
பத்தனம்திட்டா: வியாழக்கிழமை அதிகாலையில் என்ஐஏ சோதனை நடத்திய இடங்களில், என்.ஐ.ஏ., தேடிச் சென்ற பிஎஃப்ஐ தலைவர்கள் இல்லாதது மாநிலத்தில் காவல்துறை மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. இந்த ரெய்டு குறித்த தகவல்களை யாரோ PFI தலைவர்களுக்கு கசியவிட்டதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிரடி சோதனையின் போது, சோதனை குறித்த தகவல்கள் முன்கூட்டியே மாநில காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்படவில்லை; அப்போது மத்திய அரசின் கீழ் உள்ள CRPF உதவியுடன் NIA அந்த சோதனையை நடத்தியது. எனினும், இம்முறை உள்ளூர் போலீஸாருக்கு சோதனை நடத்தப் படும் விஷயத்தைத் தெரியப்படுத்தியதன் பின்னரே சோதனை நடத்தப்பட்டது.
வியாழன் அன்று நடத்தப் பட்ட சோதனையின் போது, பத்தனம்திட்ட மாவட்டத்தில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது, இரண்டு தலைவர்கள் முந்தைய நாளிலிருந்து ஊருக்கு வெளியே சென்றுள்ளனர், அதே நேரத்தில் மற்றொருவர் சோதனைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடியிருக்கிறார். இது என்.ஐ.ஏ.,க்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து வெளியான தகவல்களின்படி, PFI தலைவர்களுக்கு சோதனை குறித்த ரகசியத் தகவல் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து NIA விசாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
முன்னதாக அக்டோபரில், கேரள காவல்துறை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், PFI உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 873 போலீஸ் அதிகாரிகளின் விவரங்களை NIA டிஜிபி.,யிடம் ஒப்படைத்ததாகக் கூறப்பட்ட அறிக்கைகளை மறுத்து தகவல் வெளியிடப்பட்டது. மேலும் பிஎஃப்ஐ-போலீஸார் இடையிலான உறவு குறித்த என்.ஐ.ஏ.,வின் இந்த அறிக்கைகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று, காவல்துறை வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
எனினும், செப்டம்பர் 23 அன்று மாநிலம் தழுவிய கடையடைப்பின் போது PFI க்கு உதவியதாக எர்ணாகுளத்தில் ஒரு போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
செப்டம்பரில், நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதாகக் கூறி 15 மாநிலங்களில் PFI இன் உயர்மட்டத் தலைவர்கள் உட்பட பல நிர்வாகிகளை NIA கைது செய்தது குறிப்பிடத் தக்கது.