
52ம் நாள்: ஐபிஎல் 2024 – 11.05.2024
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
கொல்கொத்தா அணி (16 ஓவர்களில் 157/7, வெங்கடேஷ் ஐயர் 42, நிதீஷ் ராணா 33, ரசல் 24, ரிங்கு சிங் 20, ரமன்தீப் சிங் 17, பும்ரா 2/39, பியுஷ் சாவ்லா 2/28) மும்பை அணியை (16 ஓவர்களில் 139/8, இஷான் கிஷன் 40, திலக் வர்மா 32, ரோஹித் ஷர்மா 19, நமன் தீர் 17, சூர்யகுமார் யாதவ் 11, ஹர்ஷித் ராணா 2/34, வருண் சக்ரவர்த்தி 2/17, ரசல் 2/34) 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் மைதானத்தில் மழை பெய்தது. இதனால் டாஸ் 2045 மணிக்குத்தான் போடப்பட்டது. ஆட்டம் அணிக்கு 16 ஓவர்களாகக் குறக்கப்பட்டது.
இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் கொல்கொத்தா அணி முதலில் மட்டையாட வந்தது. இந்த அணியின் அதிரடியாக விளையாடும் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (6 ரன், முதல் பந்தில் ஒரு சிக்சர்) மற்றும் சுனில் நரேன் (பூஜ்யம் ரன்,கோல்டன் டக்) முதல் ஏழு பந்துகளில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்து; இது சுனில் நரேனுக்கு ஆஃப் ஸ்டம்பில் வீசப்பட்டது. நரேன் பந்து வெளியில் செல்கிறது என எண்ணி எந்த ஸ்ட்ரோக்கும் ஆடவில்லை; ஆனால் பந்து இன்ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்பை தாக்கியதால் நரேன் கிளீன் போல்டானார்.
நான்காவதாகக் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் (7 ரன்) ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வெங்கடேஷ் ஐயர் (21 பந்துகளில் 42 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்), நித்தீஷ் ராணா (23 பந்துகளில் 33 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஆண்ட்ரு ரசல் (14 பந்துகளில் 24 ரன்) ஆகியோர் கொல்கொத்தா அணியின் ஸ்கோரை சற்று நிலை நிறுத்தினர்.
இதற்குப் பிறகு ஆடவந்த ரிங்கு சிங் (12 பந்துகளில் 20 ரன்), ரமன்தீப் சிங் (8 பந்துகளில் 17 ரன்), மிட்சல் ஸ்டார்க் (2 ரன்) ஆகியோரால் ரன்ரேட்டை அதிகப்படுத்த முடியவில்லை.
இதனால் கொல்கொத்தா அணி நிணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது.
158 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் (22 பந்துகளில் 40 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (24 பந்துகளில் 19 ரன்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (11 ரன்) சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் 10 ஓவர் முடிவில் மும்பை அணி 81/2 என்ற நிலையில் இருந்தது,
இச்சமயத்தில் கொல்கொத்தா அணியின் ஸ்கோர் 97/4 என்பதாகும். இதற்குப் பின்னல் வந்த மும்பை அணியின் வீரர்கள் அதிரடி ஆட்டக்காரர்கள்தான்; இருந்தாலும் இன்று அவர்களின் ஆட்டம் எடுபடவில்லை.
ஹார்திகபாண்ட்யா (2 ரன்), டிம் டேவிட் (பூஜ்யம் ரன்), நெஹல் வதேரா (3 ரன்), நமன் தீர் (17 ரன்) என அனைவரும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லமல் ஆடினார்கள். இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் 8 விக்கட்டு இழப்பிற்கு 139 ரன்எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாள்ரும் தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
நாளை ஞாயிற்றுக்கிழமையாதலால் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
இரண்டாவது ஆட்டம் பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.
11.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
| அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
| கொல்கொத்தா | 12 | 9 | 3 | 18 | 1.428 |
| ராஜஸ்தான் | 11 | 8 | 3 | 16 | 0.476 |
| ஹைதராபாத் | 12 | 7 | 5 | 14 | 0.406 |
| சென்னை | 12 | 6 | 6 | 12 | 0.491 |
| டெல்லி | 12 | 6 | 6 | 12 | -0.316 |
| லக்னோ | 12 | 6 | 6 | 12 | -0.769 |
| பெங்களூரு | 12 | 5 | 7 | 10 | 0.217 |
| குஜராத் | 12 | 5 | 7 | 10 | -1.063 |
| மும்பை | 13 | 4 | 9 | 8 | -0.271 |
| பஞ்சாப் | 12 | 4 | 8 | 8 | -0.423 |





