
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமைக்குரிய தளமாகும்.
காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடல்வல்லானான நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்து ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் தரிசனம் செய்ய முடியாமல் இருந்தனர்.
தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் கடந்த 11ம் தேதி ஸ்ரீ மாணிக்கவாசக பெருமான் திருவாதிரை நாச்சியார் காப்புகட்டுதலுடன் துவங்கியது.
இதையடுத்து நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் திருவெம்பாவை உற்சவத்துடன் மாணிக்கவாசகர் திருவீதி உலா நடைபெற்று வந்தது.
இதையடுத்து நேற்று இரவு திருவாதிரை அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் மற்றும் மாங்கல்ய நோன்பு பூஜையும் நடைபெற்றது.
தரிசன நாளான இன்று அதிகாலை 3 மணி முதல் நடராஜப்பெருமான மற்றும் சிவகாமி அம்மையாருக்கு விபூதி, பஞசகவ்யம், வெண்ணை, அன்னம், நல்லெண்ணெய், சந்தனாதி தைலம், பச்சரிசி மாவு, பச்சை பயறு மாவு, நெல்லிப்பொடி, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, வில்வப்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 32 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் நான்கு வேதங்களும் பாராயணம் செய்யப்பட்டது. பஞ்சவாத்தியங்கள் முழுங்க ஓதுவார் மூர்த்திகள் தேவாரப் பாடல்கள் பாட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சாமிக்கு பல்வேறு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.
இதையடுத்து கோயில் பிரகாரத்தில் சாமி பட்டி சுற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
அதிகாலை 3 மணி முதல் கொட்டும் பனியையும் பொருப்படுத்தாமல் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரளாக வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர் என்ப்[அது குறிப்பிடத்தக்கது.