
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் 11
விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திற(ல்) அழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்(று) இல்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றர(வு) அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்(கு) உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். (11)
பொருள்
இடையர்கள் ஏராளமான பசுக்களிடமிருந்து பால் கறப்பவர்கள்; தீமையுடன் போரிட்டு வெற்றிகொள்ளும் இயல்பு உடையவர்கள். அத்தகைய இடைக்குலத்தில் தோன்றியவளே, தங்கக்கொடியைப் போன்ற அழகிய வடிவுடைய பெண்ணே, புற்றில் இருந்து வெளியே தலைநீட்டிப் படமெடுக்கும் நாகத்தின் கழுத்தைப் போன்ற மெல்லிய கொடி இடையை உடையவளே, கானகத்து மயிலை ஒத்த சாயல் கொண்டவளே! இந்தப் பகுதியில் உள்ள அனைத்துத் தோழிகளும் உன் வீட்டு வாசலில் நின்று கார்மேகக் கண்ணனின் திருநாமங்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீயோ, வாயே திறக்காமல் சும்மா படுத்து உறங்குகிறாயே! இது நியாயமா? இதற்கு என்ன காரணம்?

அருஞ்சொற்பொருள்
கற்றுக் கறவை – கன்றுகளுடன் கூடிய மாடுகள் (கறவை மாடுகள்)
கறவைக் கணங்கள் – கறவை மாடுகளின் கூட்டம்
செற்றார் – பகைவர்
திறல் – வலிமை
செரு – போர்
குற்றம் ஒன்றும் இல்லாத – அப்பாவிகளான
கோவலர் – கோபாலர்கள் (இடையர்கள்)
புற்றரவு – புற்றில் வசிக்கும் நாகம்
அல்குல் – இடை
புனமயிலே – அழகு மயிலே
போதராய் – வருவாய்
முற்றம் – வாசல்
சிற்றாதே – உடலை நகர்த்தாமல்
பேசாதே – நாக்கை அசைக்காமல்
செல்வப் பெண்டாட்டி – செல்வச் சிறுமியே
எற்றுக்கு – எதற்காக
கற்று என்பது கன்றைக் குறித்தது. கோகுலத்துக்குக் கிருஷ்ணன் வந்தது முதல் அங்கிருந்த மாடுகள் மூப்படையவே இல்லையாம். எனவே, கற்றுக் கறவை என்பதற்கு ‘கன்றுகளாக உள்ள (இளமையான) கறவை மாடுகள்’ என்று உரையாசிரியர்கள் விளக்கம் தருகிறார்கள்.
குறையொன்றுமில்லாத கோவிந்தா என்று பகவானை விளிக்கிறாள் ஆண்டாள். (கறவைகள் பின்சென்று பாசுரத்தில்) மாயைக்கு அப்பாற்பட்ட தூய்மையான, கல்யாண குணங்கள் நிரம்பப் பெற்றவன் அவன் என்பதையே இவ்வாறு விளக்குகிறாள். அதுபோலவே இந்தப் பாசுரத்தில் கோபாலர்களை ‘குற்றமொன்றில்லாத கோவலர்’ என்று வர்ணிக்கிறாள். இதை ‘தூய’ அல்லது ‘அப்பாவித்தனம் நிரம்பிய’ என்று பொருள் கொள்ளலாம். தூயவனான அவனே அவதாரமாகப் பிறப்பெடுக்குமளவு தூய்மை பொருந்திய கோபாலர்கள்.
மொழி அழகு
பெண்ணின் அழகை வர்ணிக்க, பாம்பையும் அதன் பரம வைரியான மயிலையும் சேர்த்துச் சொல்லும் கவிநயம் நோக்கத்தக்கது.
மயிலைக் குறிப்பிட்ட கையோடு முகிலையும் குறிப்பிடுகிறாள். ‘மேகத்தைப் பார்த்ததுமே மயில் தோகை விரித்து ஆடுமே! ஆனால் நீயோ, முகில் வண்ணன் பெயரைக் கேட்ட பின்னரும், உடலை அசைக்காமலும், நாவால் நாமம் சொல்லாமலும் உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறாயே’ என்று பொருள் கொள்வது சிறப்பு.
***
கோபாலர்களின் வீரத்தைச் சொல்லும்போது கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்று தொடங்குகிறாள். ஒரு மாட்டின் பால் கறப்பதே பெரிய வேலை. இவர்களோ ஏராளமான ஆநிரைக் கூட்டங்களின் பாலையும் கறக்கும் அளவு உடல் வலிமை உடையவர்களாம். போர் ஆற்றலுக்குத் தேவையான அடிப்படை உடல் வலிமையை இவ்வாறு சுட்டிக் காட்டுகிறாள்.
***
ஆண்டாள் பாசுரங்களில் ஏகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் மிகவும் அழகாக இருக்கும். உ-ம்.: சிற்றாதே பேசாதே. ஓகாரமும் மிகுந்த அளவில் இடம்பெறும். (உ-ம்: போதுமினோ)
ஆன்மிகம், தத்துவம்
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் –
பகைவர்கள் தங்களைத் தாக்கும் வரை காத்திராமல், அவர்களது இடத்துக்கே சென்று போரிட்டு அவர்களது ஆற்றலை அழிக்கும் தன்மை கொண்டவர்கள் கோபாலர்கள் என்று கூறுகிறாள்.
இதை ஆழ்ந்து நோக்கினால், கோகுலவாசிகளுக்கு எதிரிகளே இல்லை, ஏனெனில் கோபாலர்கள், எதிரிகளின் இடத்துக்கே சென்று அவர்களின் போர்வலிமையை அழித்து விடும் இயல்பு கொண்டவர்கள் என்று ஆண்டாள் கூறுவது புரியும்.
க்ஷத்திரியர்களின் தர்ம பரிபாலனம் என்பது இதுவே. அறவழி நிற்கும் தனிநபர்களையோ சமுதாயத்தையோ யாரும் தாக்க நினைக்கக் கூடாது. அப்படி யாராவது முயன்றால், அவர்களை உருத் தெரியாமல் அழிக்க வேண்டியது க்ஷத்திரியர்களின் கடமையாகும். தீயோரைத் தேடிச் சென்று தாக்கி அழிக்க வேண்டியது அரசனின் கடமை. இந்தப் பணி முறையாக நடந்தால், தீயோர்களுக்கு அரசர்களின் மீது மிகுந்த பயம் ஏற்படும். நன்மக்களைத் தாக்கலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு ஏற்படாமல் போகும்.
இதன் பலனாக நாட்டில் அமைதி நிலவும். அரசனின் செங்கோல் தரும் தண்டனைக்குப் பயந்தே குடிமக்கள் அறவழி நிற்பார்கள் என்பது ஸ்மிருதி வாக்கு.
தர்ம பரிபாலனம் என்பது நன்மக்களைக் காப்பதும் தீயோரை அழிப்பதுமே. இறைவனின் அறக்கருணை, மறக்கருணை என்பதும் இதுவே. நாம் செய்யும் நற்செயல்களுக்கு நன்மையை (புண்ணியத்துக்கான பலன்) தருவது அவனது அறக்கருணை. தீமைகளுக்கான (பாவம்) தண்டனையைத் தருவது மறக்கருணை.
அரசன் என்பவன் பகவானின் அம்சம். எனவே, அரசனின் செங்கோல் என்பது அறக்கருணை, மறக்கருணை இரண்டையும் கொண்டதாக இருக்க வேண்டும். ஆக, அரசன் வழங்கும் தண்டனையும், போர்களில் அவன் செய்யும் வதைகளும் தர்ம பரிபாலனத்துக்காகவே. எனவே, இவை குற்றமல்ல, மாறாக, அவனது கருணையின் வெளிப்பாடே.
அஹிம்ஸா பரமோ தர்ம: (அகிம்சையே மேலான தர்மம்) என்பது நமது மதத்தின் அடிப்படைக் கருத்து. அரசனின் தர்ம பரிபாலனம் என்பது அகிம்சையை நிலைநாட்டுவதே. கோகுலத்து க்ஷத்திரியர்கள் தங்களது வீரத்தின் மூலம் தீமையை வேரோடு அழித்து கோகுலத்தில் அகிம்சை நிலவக் காரணமாக இருந்ததையே ஆண்டாள் இவ்வாறு குறிப்பிடுகிறாள்.