January 26, 2025, 3:23 AM
22.9 C
Chennai

திருப்புகழ் கதைகள்: புமி அதனில் – திருக் கயிலை!

திருப்புகழ்க் கதைகள் பகுதி 330
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

புமி அதனில் – திருக் கயிலை

அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி நாற்பத்தி மூன்றாவது திருப்புகழான “புமி அதனில்” எனத் தொடங்கும் திருப்புகழ் திருக்கயிலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “திருக் கயிலை முருகா, அடியேனுக்கு அமுதமயமான பாடல்களை உம் மீது பாடும் அருளைப் புரிவாயாக”என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

புமியதனிற் ……ப்ரபுவான
புகலியில்வித் …… தகர்போல
அமிர்தகவித் …… தொடைபாட
அடிமைதனக் …… கருள்வாயே
சமரிலெதிர்த் …… தசுர்மாளத்
தனியயில்விட் …… டருள்வோனே
நமசிவயப் …… பொருளானே
ரசதகிரிப் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – போர்த்தலத்தில் எதிர்த்து வந்த சூரபத்மன் மாயுமாறு இணையில்லாத ஞானசக்தியை விடுத்தருளிய விமலரே; “நமச்சிவாய” என்ற பஞ்சாட்சரத்தின் உட்பொருளாக விளங்குபவரே; வெள்ளியங்கிரியில் எம்மை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே; பூமண்டலத்தின் தனிப் பெருந்தலைவராம், உலகிலுள்ள உயிர்கட்கெல்லாம் புகலிடமாகிய சீர்காழிப் பதியில் திரு அவதாரம் செய்த திருஞான சம்பந்தமூர்த்தியைப்போல் இறப்பை நீக்கும் அமிர்தம் போன்ற தேவார அருட்பாக்களைப் பாடுமாறு அடிமையேனுக்குத் திருவருள் புரிவீர்.

இத்திருப்புகழின் முதல் பத்தியான புமியதனிற் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல என்ற வரியில் திருஞானசம்பந்த சுவாமிகளைப் பற்றி அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். இங்கே பூமி என்பது புமி எனக் குறுகி நின்றது. இப்பூவுலகிற்கு திருஞானசம்பந்த சுவாமிகளே தலைவர். அவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லை. பெருந்தலைவர் என்பதற்கு அடையாளம் சிவிகை, சின்னம், விருது ஆகியவை. ஏனைய தலைவர்கள் இவைகளைத் தாமே தயார் செய்து கொள்வார்கள். நம் சம்பந்தத் தலைவருக்குச் சிவபெருமானே சிவிகை, சின்னம், முதலியவைகளைத் தந்தருளினார். அந்த வரலாற்றை இவ்வரிகள் சுட்டுகின்றன.

ALSO READ:  உலக சாம்பியன் தொம்மராஜு குகேஷ்

பாலறாவாயர் என அழைக்கப்படுகின்ற திருஞானசம்பந்த நாயனார் ஒருமுறை திருப்பெண்ணாகடம் திருத்தூங்கானை மாடம் என்னும் திருத்தலத்தைத் தொழுது, திருவரத்துறை என்னும் அரும்பதியை வணங்க விரும்பிச் செல்லும்போது, இதற்கு முன்பு எல்லாம் தமது திருத்தாதையரது தோளின் மேல் அமர்ந்தருளும் நியமம் ஒழிந்து, தமது பாதபங்கயம் சிவந்து வருந்த, மெல்ல மெல்ல நடந்து சென்று மாறன்பாடி என்னுந் திருத்தலத்தை அடையும்போது அப்பரம குருமூர்த்தியின் திருவடித் தளர்வினைக் கண்டு வருந்தினான் போல் சூரியன் மேற்கடலில் வீழ்ந்தனன்.

திருப்பெண்ணாகடம் இப்போது பெண்ணாகடம் என அறியப்படுகிறது. இங்கே அமைந்துள்ள பிரளயகாலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும் கலிக்கம்ப நாயனார் பேறு பெற்றதும் இத்தலத்தில் எனப்படுகிறது. தேவ கன்னியரும், காமதேனுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலமென்பதும் அப்பர் சூல, இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலமென்பதும் தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். தேவகன்னியரும்(பெண்)+காமதேனுப் பசுவும்(ஆ)+வெள்ளை யானையும்(கடம்) வழிபட்டதால் இத்தலத்திற்கு பெண்+ஆ+கடம் = பெண்ணாகடம் என்று பெயர் வந்தது.

ALSO READ:  தீபாவளி பற்றி காஞ்சி மஹா பெரியவர் சொன்னவை!

திருநெல்வாயில் அரத்துறை என்ற திருத்தலத்தின் பெயர் திருவரத்துறை (திருவட்டுறை) என மருவி தற்போது திருவரத்துறை என்றும் திருவட்டுறை என்றும் வழங்குகின்றது. தொழுதூர் விருத்தாசலம் பேருந்துச் சாலையில் தொழுதூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கொடிகளம் என்னும் இடத்திலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் இத்தலத்தையடையலாம். காரில் செல்வோர் கோயில் வரை செல்லலாம். நிவா நதியின் கரையில் உள்ள இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தருக்கு இறைவன் முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் சின்னங்களும் அருளினார்.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால் சென்று கைகூடுவ தன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே

என சம்பந்தரும்

புனல்ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப்பானை விண்ணோரும் அறிகிலார்
அனலொப்பானை அரத்துறை மேவிய
கனலொப்பானைக் கண்டீர்நாம் தொழுவதே.”

என அப்பர் சுவாமிகளும்

கல்வாயகிலுங் கதிர்மாமணியுங்
கலந்துந் திவருந்நிவாவின் கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்றது அறிந்தடியேன்
தொடர்ந்தேன் உய்யப் போவதோர்சூழல் சொல்லே”

ALSO READ:  இன்று ஐப்பசி மூலம்; மாமுனிகளைக் கொண்டாடும் நாள்!

என சுந்தரரும் இத்தலம் பற்றிப் பாடியிருக்கிறார்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.