கட்டுரை: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. அதன்பின் 2020இல் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி கடந்த ஆண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் பரவிய கொரோனா பாதிப்பால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டிகள் வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையும், பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்டு 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.
எப்போது தொடங்கியது?
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்தில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளாகவும், அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு முறை குளிர் கால ஒலிம்பிக்ஸாகவும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக் களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பேரோன் பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது.
பண்டைய கிரீஸ் நாட்டில் நகர நாடுகள் இருந்தன. அவைகளின் பிரதிநிதிகளிடையே தொடர்ச்சியான தடகளப் போட்டிகளாகவும், பண்டைய கிரேக்கத்தின் (ஆங்கிலத்தில் கிரீஸில் இருந்த நாடுகள் அனைத்தும் பான்-ஹெலெனிக் நாடுகள் என அழைக்கப்பட்டன) விளையாட்டுகளில் ஒன்றாகவும் இருந்தன. அவை ஜீயஸ் என்ற கிரேக்க கடவுளின் நினைவாக நடத்தப்பட்டன. கிரேக்கர்கள் இந்த விளையாட்டுகளுக்கு ஒரு புராண தோற்றத்தை அளித்துள்ளனர். முதல் ஒலிம்பிக் போட்டிகள் பாரம்பரியமாக கிமு 776இல் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இந்த விளையாட்டுக்கள் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்றன. இந்த ஆண்டுகளை ஒலிம்பியாட் ஆண்டு என்று கூட அழைத்தனர். இது வரலாற்று காலவரிசைகளில் நேரத்தைக் கணக்கிடும் ஒரு முறையாகவும் இருந்தது.
கிமு 2ஆம் நூற்றாண்டில் கிரேக்கம் ரோமானிய ஆட்சியின் கீழ் வந்தபோது ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இந்த வரிசையில் பண்டைய ஒலிம்பிக்சின் கடைசி போட்டி கி.பி 393இல், பேரரசர் ஒன்றாம் தியோடோசியஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. ஆனால் தொல்பொருள் சான்றுகள் இந்த தேதிக்குப் பிறகும் சில விளையாட்டுக்கள் நடைபெற்றன என்பதைக் காட்டுகின்றன. உரோமாபுரிப் பேரரசர் இரண்டாம் தியோடோசியஸ் ஆட்சிக் காலத்தில் ஒலிம்பியன் ஜீயஸின் ஆலயத்தை எரித்த தீ விபத்து ஏற்பட்டதால் அந்த ஆண்டிலிருந்து இந்த விளையாட்டுக்கள் முடிவுக்கு வந்திருக்கலாம்.
கிரேக்கத்தின் நகர நாடுகள் எப்போது தங்களுக்குள் சண்டையிட்டு வந்தன. இந்த ஒலிம்பிக் விளையாட்டு கொண்டாட்டத்தின் போது, விளையாட்டு வீரர்கள் தங்கள் நகரங்களிலிருந்து பாதுகாப்பாக விளையாட்டுக்களுக்கு பயணிக்க ஒரு போர் நிறுத்த ஒலிம்பிக் ஒப்பந்தம் இயற்றப்பட்டது. வெற்றியாளர்களுக்கான பரிசுகள் ஆலிவ் இலை மாலை அல்லது கிரீடங்கள்.
பின்னர் இந்த விளையாட்டுக்கள் தங்கள் போட்டியாளர்கள் மூலம் ஆதிக்கம் செலுத்துவதற்கு நகர-நாடுகளால் பயன்படுத்தப்படும் ஒரு அரசியல் கருவியாக மாறின. அரசியல்வாதிகள் விளையாட்டுகளில் அரசியல் கூட்டணிகளை அறிவிப்பார்கள், மற்றும் போரின் காலங்களில், பாதிரியார்கள் வெற்றிக்காக தெய்வங்களுக்கு தியாகங்களை செய்வார்கள். மத்தியதரைக் கடல் முழுவதும் ஹெலனிஸ்டிக் அதாவது கிரேக்கக் கலாச்சாரத்தை பரப்புவதற்கு இந்த விளையாட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
ஒலிம்பிக்கில் மத கொண்டாட்டங்களும் இடம்பெற்றன. ஒலிம்பியாவில் உள்ள ஜீயஸின் சிலை பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது. சிற்பிகளும் கவிஞர்களும் ஒவ்வொரு ஒலிம்பியாடையும் கூடி தங்கள் கலைப் படைப்புகளைக் காண்பிப்பார்கள்.
பண்டைய ஒலிம்பிக்கில் நவீன விளையாட்டுகளை விட குறைவான நிகழ்வுகள் இருந்தன. போட்டிகளில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக திறமையான பெண் தேர் உரிமையாளர்கள் இருந்தபோதிலும் கிரேக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். பாகுபாடின்றி அனைத்து நகர நாடுகளைச் சேர்ந்த ஆண்களும் போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான நடைமுறையைப் போல் அல்லாமல் வெவ்வேறு இடங்களில் போட்டிகளை நடத்தாமல் விளையாட்டுக்கள் எப்போதும் ஒலிம்பியாவில் நடைபெற்றன. ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர், மேலும் அவர்களின் வெற்றிகள் எதிர்கால சந்ததியினருக்காக விவரிக்கப்பட்டுள்ளன.