்னதானம். சிவன், தன் மகன் முருகனுக்கு ஏற்பட்ட இந்த பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார்.
இப்போதும், கார்த்திகை அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாட்கள் விழா கொண்டாடப் படுகிறது. இதை, ‘வைக்கத்தஷ்டமி’ என்பர். இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர்.
கோயிலின் தெற்கு பகுதியில் வன துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். இந்த சன்னதிக்கு மேற்கூரை இல்லை. வியாக்ரபாதர் இங்கு இலிங்க பிரதிஷ்டை செய்தபோது ஒரு அரக்கி இடையூறு செய்தாள். ஒரு கந்தர்வ கன்னி, சாபத்தால் இப்படி அரக்கியாக மாறியிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.
அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்க வியாக்ரபாதர் விநாயகரை வேண்ட, அவர் திரிசூலியை அனுப்பி அரக்கியை 3 துண்டாக்கும்படி கூறினார்.
அதன்படி செய்ததில் உடல்பகுதி விழுந்த இடத்தில் தான் வனதுர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவளை வழிபட்டால் நம்மைப் பிடித்த அரக்க குணங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
அரக்கியின் தலைப்பகுதி முத்தோடத்துகாவிலும், கால்பகுதி குடிச்சேலிலும் விழுந்துள்ளது. திரிசூலியை அனுப்பிய கணபதி, இத்தலத்தின் பலிபீடம் அருகே இருக்கிறார்.
மூலஸ்தானத்தில் 2 அடி உயர பீடத்தில் 4 அடி உயர இலிங்கம் அமைந்துள்ளது. அம்மனுக்கு சன்னதி கிடையாது. கோயில் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், பார்வதியையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
இந்த தானத்தை ஏற்க, சிவனே வருவதாக ஐதீகம் என்பதால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும்.
அதுபோல், சாப்பிட வருவோரும், சிவனோடு அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற, பரவச நிலையை அடைகின்றனர். மேலும், சிவன் பைரவராக உருவெடுத்து அந்தகாசுரன் என்ற அரக்கனை அழித்ததால், இங்கு, பைரவர் வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரண்யாட்சன் என்ற அசுரனின் மகன் அந்தகாசுரன். இவன், திருமால், பிரம்மா முதலான தெய்வங்களால் கூட, அழிவு வரக் கூடாது என்ற வரத்தை, சிவனிடம் பெற்றான். இந்த வரம் காரணமாக, தேவர்களை அடிமைப்படுத்தித் துன்புறுத்தி வந்தான்.
‘தேவர்களே… என்னை நீங்கள் அழிக்க முடியாதபடி வரம் பெற்றுள்ளேன். என் சேனைகளை நீங்கள் அழித்தால், அவர்கள், எங்கள் குலகுரு சுக்ராச்சாரியாரின் மந்திர சக்தியால், உயிர் பெற்று விடுவர். அதனால், தோல்வியை ஒப்புக் கொண்டு, பெண்களைப் போல உருவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த உத்தரவை மீறினால், உங்களைக் கொன்று விடுவேன்…’ என்று மிரட்டினான்.
இதனால், தேவர்கள் பயந்து, தங்கள் உருவத்தைப் பெண் உருவாக மாற்றிக் கொண்டனர்.
இந்நிலையிலிருந்து மீள, சிவனைச் சரணடைந்தனர் தேவர்கள். தான் கொடுத்த வரத்தை, தவறாகப் பயன்படுத்திய அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்க முடிவெடுத்த சிவன், தன்னில் இருந்து தோன்றிய பைரவரை அழைத்து, ‘பைரவா… நீ சென்று, அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்கி வா.’ என்றார்.
வந்திருப்பது சிவ அம்சம் பொருந்தியவர் என்பதை அறியாத அந்தகாசுரன், பைரவருடன் போரிட்டான். அழிந்து போன அசுரப்படைகளை, சுக்ராச்சாரியார், தன் மந்திர சக்தியால் காப்பாற்றி விட்டார். உடனே, சிவன், சுக்ராச்சாரியாரை விழுங்கி, வயிற்றில் அடக்கிக் கொண்டார்.
இதன் பின், பைரவர், அந்தகாசுரனை, ஒரு சூலத்தில் குத்தி, உயர்த்திப் பிடித்து, அவனது, ரத்தம் வழியும் வரை காத்திருந்தார். ஒடுங்கிப் போன அந்தகாசுரன், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினான். பைரவரும் அவனை விடுவித்தார். அவன் சிவநாமம் சொன்னவன் என்பதால், உயிர் பிழைத்தான்.
எதிரிகளால் தொல்லை இருந்தால், தேய்பிறை அஷ்டமி நாட்களில், பைரவருக்கு வடைமாலை, செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலையை, ராகு காலத்தில் சாத்தினால், எதிரிகளின் தொல்லை, நீங்கும் என்பர்.
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று, பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் கஷ்டங்களின் அளவு குறையும். பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும்.
வருடம் தோறும் கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி நாளில் காலை 4 முதல் 8 மணிவரை சிவனை வழிபடுவது சிறப்பு.
இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள லிங்கத்தின் மீது அன்றைய தினம் விடிந்ததும் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு சூரிய பூஜை செய்வதை காணலாம்.
இந்த மகாதேவர், எதைக்கேட்டாலும் கொடுக்கும் ஞானமூர்த்தியாக உள்ளார்.
திருவிழா:
கார்த்திகை அஷ்டமியை ஒட்டி வைக்கத்தஷ்டமி திருவிழா 13 நாள் கொண்டாடப்படுகிறது. மாசி அஷ்டமியும் சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.
கோயிலில் அம்மன் இல்லை என்றாலும், 12 வருடத்திற்கு ஒரு முறை 12 நாள் தொடர்ந்து தேவி வழிபாடு செய்யப்படுகிறது.
கோரிக்கைகள்:
இங்குள்ள வன துர்க்கையை வழிபட்டால் நம்மைப் பிடித்த அரக்க குணங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புத்தாடை அணிவித்து வழிபடுகின்றனர். அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் கோயில் நிர்வாகத்திடம் பணம் கட்டி முன்பதிவு செய்ய வேண்டும்.