
கட்டுரை: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்
பூமாலையும், பாமாலையும் சூடிய ஆண்டாளை ஆராதித்தும், ‘காவேரி நாடன்ன கழனிநாடு’ என்று அறியப்படும் காவிரித்தாயை வணங்கியும் என் பள்ளி வாழ்க்கையில் என் தோழியர்களுடன் “ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என வழக்கில உள்ள மயிலாடுதுறையில் கொண்டாடிய மார்கழி மாதம் பற்றிய ஒரு சிறு கட்டுரை.
கார்த்திகை மாதத்தின் இறுதி நாளன்றே நாங்கள் மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவற்றை வரையறுத்துக் கொண்டுவிடுவோம்.
மார்கழித் திங்களின் முதலாம் நாளன்று மாயூரம் மாயூரநாதர் கோவிலில் இளம்காலைப் பொழுதில் திருப்பாவை, திரும்பாவை இசைத்தட்டுகளில் ஒலிப்பரப்பத் தொடங்கி விடும்.
பசுவின் சாணியை தண்ணீரில் கலந்து கைகளினால் தெளித்து இல்ல வாயில்களை சுத்தம் செய்வோம். பின்னர் இல்லப் பெரியவர்கள் கோலமிடும் வரை அந்த இளமான குளுரில் நாங்களும் பேசிக்கொண்டே அவர்களுக்கு துணையாக இருப்போம். சில சமயங்களில் கோலத்தின் அழகை மெருகூட்ட நல்ல யோசனைகளையும் கூறுவோம்.
இதனிடையில் ” பரங்கிபூ வாங்கலியோ, பரங்கிப்பூ,” என்று விற்க வரும் பெண்ணிடம் பேரம் பேசாமல் பரங்கிப்பூ நாங்கள் வாங்கி விட்டு அப்பெண்ணிற்கு காசு கொடுக்கும் போது “மவராசி, நல்லா இருக்கணும், இன்னிக்கு எனக்கு போணி நல்லா ஆகணும்,” என்று அந்தப் பெண்மணி அவரது கூடையோடு சேர்த்து எங்களுக்கும் திருஷ்டி சுற்றுவார்.
வண்ணக்கோலப் பொடி வகைகளை, பரங்கிப் பூக்களை விற்பவர்களுக்கு உதவும் வாய்ப்பும் மார்கழி மாதத்தில் எங்களுக்கு கிடைத்தது. இல்ல நுழைவாயிலில் இரண்டு பக்கங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைப்போம்.
அவரவர்கள் வீட்டில் கோலம் முடிந்தவுடன் அனைவரும் ஒன்றாக நான்கு மடவிளாகத் தெருவில் இருக்கும் வீடுகளில் போடப்படும் கோலங்களை ரசிக்க பெண்கள் பட்டாளமாய் செல்வோம். எத்தனை அழகான கோலங்கள்- வண்ணக் கோலங்கள், அருமை டிசைன்கள், சிக்குக் கோலங்கள், பறவை இனங்கள், விலங்குகள், பூக்கள் எனக் கோலங்களை கண்டு ரசித்த அதிர்ஷ்டக்கார குழந்தைகள் நாங்கள்.
சில நாட்களில் எங்கள் பாட்டு வாத்தியார் எங்களை திருப்பாவை பாடல்கள் பாட இல்லம் அருகிலுள்ள கோவில்களுக்கு அழைத்துச் செல்வார். நானும் அதில் இருப்பேன் (!). கூட்டத்தோடு கூட்டமாக நானும் என் குரலின் (!) மேல் நம்பிக்கை வைத்து பாடி விடுவேன். சில கோயில்களில் எங்கள் அப்பாவை தெரிந்தவர்கள் ( இந்து சமய அறநிலைய துறையில் ஆய்வாளராக இருந்ததால்), “திருமலை ஐயா பொண்ணு சார், இவங்க,” என்று நான் அடையாளம் காணப்படும் போது பெருமையாய் இருக்கும். என் குரல் பற்றிய கவலையும் பறந்தோடி விடும் அப்போது.
மாயூரநாதர் கோவிலில் இருந்தும், பிரசன்ன மாரியம்மன் கோவிலில் இருந்தும் மார்கழி மாதப் பிரசாதமாக எங்கள் இல்லத்திற்கு சுடச்சுட வெண்பொங்கலையும், சக்கரப் பொங்கலையும். கொடுப்பதற்காக குருக்கள்கள் வருவார்கள். அவர்களை வணங்கி பிரசாதங்கள் பெற்றுக் கொள்வோம். என் தோழிகளுடன் சேர்ந்து பிரசாதத்தை உண்டு மகிழ்வோம்.
வைகுண்ட ஏகாதசியன்று எங்கள் குடும்பத்தினரும், என் தோழிகளுடனும் (அனைவரும்) பட்டுப்பாவாடை அணிந்து, நடந்து திருவிழந்தூர் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்வோம். வடக்கு மடவிளாகத்திலிருந்து புறப்பட்டு பட்டமங்கலத் தெருவின் வழியாக காவிரிக் கரையைக் கடந்து செல்லும்போது பறவைகளின் கீச்சொலியும், நதியில் நீர் மெதுவாகப் பாயும் ஒலியும் செவிக்கு விருந்தாகும். வழி நெடுக அலங்காரத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும்.
திருவிழந்தூரை நெருங்கும் சமயத்தில் பல குழந்தைகள் பற்பல தெய்வங்களைப் போல வேஷம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை ஒரு ஹனுமான் வேடத்தில் இருந்த ஒரு சிறுவன் எங்களை துரத்திக் கொண்டே வந்தான். பிறகு, அடுத்த நாள் தான் புரிந்தது, அவன் எங்கள் வகுப்பில் படித்த மாணவன் என்று.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். பெருமாள், தாயார் சன்னதிகளுக்கு சென்று அற்புதமாக பெருமாள், தாயார் தரிசனம் செய்து வருவோம்.
பலவித பொருட்கள் (நீளமான ரீபில் போனா- கைப்போன்ற மூடியுடன் கூடியது, ஸ்பிரிங்கினால் ஆன நாய் பொம்மை, இரும்பினால ஆன சுத்தும் மனிதன், சோப் பபுல் போன்றவை) வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கடைகளில் வாங்கி மகிழ்வோம்.
துவாதசிக்காக பதினாறு வகை காய்கறிகளை பாக்கெட்களில் விற்கும் கடைகளும் அங்கு மிகவும் பிரசித்தம்.
இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு, இல்லம் திரும்ப காலை 11.30 மணி ஆகிவிடும். அன்று குறைந்த பட்சம் 10 கிலோ மீட்டராவது நடந்து விடுவோம்.
இரவு 8 மணிக்கு மேல் பெரியவர்களுடன் தாயக்கட்டை, பரமபதம், ஆடுபுலி ஆட்டம், கரோம் போர்ட் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து அன்று இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருக்க முயலுவோம்.
ஆயிரம் மைல்கள் தாண்டி வந்த பிறகும், முப்பது ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கொண்டாடிய மார்கழியும், ரசித்து அனுபவித்த நிகழ்வுகளும் பசுமரத்தாணிப் போல மனதில் இன்றும் உணர முடிகிறது.
அது ஒரு பொற்காலம்!