55ம் நாள் :ஐபிஎல் 2024 – 14.05.2024
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றாது.
டெல்லி அணி (208/4, அபிஷேக் போரல் 58, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 57*, ஷாய் ஹோப் 38, ரிஷப் பந்த் 33, அக்சர் படேல் 14*, நவீன் உல் ஹக் 2/51) லக்னோ அணியை (189/9, நிக்கோலஸ் பூரன் 61, அர்ஷத் கான் 58*, க்ருணால் பாண்ட்யா 18, யுத்வீர் சிங் 14, க்விண்டன் டி காக் 12, இஷாந்த் ஷர்மா 3/23) 19 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் டெல்லி அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (பூஜ்யம் ரன்) முதல் ஓவர் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் போரல் (33 பந்துகளில் 58 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய ஷாய் ஹோப் (27 பந்துகளில் 38 ரன்), ரிஷப் பந்த் (23 பந்துகளில் 33 ரன்) ஆகியோர் 16.2ஆவது ஓவர் வரை ரன்ரேட்டை சீராகக் கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (25 பந்துகளில் 57 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் அக்ஸ்ர் படேல் (10 பந்துகளில் 14 ரன், 2 ஃபோர்) இருவரும் 20ஆவது ஓவர் வரை விளையாடி அணியின் ஸ்கோரை 208/4 என்ற நிலைக்கு கொண்டுவந்தனர்.
209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக ஆடவந்த லக்னோ அணியின் வீரர்கள் 4.1ஆவது ஓவருக்குள் கே.எல். ராகுல் (12 ரன்), க்விண்டன் டி காக் (5 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (5 ரன்), தீபக் ஹூடா (பூஜ்யம் ரன்) என வரிசையாக சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 4/44. அதன் பின்னர் ஆயுஷ் பதோனியும் (6 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு க்ருணால் பாண்ட்யா (18 ரன்), அர்ஷத் கான் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), யுத்வீர் சிங் (7 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் லக்னோ அணியின் வெற்றிக்கான நம்பிக்கையை தக்க வைக்கும் விதத்தில் ஆடினர்.
இருப்பினும் 19ஆவது மற்றும் 20ஆவது ஓவரை வீசிய முகேஷ் குமார் மற்றும் ரசிக் சலாம் இருவரும் திறமையாகப் பந்து வீசினர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 189 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 19 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இன்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. டெல்லி அணியின் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன.
ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் சிறப்பான ரன்ரேட்டுடன் நான் காவது இடத்தில் உள்ளது அந்த அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன.
அந்த இரண்டு ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் அணி தோல்வியடைந்தால், அதன் ரன்ரேட் இப்போது இருப்பதைவிடக் குறைந்தால் டெல்லி அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கிறது.
இந்த ஆட்டத்தின் முடிவு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இரண்டாவது இடத்திற்குத் தள்ளி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறச் செய்துவிட்டது.
டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை கௌஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
14.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
கொல்கொத்தா | 13 | 9 | 3 | 19 | 1.428 |
ராஜஸ்தான் | 12 | 8 | 4 | 16 | 0.349 |
சென்னை | 13 | 7 | 6 | 14 | 0.528 |
ஹைதராபாத் | 12 | 7 | 5 | 14 | 0.406 |
டெல்லி | 14 | 7 | 7 | 14 | -0.377 |
பெங்களூரு | 13 | 6 | 7 | 12 | 0.387 |
லக்னோ | 13 | 6 | 7 | 12 | -0.787 |
குஜராத் | 13 | 5 | 7 | 11 | -1.063 |
மும்பை | 13 | 4 | 9 | 8 | -0.271 |
பஞ்சாப் | 12 | 4 | 8 | 8 | -0.423 |