கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பும்போது மணல் குவாரி குழியில் எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் மாலினி. 10 வயதுடைய இவர் திருச்சியிலுள்ள நாகமங்கலத்தில் இருக்கும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார். கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக உறவினர் வீடான திருச்செனம்பூண்டி புது பாலத்திலுள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் மாலினி உட்பட 2 குழந்தைகள் குளித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வரும் வழியில் அந்தபகுதியில் மணல் குவாரிக்காக மண் எடுக்க தோண்டப்பட்ட குழியில் சிறுமி மாலினி நிலை தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதனைப்பார்த்து மற்றொரு சிறுமி சத்தம்போட, உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கோவிலடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் மாலினி முன்பே இறந்து விட்டார். இதையடுத்து மாலினியின் தாயார் அம்பிகாபதி தோகூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று அந்தபகுதி மக்கள் போராட்டம் செய்துவந்த நிலையில், குவாரியில் உள்ள பள்ளத்தில் 10 வயது சிறுமி விழுந்து உயிரிழந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.