
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும்
தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாழ்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

விளக்கம்
பதினைந்தாம் பாசுரத்தில் சோம்பல் அறுத்து, கண்ணனைப் பாடுவதற்காக விரைந்து எழுந்துவா என்று தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில், கண்ணனின் திருமாளிகை வாயில் காப்பவனிடம் கதவைத் திறந்துவிடுமாறு வேண்டுகிறார். நாயகனாக, எங்களுக்கு சுவாமியாகத் திகழ்கின்ற நந்தகோபருடைய திருமாளிகையைக் காப்பவனே!
கொடிகள் தோரணங்கள் அலங்கரிக்கப் பெற்ற வாசலைக் காக்கின்றவனே! திருமாளிகையில் காப்பாகத் திகழும் அழகிய மணிக்கதவின் தாழ்ப்பாளை நீ திறக்க வேண்டும். இளமையுடன் திகழும் இடைப் பெண்களாகிய எங்களுக்கு ஒரு விருப்பம் உண்டு. ஆச்சரியப்படத் தக்க செயல்களைச் செய்யும் மாயன் அந்தக் கண்ணன். நீலமணியைப் போன்ற நிறத்தை உடைய திருமேனியைக் கொண்டவன் கண்ணன்.
நாங்கள் விரும்பும் பறையை, எங்களின் ஆசை வேண்டுகோளை நிறைவேற்றித் தருவதாக நேற்றே எங்களுக்கு வாக்களித்தான் கண்ணன். எனவே அந்தப் பெருமான் துயில் கலைந்து எழ, பாடி எழுப்புவதற்காக நாங்கள் வந்தோம். எங்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டு அடியோங்கள் வந்திருக்கிறோம். ஸ்வாமி! முதல் முதலிலே உங்களது திருவாயினால் எங்கள் வேண்டுகோளை மறுக்காது செய்ய வேண்டும். கண்ணபிரானின் மீது பரிவு கொண்டிருக்கும் நிலையை உடைய கதவை நீங்கள் நீக்கி அருள வேண்டும்.. என்று கேட்கிறார்கள் இந்தப் பெண்கள்.
விளக்கவுரை: செங்கோட்டை ஸ்ரீராம்