இஸ்லாத்துக்கு மாறு; இல்லாவிட்டால் உன் வலது கையை வெட்டுவோம்: கேரள எழுத்தாளருக்கு மிரட்டல்

இந்தியா சற்றுமுன்

KP Ramanunni - 2026

கோழிக்கோடு:

இஸ்லாம் மதத்துக்கு மாறு; இல்லாவிட்டால் உன் வலது கை, இடது காலை வெட்டுவோம் என்று, புகழ்பெற்றா மலையாள எழுத்தாளர் கேபி ராமன் உன்னிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோடில் வசித்து வருகிறார் பிரபல நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ராமன் உன்னி (60). இவர் தம் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக, கேரள சாகித்ய அகடமி, வயலார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அவர் எழுதிய பல கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இவரது முதல் நாவலான ‘சுஃபி பறஞ்ச கத’ திரைப்படமாக எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று. அதில் ஓர் இஸ்லாமிய இளைஞனுக்கு இந்துப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பேசியிருப்பார்.

இந்நிலையில், அவருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அவருடைய கோழிக்கோடு வீட்டுக்கு ஆறு தினங்களுக்கு முன்னர் வந்த அந்தக் கடிதத்தை யார் அனுப்பினார்கள் என்பது தெரியாது. கடிதத்தில் அனுப்பியவர் பெயர் அல்லது அமைப்பின் பெயர் எதுவும் குறிப்பிடப் படவில்லை என்றாலும், அந்தக் கடிதம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் இருந்து அனுப்பப் பட்டிருப்பது, போஸ்ட்பாக்ஸ் சீல் வைத்து கண்டறியப்பட்டுள்ளது.

அந்த மிரட்டல் கடிதத்தில், “நீங்கள் இந்து மற்றும் இஸ்லாம் மதத்தை ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள். இது போன்ற எழுத்துகள் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும். காபிர்கள், இஸ்லாம் மீது நம்பிக்கையில்லாதவர்களுக்கு தவறான வழியைக் காட்டுவது போலுள்ளது. நீங்கள் 6 மாதத்துக்குள் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும். இல்லையென்றால் டிஜே ஜோசப்புக்கு நடந்தது போல், உங்களது வலது கையையும், இடது காலையும் வெட்டுவோம். உங்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படும்”என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

கடிதம் குறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய ராமன் உன்னி “கடிதம் 6 நாட்களுக்கு முன் வந்தது. மதத்தின் பெயரால் சண்டையிடுபவர்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக, கடந்த 2010 ஜூலை 4ம் தேதி, தோடுப்புழா புதிய ஆண்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த ஜோசப் வலது கை, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் துண்டிக்கப்பட்டது. எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுப்புழாவில் சர்ச் ஒன்றுக்கு ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனைக்குச் சென்று வீடு திரும்பிய போது, அவரது வலது கையை வெட்டினார்கள். வினாத்தாளில் கேட்கப் பட்ட ஒரு கேள்வி, தங்கள் மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி இவ்வாறு செய்தார்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகள். அதனை நினைவு கூர்ந்து, இந்தக் கடிதத்தில் ராமன் உன்னிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பிரச்னை குறித்து முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார். “கேரளம், படைப்பாளிகளின் உணர்வுகளை, அவர்களின் சிந்தனைகளை வெளிப்படையாக வரவேற்றிருக்கிறது. கருத்துச்சுதந்திரத்துக்கு எப்போதும் இடமளிக்கும் இங்கு, இது போன்று கொலை மிரட்டல் விடுக்கப் படுவதையும், சமூக வலைதளங்கள் மூலம் தாக்குதல் குறித்த செய்தி வெளியிடுவதையும் ஏற்க முடியாது. இந்த விஷயத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.