தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தில்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகம் திரும்பிய 67 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், நேற்று முன்தினம் ஒரே நாளில் 57 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லி மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியவர்களை கண்டுபிடித்து அவர்களுடன் பழகியவர்கள் குறித்து அனைத்து தகவல்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் திருவிக நகர் 6வது மண்டலத்திற்கு உட்பட்ட திருவிக நகர் பகுதியில் 3 இஸ்லாமியர்களை சுகாதாரத்துறையினர் அடையாளம் கண்டு அவர்களை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, அவர்கள் வீடு அமைந்துள்ள 68வது வார்டு கென்னடி சதுக்கம் பகுதி, 66வது வார்டு கே.சி.கார்டன் பகுதி மற்றும் பாஷ்யம் தெரு ஆகிய பகுதிகளில் மண்டல அதிகாரி நாராயணன் உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் ஆஷா லதா ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்து மூன்று பேரின் வீடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோட்டீஸ் ஒட்டினர்.
அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினர். மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல், சளி உள்ளதா என தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.