டாஸ்மாக் மதுபானக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு உயர் ரக மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அக்கிச் செட்டிபாளையம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது, இந்த கடையில் மது பாட்டில்கள் வாங்க ஏராளமானோர் வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
மேலும் ஊருக்கு ஒதுக்கு புறமாக இந்த கடை அமைந்துள்ளதால் மது அருந்துவோர் அங்கேயே அமர்ந்து மது அருந்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடையில் பணி புரிந்த மேற்பார்வையாளர் சிவா உள்ளிட்ட இரண்டு சேல்ஸ்மேன்கள் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனிடையே இன்று காலை வழக்கம் போல் மது பாட்டில்கள் வாங்க கடைக்கு வந்த மது பிரியர்கள் கடைக்கு சென்று பார்த்த போது கடையின் பின்புற சுவர் துளையிட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் கடை மேற்பார்வையாளர் சிவாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே டாஸ்மாக் கடைக்கு வந்த மேற்பார்வையாளர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது 20,000 ரூபாய் மதிப்பிலான உயர் ரக 250 மதுபாட்டில்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதனையடுத்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சிவா கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் கடையின் பின்புற சுவரை துளையிட்டு உயர் ரக மது பாட்டில்களை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.