
ஐ.பி.எல் 2023 – 21ஆம் நாள் – 20.04.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐ.பி.எல் 2023 தொடரின் 21ஆம் நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் மொஹாலியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் இலவன் அணிக்கும் இடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் டெல்லி அருன் ஜேட்லி மைதானத்தில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடந்தது.
பெங்களூரு vs பஞ்சாப்
பெங்களூரு அணி (174/4, விராட் கோலி 59, ட்யூ ப்லேசிஸ் 84, ஹர்ப்ரீத் ப்ரார் 2/31) பஞ்சாப் அணியை (18.2 ஓவரில் 150, ப்ரப்சிம்ரன் சிங் 46, ஜித்தேஷ் ஷர்மா 41, முகம்மது சிராஜ் 4/21, டி சில்வா 2/39) 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 59 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 56 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடினார். அவர் 46 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி போராடி 41 ரன்னில் அவுட்டானார். இறுதியில், பஞ்சாப் அணி 150 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக முகம்மது சிராஜ் அறிவிக்கப்பட்டார்.
கொல்கொத்தா vs டெல்லி
கொல்கொத்தா அணியை (127, ஜேசன் ராய் 43, ரசல் 38, மந்தீப் சிங் 12, இஷாந்த் ஷர்மா, நொர்ஜே, அக்சர் படெல், குதீப் யாதவ் தலா 2 விக்கட்) டெல்லி அணி (19.2 ஓவரில் 128/6, வார்னர் 57, மனீஷ் பாண்டே 21, அக்சர் படேல் 19, ப்ருத்வி ஷா 13, வருண், அங்குல்ராய், ராணா தலா 2 விக்கட்) 4 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற டெல்லி அணி கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணிக்க, அதன்படி கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். 2 ஓவர்கள் கூட இந்த இணை தாக்குப்பிடிக்க முடியவில்லை. 4 ரன்கள் எடுத்திருந்த லிட்டன் தாஸ் விக்கெட்டை எடுத்து கேகேஆரின் சரிவை தொடங்கிவைத்தார் முகேஷ் குமார். வெங்கேடஷ் ஐயர் விக்கெட்டை நார்ட்ஜே வீழ்த்தினார். நிதீஷ் ராணாவை இஷாந்த் சர்மா கவனித்துக்கொள்ள, மந்தீப் சிங் விக்கெட்டை எடுத்தார் அக்சர் படேல்.
இதனால் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது கொல்கொத்தா அணி. தொடர்ந்து ரிங்கு சிங், சுனில் நரைன் மற்றும் அங்குல் ராய் போன்றோரை சொற்ப ரன்களில் ஆட்டமிக்க செய்து டெல்லி பவுலர்கள் கெத்துகாட்டினர். கொல்கத்தா தரப்பில் ஜேசன் ராய் 43 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, 16 ஓவர்களில் எல்லாம் கேகேஆர் 9 விக்கெட்டை இழந்திருந்தது.
எனினும் கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே ரசல் அந்த அணிக்காக போராடினார். ஆனால் அவரையும் பெரிய ஷாட்கள் ஆடவிடாமல் டெல்லி பவுலர்கள் சோதித்தனர். இறுதி ஓவரில் மட்டும் தொடர்ந்து மூன்று சிக்ஸ் அடித்து அதிரடி காண்பித்தார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா அணி.
அதன் பின்னர் ஆடவந்த டெல்லி அணி எளிதில் அடையக்கூடிய இலக்கை அடைய தடுமாறியது. ப்ருத்வி ஷா இன்றும் வழக்கம்போல சரியாக ஆடவில்லை. மைக்கேல் மார்ஷ் (2 ரன்), பில்சால்ட் (5 ரன்), ஹகீம் கான் (ரன் எதுவும் எடுக்கவில்லை) ஆகியோ சரியாக விளையாடததால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. அக்சர் படேல் நிதானமாக ஆடி வெற்றியைத் தேடித்தந்தார். ஆறு ஆட்டங்களில் டெல்லி அணி முதல் முறையாக வெற்றிபெற்று 2 புள்ளிகளைப் பெற்றது. ஆட்டநாயகனாக இஷாந்த் ஷர்மா அறிவிக்கப்பட்டார்.