December 4, 2021, 10:06 am
More

  திருப்புகழ் கதைகள்: உக்கிர குமாரரின் சரித்திரம்!

  இந்த உக்கிர குமாரர் வரலாற்றினைத் தவிர பாற்கடல் கடைந்த கதையும், திரிபுரம் எரித்த வரலாறும் இத்திருப்புகழில் கூறப்படுகிறது.

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 35
  கனகம் திரள்கின்ற (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  உக்கிர குமாரரின் வரலாறு

  அறுபத்து நான்கு சக்திபீடங்களில் சிறந்ததும் துவாதசாந்தத் திருத்தலமும் ஆகிய மதுரையம்பதியில் சோமசுந்தரக்கடவுள் திருவருளால் தடாதகைப் பிராட்டியாரது திருவுதரத்தில் புகாது, அயோநிஜராக முருகவேளது திருவருட்சத்தியுடன் சேர்ந்து, முருக சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்ய மூர்த்திகளில் ஒருவர் உக்கிரகுமார பாண்டியராகத் தோன்றி, அறனெறி பரப்பி அரசாண்டு கொண்டிருந்தார்.

  அக்காலத்தில் கோள்கள் திரிந்ததால் மழை பொழியாதாயிற்று. அதனால் நதிகள், குளங்கள், கிணறுகள், முதலிய நீர் நிலகள் வற்றி, விளைபொருள் குன்றி, கொடிய பஞ்சம் ஏற்பட்டது. மாந்தர்கள் பசியால் வாடி வருந்தினார்கள்.

  உக்கிரகுமார பாண்டியர் “மழை வளம் வறந்து வற்கடம் தோன்ற யாது காரணம்” என்று வினவ, கால அளவுகளை நன்கு உணர்ந்த புலவர்கள் சோதிட நூலை ஆராய்ந்து “மன்னர் பெருமானே! அழியாத பிரமகற்பம் மட்டும் ஏனைய கிரகங்கள் கதிரவனை அடைந்து பார்த்து நிற்றலால் ஓராண்டு வரை வானத்தினின்றும் மழை பொழியாது” என்றனர்கள்.

  அதுகேட்ட உக்கிரகுமாரர் குழந்தையின் நோயைக் கண்டு வருந்தும் நல்ல தாயைப்போல குடிகளிடத்து மனமிரங்கி, அத் துன்பத்தை நீக்கும் உபாயத்தை உன்னி, ஆலயம் சென்று கங்காதரனாகிய பிறைசூடியாகிய சோமசுந்தரக் கடவுளைக் கண்டு பணிந்து, “தேவதேவா, மகாதேவா தென்னாடுடைய சிவனே, எந்நாட்டவர்க்கும் இறைவா, மழையின்றி மாந்தர்கள் பசியால் வாடி மெலிகின்றனர். தேவரீர் திருவருள் புரியவேண்டும்” என்று குறையிரந்தனர்.

  முறையே மும்முறை வலம் வந்து வணங்கி தம் இருக்கை புக்கு கங்குல் வந்ததும் துயில் புரிவாராயினர். வெள்ளியம்பலத்தில் கால் மாறியாடிய வித்தகர் உக்கிரப்பெருவழுதியார் கனவில் வந்து தோன்றி, “சீருடைச் செல்வ, இக்காலத்து மழை பெய்தல் அரிது. அதனைக் குறித்து வருந்தாதே. மலைகட்கு அரசாயிருக்கிற மேருமலையின் கண் ஒரு குகையில் அளவு கடந்த ஒரு வைப்புநிதி உள்ளது. ஆங்கு நீ சென்று அம்மலையின் செருக்கழிய செண்டால் எறிந்து, உனது ஆணைவழிப்படுத்தி, சேமநிதியில் வேண்டியவற்றை எடுத்து அந்த அறையை மூடி நின் அடையளமிட்டு மீளுதி” என்று அருளிச் செய்தனர்.

  உக்கிரகுமாரர் கண்விழித்தெழுந்து மகிழ்ந்து காலைக் கடனாற்றி, அங்கையற்கண் அம்மையுடன் எழுந்தருளியுள்ள ஆலவாயானை வழிபட்டார். பின்னர், நால்வகைப் படைகள் சூழ சங்குகள் முழங்க, ஆலவட்டங்கள் வீச, வந்தியர்கள் பாட, இரதத்தின் மீதூர்ந்து, வடதிசையை நோக்கிச் செல்வாராயினர். இமவரையைக் கடந்து பொன்மயமாய்த் திகழும் மகாமேருகிரியின் சாரலை அடைந்து அம்மேருமலையை நோக்கி “எந்தையாகிய சிவபெருமானது அரிய மலையே, உலகிற்கு ஓர் பற்றுக்கோடே, கதிரும் மதியும் உடுக்களும் சூழ்ந்து வலம்வரும் தெய்வத வரையே! தேவராலயமே!’ என்று அழைத்தனர்.

  வழுதியர்கோன் அழைத்தபோது மேருமலையரசன் வெளிப்பட்டுவரத் தாமதித்ததால், இந்திரனை வென்ற உக்கிர குமாரர் சினந்து மேருமலையின் தருக்கு அகலுமாறு வானளாவிய அம் மகாமேருவின் சிகரத்தை செண்டாயுதத்தால் ஓங்கி அடித்தனர். மேருமலை அவ்வடி பட்டவுடனே பொன்னால் செய்த பந்துபோல் துடித்தது. எக்காலத்தும் அசையாத அம்மலை அசைந்து நடுங்கியது. சிகரங்கள் சிதறின. இரத்தினங்களைச் சொரிந்தது.

  மேருமலையின் அதிதேவதை உடனே அட்டகுல பருவதங்கள் போன்ற எட்டுப் புயங்களையும் நான்கு சிகரங்களையும் கொண்டு நாணத்துடன் வெளிப்பட்டு உக்கிர குமார பாண்டியரை வணங்கியது. பாண்டிய நாட்டிறைவன் சினந்தணிந்து “இதுகாறும் நின் வரவு தாமதித்த காரணம் யாது?” என்று வினவியது!

  மேருமலையின் அதிதேவதை “ஐயனே! அங்கயற்கண்ணி அம்மையுடன் எழுந்தருளியுள்ள சோமசுந்தரேசுவரரை இவ்வடிவத்துடன் ஒவ்வொருநாளும் சென்று வழிபடும் நியமம் பூண்டிருந்தேன். இன்று அறிவிலியாகிய அடியேன் ஒரு மடவரலைக் கண்டு (ஒரு பேதைப் பெண்ணைக் கண்டு) மனமருண்டு, காமத்தில் மூழ்கி ஆலவாய்க் கடவுளை வழிபடும் நியமத்தை மறந்து வாளாயிருந்தேன். எம்பெருமானது திருவடிக்குப் பிழைசெய்த இத்தீங்கின் காரணத்தால் தேவரீரது செண்டாயுதத்தால் அடியும் பட்டேன். புனிதனாயினேன். சிவ வழிபாட்டினின்றுந் தவறிய எனது அஞ்ஞானத்தை நீக்கி உதவி செய்தனை. அண்ணலே! இதைக் காட்டிலும் சிறந்த உதவி யாது உளது? இதற்குக் கைம்மாறு அடியேன் யாது செய்ய வல்லேன். பற்றலர் பணியும் கொற்றவ? இங்கு வந்த காரணம் என்கொல்? திருவாய் மலர்ந்து அருளவேண்டும்” என்று வினவியது.

  உக்கிர குமாரர் “மலை அரசனே பொன்னை விரும்பி நின்பால் வந்தனன்” என்றனர். மலையரசன் “ஐயனே! பொன் போன்ற தளிரையுடைய மாமர நிழலில் ஓர் அறையில் ஒரு பாறையில் மூடப்பட்டுக் கிடக்கிறது. அச்சேம நிதியில் நினக்கு வேண்டியவற்றைக் கொண்டு நின் குடிமக்களுக்கு ஈந்து வறுமைப் பிணியை மாற்றுதி” என்று கூற, வருணனை வென்ற மாபெருந் தலைவராகிய உக்கிரப் பெருவழுதி அவ்வறைக்குள் சென்று, மூடி இருந்த பாறையை எடுத்து, அளவற்ற பொன்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் அப்பாறையை மூடி மிகுந்த பொருளையுந் தம்முடையதாகத் தமது கயல் முத்திரையை அப்பாறை மேல் எழுதி, ஆங்கிருந்து புறப்பட்டு, மதுரையம்பதியை யணுகி, தேரை விட்டிழிந்து முக்கட் பரமனுடைய திருவாலயம் புகுந்து மூவர் முதல்வனை மும்முறை வணங்கி அந்நிதிகளை யெல்லாம் மாந்தர்களுக்கீந்து பசி நோயை நீக்கி இன்பந் தந்து இனிது அரசாண்டார்.

  இந்த உக்கிர குமாரர் வரலாற்றினைத் தவிர பாற்கடல் கடைந்த கதையும், திரிபுரம் எரித்த வரலாறும் இத்திருப்புகழில் கூறப்படுகிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,784FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-