சென்னை:
சென்னைக்கு வரும் தென்மாவட்ட பஸ்கள் பெரும்பாலும் பெருங்களத்தூரை அடுத்து சென்னை கோயம்பேட்டுக்குச் செல்லும்போது, காலி பேருந்துகளாகவோ, குறைவான பயணிகளுடனோதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற விதத்தில் சுமார் போக வர என்று ஒரு பேருந்துக்கு 80 கி.மீ.க்கும் அதிகமாக டீசல் செலவு ஏற்படுகிறது. மேலும், கோயம்பேட்டில் நெரிசல் ஏற்பட்டு, விழாக்காலங்கள் என்றால் மணிக்கணக்கில் காத்திருந்து வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு புறநகர் பேருந்து நிலையத்தை வண்டலூருக்கு மாற்ற முன்னர் முடிவு செய்யப்பட்டது. அங்கே நிலம் கையகப் படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நந்திவரம் நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே பெருநகர வளர்ச்சிக்குழுமத்துக்கு தர ஒப்புதல் தெரிவித்து விட்டது. மேலும், வீட்டு வசதி நிலங்களையும் சேர்த்து தற்போது பேருந்து நிலத்துக்கான பணிகள் வேகம் பெற்றுள்ளன.
இந்நிலையில், வண்டலூரில் அறிவிக்கப்பட்ட புறநகர் பஸ் நிலைய திட்டம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக சட்டசபையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா 30-4-2013 அன்று 110-விதியின் கீழ் அறிவித்த தமிழ்நாட்டில் தென்பகுதி நோக்கி செல்லும் பஸ்களுக்காக வண்டலூரில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஜி.எஸ்.டி. மற்றும் வெளிவட்டச் சாலையை ஒட்டியுள்ள இடம் கண்டறியப்பட்டு கையகப்படுத்த நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், மத்திய அரசால் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களால் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு உரிமை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவால் 15-7-2014 அன்று 110-விதியின் கீழ் கோயம்பேட்டில் அரசு அலுவலகங்களுக்கான கட்டிடம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று, ரூ.95 கோடி மதிப்பீட்டில் பிப்ரவரி, 2016-ல் பணி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 24 மாதங்களில் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகர மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், பயண நேரத்தைக் குறைக்கவும் மற்றும் மேம்பட்ட போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவும், சென்னைப் பெருநகர பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் தெற்கு பகுதி மற்றும் வெளிவட்டச் சாலையை ஒட்டிய 53 கிராமங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பின்னல் வலைச் சாலைகள் திட்டத்தைத் தயாரித்து வருகிறது.
கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பஸ் முனையத்தின் போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கும் நோக்கில், மாதவரம் பஸ் மற்றும் சரக்குந்து வளாகத்தில் உள்ள 8 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு துணைப் புறநகர் பஸ் முனையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் 24 மாதங்களில் நிறைவேற்றப்படும்.
பொதுமக்கள் தங்கள் பயணத்தைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும், குறைந்த நேரத்தில் மேற்கொள்ளும் வகையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் அனைத்து போக்குவரத்தையும் இணைத்து, ஒன்றில் இருந்து மற்றவைக்கு எளிதாக மாற மத்திய சதுக்கம் என்ற ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் ரூ.389.42 கோடியில் செயல்படுத்தவுள்ள இந்த மத்திய சதுக்க திட்டத்திற்கு குழுமத்தின் வளர்ச்சி நிதியில் இருந்து நிதி உதவி அளிப்பதற்கான நிர்வாக ஆணை வெளியிடப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் சென்னைப் பெருநகரின் ஒரு புதிய அடையாளமாக அமையும்.
– என்று அவர் கூறினார்.



