spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: திருவேங்கடம்!

திருப்புகழ் கதைகள்: திருவேங்கடம்!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 337
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கோங்கிள நீரிளக – திருவேங்கடம்

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி நாற்பத்தி ஏழாவது திருப்புகழான “கோங்கிள நீரிளக” எனத் தொடங்கும் திருப்புகழ் திருவேங்கடம் தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருவேங்கட முருகா, மாதர் இன்பம் விரும்பி, அவநெறியில் செல்லாமல் காத்து அருள்வாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்

     வாங்கிய வேல்விழியும் …… இருள்கூருங்

கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்

     மாந்தளிர் போல்வடிவும் …… மிகநாடிப்

பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு

     தீங்குட னேயுழலும் …… உயிர்வாழ்வு

பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்

     வீழ்ந்தலை யாமலருள் …… புரிவாயே

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்

     வேங்கையு மாய்மறமி …… னுடன்வாழ்வாய்

பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக

     பாண்டிய னீறணிய …… மொழிவோனே

வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்

     வேங்கட மாமலையி …… லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

     வேண்டவெ றாதுதவு …… பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – தோழியும் வேடர்களும் திகைக்குமாறு, வேங்கை மரமாகி நின்று, தவமுனிவராக வந்து, வள்ளிபிராட்டியை மணந்து வாழ்பவரே; அர்ச்சுனப் பெருமானுடைய தேரைச் செலுத்திய நெடியவராம் திருமாலின் திருமருகரே; கூன் பாண்டியன் திறுநீறு தரிக்குமாறு “மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகத்தைப் பாடியருளியவரே; புலியும், யானையும், வேங்கை மரமும், மானும் வாழ்ந்து வளர்கின்ற திருவேங்கட மலையில் உறைபவரே; அடியார்கள் வேண்டிய சுகங்களை அவர்கள் விரும்பிய போதெல்லாம் வெறுக்காமல் வழங்கியருளும் பெருமிதம் உடையவரே;

     பெண்களின் சேர்க்கையை விட முடியாதவனாகி, தீமையுடனே திரிகின்ற உயிர் வாழ்க்கையைக் கொண்டு, அடியேன் அத் தீ நெறியிலேயே நின்று இறந்து, இவ்வண்ணமே நரகில் விழுந்து அலையாத வண்ணம் அருள் புரிவீராக – என்பதாகும்.

     இந்தப் பாடலில் வள்ளிபிராட்டியைக் காண வேடரய், முதியவராய் வந்த முருகன் வேங்கை மரமாய் நின்ற கதை, அர்ச்சுனனுக்கு கண்ணபிரான் தேரோட்டியாய், பார்த்தசாரதியாய் வந்த கதை, கூன் பாண்டியனுக்கு திருநீறு பூசி அவனது வெக்கை நோயை போக்கிய முருகப்பெருமானின் அம்சமான திருஞானசம்பந்தரின் கதையும் கூறப்படுகிறது.

     முருகன் வேங்கை மரமாய் நின்ற கதையின் அடிப்படையில் அமைந்த திருத்தலம் வள்ளிமலை திருமண வரமருள்வார் திருக்குமரன் கோயிலாகும். இந்த இடத்தை அடைய நேரடியாக இரயில் வசதி இல்லை. சென்னையிலிருந்து காட்பாடிவரை இரயிலில் சென்று அங்கிருந்து சாலை வழியே செல்லலாம். அல்லது சென்னையிலிருந்து சாலை வழியே செல்லலாம். பேருந்தில் சென்றால், சென்னையிலிருந்து வேலூர் வரை சென்று அங்கிருந்து வேறு பேருந்து பிடிக்கவேண்டும். சென்னையிலிருந்து 136 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

     ஞான சக்தியாக விளங்கும் முருகப் பெருமான், திருச்செந்தூரில், சூரனை வதம் செய்ததற்கு பரிசாக இந்திரன் தனது மகள் தெய்வானையை முருகப் பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணம் திருப்பரங்குன்றத்தில் இனிதே நடைபெற்றது. அதன் பின்னர், வள்ளி மீது காதல் புரிந்து, குறவர்களோடு போர் புரிந்து வென்று, வள்ளியை குறவர்கள் சம்மதத்தோடு மணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நடந்த இடம் தான் வள்ளி மலையாகும். வள்ளிமலை, வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து 23 கி.மீ தூரத்திலும், ஆற்காட்டிலிருந்து 27 கி.மீ தூரத்திலும் இம்மலை அமைந்துள்ளது.

     வள்ளி மலையில், மகாலட்சுமியின் அவதாரமான ஒரு மான் சுற்றிக் கொண்டிருந்தது. அதன் வயிற்றில், குழந்தையாக அவதரித்த வள்ளி, மரவள்ளிக் காட்டிற்குள் பிறந்தாள். வள்ளிமலையை ஆண்டு கொண்டிருந்த வேடரினத் தலைவரான நம்பிராஜன், அவளைக் கண்டெடுத்து, வள்ளி எனப் பெயரிட்டு தன் மகளாக வளர்த்து வந்தார்.

வள்ளியும் கன்னிப்பருவத்தினை அடைந்து விட்ட நிலையில் மலையில் தனது தோழிகளுடன் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். நாரதர் கலகத்தால், வள்ளியை மணம் முடிக்க முருகனுக்கு விருப்பம் ஏற்பட்டது. அதனால் வயதான வேடர் வடிவம் கொண்டு முருகன், திருத்தணிகை மலையிலிருந்து, வள்ளி மலைக்கு நடந்தே வந்து சேர்ந்தார். இதனால் தான் முருகன் கோயில்களுக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.

     இத்திருக்கோயில் பற்றிய மேலும் சில விவரங்களை நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe