spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-14)

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-14)

- Advertisement -
sringeri bharathi theerthar

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-14)
மீ.விசுவநாதன்

வாழ்வு நெறி

இன்பத்துடன் இருப்பவர்களுடன் நட்புடன் இருக்க வேண்டும். ஆனால் பொறாமை கூடாது. பொறாமை வந்தால் துன்பம்தான்.

சிறு வயதிலிருந்து சரியான வளர்ப்பு, உடை, உணவு, முதலியவை இல்லாது துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. அவர்கள் விஷயத்தில் கருணை காட்ட வேண்டும். நமக்குத் துன்பம் வரும்போது மற்றவர் ஏளனம் செய்தால் நமது நிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். துக்கப் படுவர்களின் துக்கத்தைப் போக்க முயற்சி செய்ய வேண்டும்.

புண்ணிய கார்யங்கள் செய்பவர்களைப் பார்த்தால் சந்தோஷப்பட வேண்டும். நீங்கள் மிகவும் புண்ணியம் செய்பவர். உங்கள் வழியில் நாமும் நடப்போம் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

பாவம் செய்பவரைப் பார்த்தது நாம் திட்டிக் கொண்டு இருப்பது தவறு. நம்முடைய தர்மத்தைச் செய்து வர வேண்டும். பக்குவம் வரும்போது அவரும் சரியாகி விடுவார் என எண்ண வேண்டும். அப்படி நாம் நடந்து வந்தால் ஸ்ரேயஸ் அடையலாம்.

மக்கள் ஒருவரை ஒருவர் குறை கூறுவது பலவிதங்களில் இருக்கிறது. முதலில் ஒருவரது உருவம் நன்றாக இல்லை என்று ஆட்சேபிப்பார்கள். அவன் அழகாக இருந்தால் அவனுக்குப் படிப்பு இல்லை என்று ஆட்சேபிப்பார்கள். நன்கு படித்தவனாக இருந்தால் அவனுக்கு நற்குணங்கள் இல்லை என்று ஆட்சேபிப்பார்கள். நற்குணங்கள் இருந்தாலும் ஆசாரம் போறாது என்று எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். ஆகவே மனிதன் ஏதாவது ஒரு ஆட்சேபணைக்கு எப்போதும் இடமளித்துக் கொண்டேதான் இருப்பான். ஆகவே, “என்னை யாரும் சிறிதளவுகூடக் குறை கூறக் கூடாது, எல்லோரும் என்னைப் புகழ வேண்டும்” என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

“யார் நம்மை நிந்தித்தாலும் சரி, புகழ்ந்தாலும் சரி, இரண்டிற்கும் நாம் செவி கொடுக்கக் கூடாது. நாம் எந்த ஆன்மீக (அத்யாத்ம) வாழ்க்கையில் போய்க் கொண்டிருக்கிறோமோ, நமது குரு நமக்கு எந்த வழியை உபதேசம் செய்திருக்கிறாரோ, அவ்வழியில் செல்ல வேண்டுமே தவிர நடுவில் யாருடைய புகழ்ச்சியும், இகழ்ச்சியும் நமக்குத் தேவை இல்லை.”

(ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் அருளுரை. ஸ்ரீமான் கி. சுரேஷ்சந்தர் எழுதிய “ஞாலம் போற்றும் ஞான குரு” என்ற புத்தகத்தில் இருந்து பகிரப்பட்டது)

“விநயமுள்ள குருபக்தர்”

சிறந்த குருபக்தனுக்கு இலக்கணமே குருவின் வார்த்தைக்கு மதிபளிப்பதும், பணிவும், அடக்கமும், சேவை மனப்பான்மையும்தான். தனக்கு எத்துணை இன்பமோ துன்பமோ வந்தாலும் அனைத்துமே குருவின் கிருபை என்று ஏற்கும் பக்குவத்தோடு வாழ்வதுதான்.

அப்படி ஒரு குருபக்தர் ஸ்ரீமான் ஆர். லெஷ்மீவராஹன் அவர்கள். அவரது பூர்வீகம் கல்யாணபுரி என்ற கல்லிடைகுறிச்சி. அந்த அழகிய கிராமத்தில் முதலியப்பபுரம் தெருவில் ஒரு எளிய வைதீக, குருபக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். வேலைக்காக சென்னைக்குக் குடிபுகுந்தார். ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலை முடிந்து வீடு திரும்பியதும், மாலையில் வேத வகுப்புகளுக்குச் சென்று வேதம் கற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு இறைபக்தியும், குருபக்தியும் அதிகமுண்டு. அந்த நல்ல பண்பாளருடன் எனக்கு 1986ஆம் வருடம் சிருங்கேரி ஆசார்யர்கள் சென்னைக்கு விஜய யாத்திரையாக வந்த பொழுது நட்பு ஏற்பட்டது.

ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகளும், ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளும் 1986ஆம் வருடம் திருவான்மியூரில் “சிவசுந்தர் அவின்யூ”விற்கு விஜயம் செய்து பத்து தினங்கள் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்கள். அந்த பத்து தினங்களும் கோலாகலமாக இருந்தது. நேரில் தரிசித்தவர்கள் பாக்யவான்கள்.

அந்த நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று குருபக்தர்களும், முக்கியமாக குருபக்தமணி ப்ரும்மஸ்ரீ கே.ஆர். சுந்தரம் ஐயரும், அவரது குமாரர்களும் விரும்பினார்கள். ஸ்ரீமான் S. விஸ்வநாதன் அவர்கள் (Enfield Chairman) அது தொடர்பாக, தன்னார்வத் தொண்டர்களை தனது இல்லத்திற்கு அழைத்து அவர்களது கருத்துகளையும் கேட்டறிந்தார்கள். அன்று அவரது இல்லத்திலுள்ள அகண்ட புல்வெளிப் பகுதியில் நிறைய பக்தர்கள் வந்து கூடியிருந்தார்கள். வந்திருந்தோர்கள் அனைவருக்கும் திருமதி. மோமதி விஸ்வநாதன் அவர்கள் இனிப்பும், போண்டா, காபியும் கொடுத்து உபசரித்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் சிருங்கேரி ஆசார்யாள் விஜயம் செய்யும் சமயத்தில் யார் யாருக்கு என்னென்ன குருசேவை செய்ய விருப்பம் என்று கேட்டார்கள். அவரவர் தங்களுக்கு விருப்பமானதைச் சொன்னார்கள். ஸ்ரீமான் ஆர். லெஷ்மீவராஹன் அவர்கள், ஆசார்யாளின் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் “காலணிகளை”ப் (செருப்பு) பார்த்துக் கொள்கிறேன் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அப்பொழுது அந்தக் கூட்டத்தில் ஒருவர் அதை ஒரு கேலியாகச் சொன்ன பொழுது , ஸ்ரீமான் S. விஸ்வநாதன் மாமா அவர்கள் குறுக்கிட்டு,” லெஷ்மீவராஹன் கேட்டுக் கொண்டது மிக உயர்ந்த சேவை… அவருக்கு அதைவிட ஒரு உயர்ந்த சேவை செய்யும் பணியைத் தருகிறேன்.. அது ஒவ்வொரு நாளும் நடக்கும் பாதபூஜைகளில் (முன்பெல்லாம் தங்களை அழைக்கும் பக்தர்களின் வீடுகளுக்கு ஆசார்யர்கள் விஜயம் செய்து வந்தார்கள்) பூஜைக்குரிய ஸ்ரீஆசார்யாளின் பாதுகைகளை சுத்தம் செய்து தயார் செய்து, அங்கிருக்கும் ஸ்ரீமடத்து சேவகர்களிடம் கொடுங்கள். மேலும் வைதீக கார்யங்களிலும் உங்களால் முடிந்த சேவை செய்யுங்கள்” என்று ஆலோசனை செய்தார்.

அதைக் கேட்ட ஸ்ரீமான் ஆர். லெஷ்மீவராஹன் மாமாவுக்கு மிகுந்த சந்தோஷம். அன்று நடந்த கூட்டத்தில் நானும் அவருக்கு அருகில்தான் அமர்ந்திருந்தேன். “விஸ்வநாதா…நீயும் என்கூடவே வா…” என்று என்னையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

ஸ்ரீ ஆசார்யாளின் பூஜைகள், ஹோமங்கள், அருளுரைகளைக் கேட்கும் ஆவலில் அலுவலகத்திற்கு விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டு அவருடன் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் வீடுகளில் நடக்கும் (காலை வேளைகளில் மட்டும்) ஸ்ரீ ஆசார்யாளின் பாதபூஜை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குருசேவை செய்யும் பேறு பெற்றேன். பாதுகைகளுக்கு (அம்பாள் பாதுகைகள், குருபாதுகைகள்) அபிஷேஹம் செய்து முடித்தவுடன் அதை சுத்தம் செய்து, நன்றாகத் துடைத்து மீண்டும் பூஜைக்குக் கொடுக்க வேண்டும். அந்த சமயத்தில் பாதுகைகளில் உள்ள தீர்த்தத்தை எனது தலையில் தெளித்து, அந்தப் பாதுகைகளை கண்களில் ஒற்றிக்கொள் என்று அன்போடு சொல்லுவார்.

அப்படி குருபாதுகைளைத் தொட்டு வணங்கக் கூடிய பாக்கியத்தை அவர் எனக்குத் தந்ததை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். அந்தப் புண்ணியமே எங்கள் குடும்பத்தைக் காத்துக் கொண்டிருக்கிறது. இரவு பூஜை நேரத்தில் கும்குமப் பிரசாதம் கொடுக்கும் பணியையும் கொடுத்து,” விஸ்வநாதா…குருசேவை பண்ணு என்று” என்னை ஊக்குவிப்பார். மிகவும் நம்பிக்கைக்குரிய மனிதர். யாரையும் ஏமாற்றியதில்லை. அவர் ஏமாந்ததுண்டு. அதையும் அவர் பெரிதாக எண்ணவில்லை.

அவரது குடும்பமே இறைபக்தியும், குருபக்தியும் கொண்டதுதான். அவரது மனைவிக்கும் அவரைப் போலவே மனது. அவருக்கு ஒரே மகன். இரண்டு பெண் குழந்தைகள். அவரது இரண்டு பெண்களுக்கும் திருமணமாகி குருவருளால் குழந்தைச் செல்வங்களோடு நலமாக இருக்கிறார்கள். அவரது ஆழ்ந்த குருபக்தியின் காரணமாக அம்மன் தரிசனம் பத்திரிக்கைக்கு பதிப்பாளராகவும் இருந்த பெருமையும் அவருக்குண்டு.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு அவரது மகன் திடீரென இறைவன் திருவடியை அடைந்தான். நானும், மனைவியும் அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லச் சென்றோம். ” எல்லாமே ஆசார்யாளோடு கிருபைதான்” என்றார். உண்மையான குருபக்தியின் வெளிப்பாடு என்று மனம் உறுதிப் படுத்தியது.

இப்பொழுது அவரும் அவரது மனைவியும் ஸ்ரீ சாரதாம்பாளையும், குருநாதர் களையும் தரிசனம் செய்து கொண்டும், குருசேவை செய்து கொண்டும் அமைதியாக சிருங்கேரியிலேயே வசித்து வருகிறார்கள்.

அவர்களை அடியேன் மனதார நமஸ்கரிக்கிறேன்.
“ஸ்ரீ சாராதே பாஹிமாம். ஸ்ரீ சங்கரா ரக்ஷமாம்”

(வித்யையும் விநயமும் தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe