சென்னை சிறுமியை ஆசைக்காட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த திருத்தணி கார்பெண்டரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில், தனது மனநலம் பாதிக்கப்பட்ட பேத்தியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், சிறுமியை கடத்திய சென்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் பேசியபோது, “பாதிக்கப்பட்ட சிறுமி ஏஞ்சல் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது தாயாரும் மன நலம் பாதிக்கப்பட்டவர். தந்தை இல்லை,
சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்த போது கடந்த 20/03/2020 அன்று யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றவர் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த போது, பெரம்பூர் பகுதிக்கு கார்பெண்டர் வேலை செய்ய வந்த வெங்கடேசன் என்பவன் சிறுமியிடம் , எங்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள். நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி திருத்தணி அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் வேலை விஷயமாக ஆந்திரா சென்றுள்ளார். இவர்கள் இருவருக்குமான பழக்கம் தெரிந்து வெங்கடேசனின் தாயார் சிறுமியை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.
வெளியே வந்ததும் கட்டட வேலை செய்யும் மேஸ்திரி ஒருவர் சில நாட்கள் அவரது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அங்கிருந்து கோபித்துக்கொண்டு சிறுமி வெளியேறி திருத்தணி ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த போது அவரை கடந்த 6ம் தேதி இரவு திருத்தணி ரயில்வே காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது, சிறுமி தனது சொந்த ஊர் சென்னை அயனாவரம் என்று கூறியதால் திருத்தணி ரயில்வே காவல்துறையினர், அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 7ம் தேதி அதிகாலையில் அயனாவரம் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் ஜெயந்தி, காவலர் வேல்முருகன் ஆகியோர் திருத்தணி சென்று சிறுமியை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் தேவிகா விசாரணை செய்து சிறுமியை அவரது பாட்டியிடம் அனுப்பி வைத்தனர். சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்ற வெங்கடேசனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.