
உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பதினேழாம் நாள் – 1.10.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று ஆஸ்திரேகியாவின் பிரிஸ்பேன் மைதானாத்தில் இரண்டு குரூப் 1 ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளும் இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளும் விளையாடின.
முதல் ஆட்டம், இலங்கை-ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அணி (144/8, குர்பாஸ் 28, உஸ்மான் கனி 27, இப்ராஹிம் 22, ஹசரங்கா 3/13) இலங்கை அணியிடம் (18.3 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 148 ரன், தனஞ்சயா டி சில்வா 66*, குசால் மெண்டிஸ் 25, அசலங்கா 19, முஜிபுர் ரஹ்மான், ரஷீத் கான் இருவரும் தலா 2 விக்கட்டுகள்) ஆறு விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது,
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் முதல் ஆறு பேட்டர்கள் குர்பாஸ் (24 பந்துகளில் 28 ரன்), உஸ்மான் கனி (27 பந்துகளில் 27 ரன்), இப்ராஹிம் (18 பந்துகளில் 22 ரன்), நஜ்புல்லா (16 பந்துகளில் 18 ரன்), நபி (14 பந்துகளில் 12 ரன்), முஹம்மது நபி (8 பந்துகளில் 13 ரன்) தொய்வில்லாமல் ரன் சேர்த்தனர். எனவே அந்த அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 144 ரன் எடுத்தது. இலங்கை பந்து வீச்சாளர்களில் ஹசரங்கா 4 ஓவர் வீசி 13 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். அதில் பேட்டர்களை ஒரு ஃபோர் கூட அடிக்க விடவில்லை.
அடுத்து ஆடவந்த இலங்கை அணியின் வீரர்களும் தொய்வில்லாமல் ரன் சேர்த்தனர். குறிப்பாக தனஞ்சயா டி சில்வா 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 66 ரன் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 18.3 ஓவரில் 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து-நியூசிலாந்து
இங்கிலாந்து அணி (179/6, பட்லர் 73, ஹேல்ஸ் 52, லிவிங்ஸ்டன் 20, ஃபெர்கூசன் 2/45) நியூசிலாந்து அணியை (159/6, க்ளன் பிலிப்ஸ் 62, கேன் வில்லியம்சன் 40, சாம் கரன் 2/26, வோக்ஸ் 2/33) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் (அணித்தலைவர், விக்கட் கீப்பர்) (47 பந்துகளில் 73 ரன்), அலக்ஸ் ஹேல்ஸ் (40 பந்துகள் 52 ரன்) லியம் லிவிங்ஸ்டோன் (14 பந்துகள் 20 ரன்) மூவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை 20 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 179 ரன்னுக்கு கொண்டு சென்றனர்.
அடுத்து ஆடவந்த நியூசிலாந்து அணியின் கான்வே (3 ரன்), நீஷம் (6 ரன்), மிட்சல் (3 ரன்) ஆகிய முக்கியமான வீரர்கள் சோபிக்கவில்லை. கிளன் பிலிப்ஸ் (62 ரன்), வில்லியம்சன் (40 ரன்), ஆலன் (16 ரன்), சாண்ட்னர் (16 ரன்) ஆகியோர் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி ஆடினர். இறுதி ஓவரில் 26 ரன் தேவைப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணியின் சாம் கரன் மிக அற்புதமாக பந்து வீசினார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் க்ரூப் 1இல் ஐந்து புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களை முறையே வகிக்கின்றன.
இந்த குரூப்பில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி நியூசிலாந்து – அயர்லாந்து அணிகள், ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள், நவம்பர் 5ஆம் தேதி இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெல்லும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. அப்போது ரன்ரேட், எந்த இரண்டு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும் என முடிவுசெய்யும்.