மத்திய பட்ஜெட்டை வரவேற்றுப் பாராட்டிய பாமக டாக்டர் ராமதாஸ்!

மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், வருமானவரிச் சலுகைகள், உழவர்களுக்கான
நிதியுதவி ஆகியவை வரவேற்கத் தக்கவை என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…

மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், எதிர்பார்க்கப் பட்டவாறே பல சலுகைகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. எனினும், வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படாதது பெரும் குறையாகவே உள்ளது.

இந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயமாக உழவர்கள் இருப்பதால், அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையிலும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருந்தது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்; கடந்த திசம்பர் மாதத்திலிருந்து முன்தேதியிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த உழவர்களுக்கு, அவர்கள் வாங்கிய வங்கிக் கடன் மீது 2% வட்டி மானியம் வழங்கப்படும்; கடனை தவணை தவறாமல் செலுத்து வோருக்கு மேலும் 3% வட்டி மானியம் வழங்கப்படும் என்பதும் முழுமையான பலனைத் தராது. இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட உழவர்களின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது தான் அவர்களின் துயரைத் துடைக்கும்.

வருமானவரி செலுத்தாமல் இருப்பதற்கான வருவாய் உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அதேபோல், நிரந்தரக்கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. இதன்மூலம், நேர்மையாக வரி செலுத்துவோரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வருமானவரி விதிதங்களில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. குறைந்தபட்ச வருமான வரி விகிதம் 20% என்பதை ஏற்க முடியாது.

ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 விழுக்காட்டில் இருந்து 10% ஆக குறைக்க அரசு முன்வர வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் ரூ.100 செலுத்தினால், அவர்களின் 60-ஆவது வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3000 வழங்கும் புதிய ஓய்வூதியத் திட்டமும் வரவேற்கத்தக்கது.

இ.எஸ்.ஐ. சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பது அடித்தட்டு தொழிலாளர்களுக்கு பயனளிக்கும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கியும் அது போதவில்லை. இத்தகைய நிலையில் வரும் ஆண்டுக்கும் அதே அளவு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காது.

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் போதுமானவையல்ல. முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட வேண்டும்.

வேலைவாய்ப்புகளைப் பெருக்க போதிய அளவில் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...