விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஐயனார் கோவில் ஆறு. விருதுநகர் மாவட்டப் பகுதியில் சுற்றுலாத் தலமாகத் திகழும் இங்கே, போதிய மழை இல்லாமல் ஆற்றுப் பகுதி தொடர்ச்சியாக வறண்டே காணப்படுகிறது
தமிழகம் முழுவதிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியிலும் எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று ராஜபாளையம் பகுதியில் இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. எனினும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லாமல் ஐயனார் கோவில் ஆற்றுப்பகுதி வறட்சியாக பாறைகள் மட்டுமே வெளித் தெரிந்து, வறண்டு காணப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் இராஜபாளையத்திற்கு குடிநீர் ஆதாரம் வழங்கக்கூடிய ஆறாவது மைல் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
சிறிது மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் ஆறாவது மைல் நீர்த் தேக்கத்திற்கு திருப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.