ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா?: கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்

சற்றுமுன் சென்னை

Stalin DMK - 2026

சென்னை:
ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா? என்று திமுக., துணைத்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவர், அழைக்கவும் மாட்டோம், அழைக்காமலும் இல்லை என்று தெளிவாகக் குழப்பினார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள், ஓ.பன்னீர்செல்வத்தின் தில்லி பயணம் என பரபரப்பான செய்திகள் தமிழகத்தில் உலுக்கி வரும் நிலையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில்,
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்விகள் கேட்கப் பட்டன. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அரசியலுக்கு வருவது என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் இருந்து….

ஸ்டாலின்: ரஜினி என்னைக் குறித்து, நல்ல நண்பர், நல்ல நிர்வாகி என்று குறிப்பிட்டதாக நான் அறிந்தேன். சோ என்னைக் குறித்து பாராட்டியுள்ளார். அவருடைய பாணியில் சொல்லப் போனால் மகிழ்ச்சி. அரசியலுக்கு வருவது என்பது அவரது தனிப்பட்ட முடிவு.

நிருபர்: ரஜினி திமுக.,வில் இணைய வேண்டும் என்று அவரை அழைப்பீர்களா?

ஸ்டாலின்: திமுகவுக்கு வரவேண்டும் என்று விரும்பினால் அது குறித்து அவர்தான் முடிவு எடுக்க முடியும். நாங்கள் அழைக்கவோ அல்லது அழைக்காமலோ இருக்கப் போவதில்லை. எந்த வற்புறுத்தல்களையும் அவர் ஏற்கப் போவதில்லை. அவர் ஒரு தனிப்பட்ட மனிதர், அவரே முடிவு எடுத்துக் கொள்வார்.

நிருபர்: ஆனால், ஒவ்வோர் அரசியல்வாதியும் ஊழல் கறை படிந்தவர்கள் என்று அவர் சொல்கிறார். (அது அவரையும் சேர்த்துதான்; திமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ரஜினி ஏற்கெனவே மறுப்பு தெரிவித்துள்ளார்)

ஸ்டாலின்: தமிழ்நாட்டில் கடந்த ஆறு வருடங்களாகத்தான் ஊழல் பிரச்னை பெருகியுள்ளது.

நிருபர்: பாஜக ரஜினியை ஈர்க்கும் முயற்சியில் உள்ளது…

ஸ்டாலின்: பாஜக.,வுக்கு தமிழ்நாட்டில் காலடி வைக்க ஏதோவொரு வழி தேவைப்படுகிறது. அதற்காக என்னவெல்லாமோ முயற்சி செய்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

நிருபர்: ஓ.பன்னீர்செல்வம் தில்லிக்குச் சென்றிருக்கிறார் பிரதமரைச் சந்திக்க…

ஸ்டாலின்: ஓபிஎஸ்ஸோ ஈபிஎஸ்ஸோ அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள தில்லி செல்கிறார்கள். மக்களைக் காப்பதற்காக அல்ல. இப்போது ஹிந்தி பிரச்னை உள்ளது. நீட் பிரச்னை உள்ளது. அதற்காகவெல்லாம் பிரதமரை அவர்கள் சந்திக்கவில்லை. ஓபிஎஸ் இங்கே திரும்பியதும், அவரிடம் சென்று இதனைக் கேளுங்கள்.

நிருபர்:தமிழ்நாட்டில் முன்னதாகவே தேர்தல் வரும் என்று நினைக்கிறீர்களா?

ஸ்டாலின்: தேர்தல் முன்னதாகவே வரலாம், வராமல் போகலாம். திமுக தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளது.

– என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.