
திருப்புகழில் காணப்படும் கதைகள் – பகுதி 5
முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன் (தொடர்ச்சி)
– முனைவர்.கு.வை.பாலசுப்பிரமணியன் –
மகாபாரத நூலில் வரும் செவி வழிச் செய்தியைப் பார்ப்போம். அதில் வரும் தகவல்படி விநாயகருக்கு 8,800 சுலோகங்களின் பொருள் முதலில் புரியவில்லை; மிகக் கடின முயற்சியில் தான் விநாயகருக்கு அவற்றின் பொருள் புரிந்துள்ளது.
இது எப்படி விநாயகருக்குப் பொருந்தும்? அதிலும் இன்னொன்றும் கவனத்திற்கு உரியது; ஏதோ ஒன்றை எழுதியதற்காகவே அதிரா அடிகள் விநாயகரை வணங்குகிறேன் என்று சொல்லுகிறார். அதை எழுதியது கூட சிவபெருமான் பொருட்டு அவர் எழுதினார் என்று பாடல் வரி வருகிறது.
“பிறந்து இவ்வுலகின் பெருமூதாதை உரந்தரு சிரம்” என்ற பாடற்பகுதிக்குப் பிரமன் சிரம் என்று உரை கூறப்பட்டு, அவனது சிரத்தை அரிந்தவனாகிய சிவபெருமான் என்று பொருள் பட ‘உரம் தரு சிரம் அரிந்தவற்கே’ என்று பாடல் வரி நீளுகிறது.
சிவபெருமான் மகாபாரதத்தை எழுது என்று விநாயகருக்குக் கட்டளையிட்டதாக சிவபுராணங்களிலும் இல்லை, விநாயக புராணத்திலும் இல்லை, ஏன் மகாபாரதத்திலேயே இல்லை. எனவே மகாபாரதத்தை எழுதியதற்காக விநாயகரை வணங்குகிறேன் என்று அதிரா அடிகள் பாடி இருக்கவே இயலாது; அப்படி உரை எழுதி இருப்பது மிகவும் தவறு என்பது திண்ணம்.
அது மட்டுமல்லாமல் வியாசர் எழுதிய மகாபாரதம் ஒரு சில மன்னர்களின் வரலாறு; அதைப் பரம்பொருள் எழுத வேண்டியதில்லை. அந்த வரலாறும் வடமொழியில் வியாசர் சொன்னது. ஆனால் விநாயகர் எழுதியது வடமொழியில் அல்ல என்பதும் தமிழில் தான் எழுதினார் என்றும் அருணகிரிநாதர் “முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வன்” என்று பாடி இருப்பதிலிருந்து உறுதி ஆகிறது.
எனவே ஏதோ ஒரு முத்தமிழ் அடைவினை விநாயகர் எழுதியதற்காகவே, அதை எண்ணியே, அதிரா அடிகள் அவரை வணங்குகிறேன் என்று கூறினார் என்று கொள்வதே அறிவுக்குப் பொருந்திய ஒன்று. மகாபாரதம் முத்தமிழ் அடைவு என்று எண்ணிப் பார்க்கவும் இயலாது. எனவே விநாயகர் மேரு மலையில் முத்தமிழ் அடைவு ஒன்றினை எழுதினார் என்றால்அந்த முத்தமிழ் அடைவு என்ன?

‘முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய’ என்று தான் திருப்புகழில் வருகிறது. இதில் எந்த இடத்திலும் யாரோ சொல்லச் சொல்ல விநாயகர் படி எடுத்தார் என்று வரவில்லை. ஆனால் வாரியார் சுவாமிகள் அகத்தியர் சொல்ல தமிழ் இலக்கணங்களை விநாயகர் எழுதினார் என உரைத்துள்ளார்.
அகத்தியருக்குத் தமிழ் இலக்கணங்களைக் கற்றுத் தந்தது முருகப்பெருமான் என்று பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. எனவே முருகனிடம் அகத்தியர் தமிழிலக்கணங்களைக் கற்றுக் கொண்டு வந்து அதை அவர் விநாயகருக்குச் சொல்ல விநாயகர் படி எடுத்தார் என்பது அறிவுக்கேலாதது.
அப்படியானால் விநாயகர் எழுதிய அந்த முத்தமிழ் அடைவு தான் எது?விநாயகர், யோக நெறியில் முதலாவதாக எண்ணப்படுபவர். மூலாதார கணபதி என்று பல தலங்களில் விநாயகருக்குப் பெயர் உண்டு. யோக நெறியில் சுழிமுனை விழிப்புற்று மூலாதாரம் விழிப்புறும். அங்கே உயிரை ஆட்கொண்டு மேலேற்றுவது கணபதி என்பர்.
எனவே யோகிகள் மூலாதாரக் கடவுள் கணபதி என்று ஒருமித்துக் கூறுகின்றனர். ஆக, யோக நுட்பங்களை எல்லாம் முதன்முதலில் அறிவிக்கத் தொடங்கி அதன் முடிவையும் உடனழைத்துச் சென்று அறிவிப்பார் விநாயகர்.
ஆக, விநாயகருடன் தொடர்புடன் கூடிய முத்தமிழ் அடைவு யோகமே. அதனையே தமிழர்களும், அவர்கள் மூலம் இந்த உலகமும் அறிய அறிந்து பயனுற, விநாயகர் மேருவில் எழுதி வைத்தார் என்பதே இங்கு ‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே’ என்று அருணகிரியாராகிய சிவயோகியால் எடுத்துரைக்கப்பட்டது என்பதே நேரிதான பொருள்.
அதாவது முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய என்பதற்கு தமிழர்களின் நெறியான யோக நெறியை விநாயகர் முதலாவதாக மேருமலையில் எழுதினார் என்று பொருள் கொள்வதே மிகச் சிறப்பானதாகும்.