Homeஆன்மிகம்திருப்பாவைதிருப்பாவை - 18 உந்து மதகளிற்றன்: (பாடலும் விளக்கமும்)

திருப்பாவை – 18 உந்து மதகளிற்றன்: (பாடலும் விளக்கமும்)

andal-vaibhavam-2
andal-vaibhavam-2

ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரம் 18 – உந்து மதகளிற்றன்..

விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். (18)

பொருள்

எதிரிகள் எவ்வளவு மூர்க்கமாகத் தாக்கினாலும் புறமுதுகு காட்டாமல் அவர்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் வல்லமை படைத்த நந்தகோபரின் மருமகளே, நப்பின்னையே, நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே, அறைக் கதவைத் திறப்பாயாக! பொழுது புலர்ந்து விட்டது. சேவல்கள் கூவுகின்றன. பறவைகள் பாடுகின்றன. எங்கள் விளையாட்டுத் தோழியே, உன் மணாளன் கண்ணனின் புகழைப் பாட வந்திருக்கிறோம். உன் திருக்கரங்களால் மங்கல ஓசை எழுப்பி, கதவைத் திறப்பாயாக! உன்னை தரிசித்து நாங்கள் பேரானந்தம் அடைவோம்.

அருஞ்சொற்பொருள்

மத களிறு – மதநீரைப் பெருக்கும் (வலிமை பொருந்திய) யானை

மதகளிற்றன் – மதயானைகளை உடையவன்

ஓடாத – புறமுதுகு காட்டாத (வீர பராக்கிரமம் நிறைந்த)

தோள்வலியன் – புஜ பல பராக்கிரமம் பொருந்தியவன்

கந்தம் கமழும் குழலீ – நறுமணம் மிக்க கூந்தலை உடையவளே

கடை திறவாய் – கதவைத் திறப்பாயாக

மாதவிப் பந்தல் – பந்தல் போல் அடர்ந்து படர்ந்த செடிகள்

பல்கால் – பல தடவை

பந்தார் விரலி – பந்து பொருந்திய விரல்களை உடையவளே

மைத்துனன் – மணாளன்

பேர் பாட – புகழ் பாட

சீரார் வளை – மங்களமான வளையல்கள்

நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் –

சீதா தேவி தன்னை ‘ஜனகரின் மகள்’ என்று சொல்லாமல் ‘தசரதரின் மருமகள்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டாளாம். அதேபோல, நப்பின்னையையும் ‘தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே’ என்று புகுந்த வீட்டுப் பெருமை சொல்லி அழைக்கிறார்கள் என்பது உரையாசிரியர்கள் தரும் விளக்கம்.

மைத்துனன் –

ஆய்ச்சிறுமிகளின் பாஷை இது. கிராமத்து வழக்கில் கணவனை மச்சான் என்று அழைப்பதை ஒத்திருக்கிறது.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஏற்படும் ஊடல் (பிணக்கு) மைத்துனமை எனப்படும். ஊடல் காலத்தில் தலைவனை மைத்துனன் என்று சொல்வதுண்டு. தாய்க்கும் தந்தைக்கும் இடையே பிணக்கு ஏற்படும்போது பிள்ளைகள் தாயின் பக்கமே நிற்பது போல, உனக்கும் கண்ணனுக்கும் பிணக்கு ஏற்பட்டால் நாங்கள் உன் பக்கமே நிற்போம் என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதத்தில் மைத்துனன் என்ற பதத்தை உரைக்கிறார்கள் என்றும் கொள்ளலாம்.

கடை திறவாய் –

பணியைத் தொடங்குவதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். பிராட்டியின் பணி அனுக்கிரகம். எனவே, ‘ஜீவர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் பணியைத் தொடங்குவாயாக’ என்று கோபிகைகள் இறைஞ்சினர் என்றும் பொருள்படும்.

மொழி அழகு

மதம் உந்து களிறு –

யானை இயல்பாகவே பலம் பொருந்தியது. மதம் உந்தும்போது அதற்கு மூர்க்கத்தனம் அதிகமாகிறது. இது, போர்களில் மிகவும் ஆற்றலுடன் தாக்கும் வல்லமை கொண்ட யானையைக் குறிக்கிறது.

‘உந்து மதகளிற்றன்’, ‘ஓடாத தோள்வலியன்’ என்று தனித்தனியே பார்த்தால், ‘மதம் பொருந்திய யானைகளை உடையவனும் (அல்லது, மதம் பொருந்திய யானைகளைச் செலுத்தும் ஆற்றல் உடையவனும்), போரில் பின்வாங்காத பராக்கிரமசாலி’யுமான என்று பொருள். ‘உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்’ என்று இரண்டு பகுதிகளையும் சேர்த்துப் பார்த்தால், ‘மதம் பெருக்கும் களிறுகளுடன் போரிடும் போதும் பின்வாங்காமல் வீரதீரத்துடன் போரிடுபவன்’ என்று பொருள்.

andal-srivilliputhur-1
andal-srivilliputhur-1

ஆன்மிகம், தத்துவம்

நப்பின்னை –

கோசல தேசத்து அரசன் நக்னராஜனின் புதல்வி சத்யபாமா. மகாலக்ஷ்மியின் மணாளனான மகாவிஷ்ணுவே ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்திருக்கிறான், அவனையே மணாளனாகக் கொள்ள வேண்டும் என்று அவளுக்கு உள்ளூர ஆசை. அதை நிறைவேற்றுவதற்காகக் கண்ணன் அந்த நாட்டின் தலைநகரான அயோத்திக்குச் சென்றான்.

வலிமை பொருந்திய ஏழு எருதுகளை அடக்கித் தன் பலத்தை நிரூபிப்பவர்க்கே சத்யபாமாவை மணம் செய்விப்பேன் என்று நக்னராஜன் முடிவு செய்திருந்தான். எத்தனையோ அரசர்கள் அந்த எருதுகளுடன் போரிட்டுத் தோற்று ஓடினர். பலர் மரணத்தையும் தழுவினர்.

கண்ணன் அந்த எருதுகளை அநாயாசமாக அடக்கி, சத்யபாமாவை மணந்தான். ஆழ்வார் பாசுரங்களில் சத்யபாமாவைத்தான் நப்பின்னை என்று குறிப்பிடுவதாகச் சொல்வார்கள்.

ராதாவையே நப்பின்னையாகக் கொள்வாரும் உண்டு.

பின்னை என்ற சொல்லுக்குத் தங்கை என்று பொருள் (பின்னர்ப் பிறந்தவள்). எனவே, நப்பின்னை என்பது மூதேவியின் தங்கையான மகாலக்ஷ்மியைக் குறிக்கிறது என்றும் சொல்வதுண்டு. தனது அக்காவைப் போல் இல்லாமல், சகல மங்களங்களுக்கும் ஐசுவரியங்களுக்கும் உறைவிடமாகத் திகழ்வதால் இவள் நல் பின்னை = நப்பின்னை.

ஒருவகையில் ஆண்டாளுக்குமே இந்தப் பெயர் பொருந்தும். இவளும் நல்-பின்னை தான். பெரும்பூதூர் மாமுனியான ராமாநுஜருக்குப் பின்னை இவள் என்று கொள்வது வைணவ மரபு. ஸ்ரீராமாநுஜர் காலத்தால் பிற்பட்டவராக இருந்தாலும், ஆண்டாளுக்குப் பிறந்த வீட்டுச் சீர் செய்ததால் அவளது அண்ணாவாகப் போற்றப்படுகிறார்.

***

தாயாரைப் போற்றிப் பாடும் இந்தப் பாசுரத்தில் இடம்பெறும் மங்களச் சொற்கள் கவனிக்கத் தக்கவை: களிறு (யானை), கோ (பசு), மருமகள் (விளக்கேற்ற வந்தவள்), நல் பின்னை, கந்தம், திறவாய், இசை (குயில்கள் கூவுதல்), தாமரை, பந்தல், சீரார் வளை (வளையல்).

***

ஸ்ரீராமாநுஜர் ஒருமுறை உந்து மதகளிற்றன் பாசுரத்தைப் பாடியவாறே தெருவில் பிக்ஷை எடுத்துப் போய்க்கொண்டிருந்தார். செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய் என்று அவர் பாசுரத்தை முடிக்கும்போது, அவரது குருவான திருக்கோஷ்டியூர் நம்பியின் வீட்டு வாசலைத் திறந்து அவரது புதல்வியான அத்துழாய் வெளியே வந்தார். அவளைப் பார்த்ததும், தாயாரே சிறு பிள்ளை வடிவில் வந்ததாகக் கருதிய ராமாநுஜர் உணர்ச்சி மேலீட்டால் மயங்கி விட்டாராம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,094FansLike
380FollowersFollow
76FollowersFollow
74FollowersFollow
3,966FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...