வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டு, அதில் மிகவும் கௌரவமாக அமரவைத்து, பயனாளர்களுக்கு அரசு அறிவித்த ரூ.1000 நிவாரணத்தை ரேஷன் கடையில் கொடுக்கிறார்கள் என்றால்… எல்லாம் கரோனாவால் வந்தது தான் என்று ஆச்சரியப் படுகின்றனர் அந்த மக்கள்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் (டானா பகுதி) நியாய விலைக் கடை எண் 27GC012PN கடையில் இன்று கொரானா பாதிப்பின் காரணமாக அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகையான ரூ.1000 வழங்கும் பணி தொடங்கப் பட்டது.
ஆனால் வழக்கம்போல் அடிதடி கூட்ட நெரிசல் என எதுவும் இல்லாமல், கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, சமூக இடைவெளியை உணர்த்தும் விதமாக வாங்க வரும் பொதுமக்களுக்கு மூன்றடிக்கு ஒரு சேர் என்ற முறையில் போடப் பட்டிருந்தது.
இந்த சேர்களில் வந்தவர்கள் அனைவரையும் அமர வைத்து ஒவ்வொருவராக அழைத்து உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது.
இன்று காலை பல்வேறு நியாய விலைக் கடைகளிலும் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியது. அதற்காக முந்தைய நாளே கூட்டம் சேர்க்காமல், குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே கடைக்கு வரவழைத்துக் கொடுக்கும் வகையில் தேதி, நேரம் அனைத்தும் குறிப்பிட்டு, வீடுவீடாகச் சென்று டோக்கன் வழங்கப் பட்டது!