
இந்த மாதம் 28ஆம் தேதி தெலங்காணா முதல்வர் கேசிஆரின் தத்து மகளுக்கு திருமணம். கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் திருமணம் நடைபெறவுள்ளது.
சிற்றன்னையின் சித்திரவதையிலிருந்து வெளிவந்தபின் பிரதியுஷாவின் நலனை மகிளா சிசு ஸம்ரக்ஷணை அதிகாரிகள் பார்த்துக்கொள்கிறார்கள். முதல்வரின் உத்தரவுப்படி ஐஏஎஸ் அதிகாரி ரகு நந்தன ராவு பிரத்தியேகமாக பிரதியூஷாவின் நலனை கவனித்துக் கொள்கிறார்.
பெற்ற தந்தை மற்றும் சிற்றன்னையின் கைகளில் சித்திரவதைகளுக்கு ஆளாகி கிட்டத்தட்ட சாவு வரை சென்று திரும்பிய பிரத்யூஷா முதல்வரின் ஆதரவில் உடல்நிலை தேறினார்.
உடல்நிலை தேறிய பின் தானே சுயமாக பிரதியூஷாவை வீட்டிற்கு அழைத்து தம்மோடு சேர்ந்து உணவு உண்ணும் வாய்ப்பையும் அளித்ததோடு அந்த சிறுமியை தத்து எடுத்துக் கொள்வதாக கூட முதல்வர் அறிவித்தார்.
இவ்வாறு முதல்வரின் மகளாக மாறி ஆரோக்கியமாகவும் கல்வியிலும் எந்தவித தொந்தரவும் இன்றி வாழ்ந்து வரும் பிரதியூஷா இப்போது ஒரு இல்லாளாக மாறப்போகிறார்.

ப்ரத்யூஷா தற்போது நர்சிங் கோர்ஸ் படித்து முடித்து ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து சொந்தக் காலில் நிற்கிறார். அவர் தனக்குப் பிடித்த மனிதரோடு புது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளப் போகிறார்.
அண்மையில் ஹைதராபாத் வித்யாநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆடம்பரமின்றி சரண்ரெட்டி என்ற இளைஞரோடு பிரத்யூஷாவின் நிச்சயதார்த்தம் நடந்தேறியது. திருமணம் இந்த மாதம் 28ஆம் தேதி ரங்காரெட்டி மாவட்டம் கேசம்பேட்ட மண்டலம் பாட்டிகட்ட கிராமம் லூர்து மாதா தேவாலயத்தில் நடக்க இருக்கிறது. உடுமுல ஜைன்மேரி, மர்ரெட்டி தம்பதிகளின் புதல்வன் சரண்ரெட்டியோடு பிரத்யூஷாவின் விவாகம் நடக்க இருக்கிறது.
திருமணத்திற்கு நேரில் வருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார் என்று பிரத்யூஷா தெரிவித்தார். தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிய முதல்வர் மற்றும் அதிகாரிகள், இப்போது நல்ல வாழ்க்கையை தருவதற்கு முன் வந்துள்ள சரண் மற்றும் அவருடைய பெற்றோர் அனைவருக்கும் தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக பிரதியூஷா தெரிவித்தார்.