
உலகக் கோப்பை டி20: முதல் அரையிறுதி ஆட்டம் – 09.11.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று
இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது
டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை (152/4, மிட்சல் 53, கேன் வில்லியம்சன் 46, கான்வே 21, நீஷம் 16, ஷாஹின் ஷா அஃப்ரிடி 2/24) பாகிஸ்தான் அணி (19.1 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 153 ரன், ரிஸ்வான் 57, பாபர் ஆசம் 53, ஹாரிஸ் 30, போல்ட் 2/33) ஏழு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இந்த உலகக் கோப்பை போட்டிகளில் தாங்கள் வெற்றி பெற்ற ஆட்டங்களில் எல்லாம் நல்ல தரமான வெற்றியைப் பெற்ற நியூசிலாந்து அணி இன்று ஒரு சாம்பியன் அணி போல ஆடவில்லை. அந்த அணியின் பேட்டர்கள் ரன் ரேட்டை அதிகப்படுத்த முடியவில்லை.
முதல் ஓவரிலேயே ஃபின் ஆலன் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடியும்போது கான்வே ஒரு அருமையான த்ரோவால் ரன் அவுட் ஆனார். வில்லியம்சன் (42 பந்துகளில் 46 ரன்), மிட்சல் (35 பந்துகளில் 53 ரன்) இருவரும் நன்றாக ஆடினர் ஆனால் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் அவர்களை அதிகம் ரன் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர்.
20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 152 ரன் எடுத்தது. 152 ரன் என்பது ஒரு எளிய இலக்கு எனச் சொல்ல முடியாது. ஆனால் நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங் இன்று மிக மிக மோசமாக இருந்தது. முதல் ஓவரில் பாபர் ஆசமின் கேட்ச் பிடிக்கப்படவில்லை. பவர்ப்ளேயில் பாகிஸ்தான் அணி 55 ரன் எடுத்தது.
கடைசி நாலு ஓவர்களில் சில விக்கட்டுகள் விழுந்தாலும் பாகிஸ்தான் அணி பதற்றம் இல்லாமல் ஆடி 19.1 ஓவரில் இலக்கை எட்டியது. நாளை அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளன. நாளை அடிலெய்டில் மழைக்கு வாய்ப்பில்லை. இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கையில் காயம் ஏற்பட்டதால் ஆடுவாரா என சந்தேகம் இருந்தது.
ஆனால் அவர் ஆடுவார் எனத் தகவல்கள் வருகின்றன. தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா அல்லது அவருக்குப் பதிலாக ரிஷப் பந்து விளையாடுவாரா என விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.
என்னுடைய கணிப்புப் படி தினேஷ் கார்த்திக் விளையாடுவார். இந்திய அணி வெற்றிபெற்று இறுப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்.