கரோனா வைரஸ் எனும் கோவிட்-19 காய்ச்சல் பரவலைத் தடுக்க இந்தியா 21 நாட்கள் முழு அடைப்பை மேற்கொண்டு வருகிறது. இதன் பலன்கள் என்ன என்பதை 2 வாரங்களுக்குப் பிறகே அறுதியிட முடியும் என்று அரசும் தெரிவித்துள்ளது, தனிப்பட்ட நிபுணர்களும் கூறியுள்ளனர்.
அதாவது பிரதமர் மோடி மார்ச் 24ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்தார், மார்ச் 25ம் தேதியன்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 606 ஆக இருந்தது ஏப்ரல் 1ம் தேதி கணக்கின்படி 1,637 ஆக உள்ளது. இந்த பரவல் விகிதம் மெதுவானதுதான் என்று கூறும் நிபுணர்கள் இப்போது உறுதி செய்யப்படும் கரோனா வைரஸ் கேஸ்கள் ஏற்கெனவே ரிப்போர்ட் செய்யப்பட்டவை என்கின்றனர்.
பல நாடுகளை ஒப்பிடுகையில் இவ்வளவு மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை குறைவுதான். மார்ச் 8ம் தேதி 551 பாசிட்டிவ் என்ற அமெரிக்கா 2 நாட்களில் 994 என்றது, இன்று 2 லட்சம் கேஸ்கள் என்று அதிவிரைவாகப் பரவியுள்ளது.
இந்நிலையில் 21 நாட்கள் லாக்-டவுன் பலன்கள் பற்றி ஐசிஎம்ஆர் டாக்டர் ராமன் கங்காகேட்கர் கூறும்போது, ‘வைரஸின் அடைகாப்பு காலம் 14 நாட்கள்தான். இப்போது கரோனா பாசிட்டிவ் என்று அறிவிக்கப்படுபவை எல்லாம் மார்ச் 24ம் தேதிக்கு முன்பு ரிப்போர்ட் செய்யப்பட்டவை. இந்த பழைய கேஸ்கள் எண்ணிக்கை முழுமையடைந்த பிறகே லாக்-டவுன் பலாபலன்களை நாம் கணிக்க முடியும். என்ன மாதிரிகளில் கணித்தாலும் நிபுணர்கள் புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும் கொள்ளை நோயை யாராலும் கணிக்க முடியாது.’ என்றார்.
முன்னாள் சுகாதாரச் செயலர் டாக்டர் சுஜாதா ராவ் ட்வீட் ஒன்றில், ‘லாக்-டவுன் தாக்கம் பற்றி ஏப்ரல் 5ம் தேதிக்குப் பிறகே தெரியவரும்’ என்கிறார். இன்றைய தொற்று எண்ணிக்கை 2 வாரங்களுக்கு முந்தையதாகும், என்கிறார் சுஜாதா ராவ்.
இன்னொரு தொற்று நோய் நிபுணரான கிரிதர் பாபு என்பவர் கூறும்போது, லாக்-டவும் நடைமுறைகளின் பலன்கள் டெஸ்ட் எவ்வளவு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தது. குறிப்பாக வைரஸைச் சுமந்திருப்பவர்கள் ஆனால் இன்னமும் நோய் குறிகுணங்கள் தென்படாதவர்கள் இனம்காணப்பட்டு சோதிக்கப்பட வேண்டும். பு
திய தொற்றுக்களை இனம்காணாமல் பரிசோதனைகளை அதிகரிக்காமல் வெறும் லாக்-டவுன் மட்டுமே கரோனா சங்கிலையை உடைக்க போதுமானதாக இருக்காது. இதுவரை தொற்றியுள்ளவர்களின் தொடர்புச் சங்கிலித் தொடர்களை இனம் காண்பதென்பது கடினமான வேலை ஆனால் அவசியமானது, அதன் பிறகே லாக்-டவுன் பலன்களைப் பற்றி நாம் கணிக்க முடியும்’ என்றார்.