
கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு மூன்று ஷிப்ட் போடப்படுகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி சக்திவேல் அதில் மாற்றம் செய்துள்ளார். அதன்படி 10 காவலர்கள் உள்ள காவல் நிலையங்களில் 3 பேருக்கு 5 நாள் விடுப்பு கொடுத்துள்ளார்.

அதுபோல் 15 காவலர்கள் உள்ள காவல் நிலையத்தில் 4 பேருக்கும், 20 பேர் உள்ள காவல் நிலையங்களில் ஆறு பேருக்கும் ஐந்து நாட்கள் என மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் செல்லும் காவலர்கள் மீண்டும் பணிக்கு வரும்போது அரசு மருத்துவரிடம் விடுப்புக்கான சான்றிதழ் பெற்று வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு இந்த விடுமுறை சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.