- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
50ம் நாள்: ஐபிஎல் 2024 – 09.05.2024
பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இன்று தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
பெங்களூரு அணியை (241/7, விராட் கோலி 92, ரஜத் படிதர் 55, காமரூன் கிரீன் 46, தினேஷ் கார்த்திக் 18, ஹர்ஷல் படேல் 3/38, வித்வத் கவேரப்பா 2//36) பஞ்சாப் அணி (181, ரிலீ ரோஸ்கோ 61, ஷஷாங்க் சிங் 37, ஜானி பெயிர்ஸ்டோ 27, சாம் கரண் 22, முகம்மது சிராஜ் 3/43, ஸ்வப்னில் சிங் 2/28, லாக்கி ஃபெர்கூசன் 2/29, கரன் ஷர்மா 2/36) 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. தொடக்க வீரர் டியு பிளேசிஸ் 2.2ஆவது ஓவரில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய வில் ஜேக்ஸ் 4.4ஆவது ஓவரில் 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனால் மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலி (47 பந்துகளில் 92 ரன், 7 ஃபோர், 6 சிக்சர்) 17.4ஆவது ஓவர் வரை விளையாடினார். அவரும் ரஜத் படிதரும் (23 பந்துகளில் 55 ரன், 3 ஃபோர், 6 சிக்சர்) இணைந்து அதிரடியாக விளையாடினார்கள்.
பத்து ஓவர் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 119 ரன் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. அரை மணி நேரத்திற்கு மழையும் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
மழைக்குப் பின்னர் பெங்களூரு அணியின் காமரூன் கிரீன் (27 பந்துகளில் 46 ரன்), தினேஷ் கார்த்திக் (7 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடினர். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 241 ரன் எடுத்தது.
பெங்களூரு அணியின் பேட்டர்கள் 19 ஃபோர் மற்றும் 16 சிக்சர்கள் அடித்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த வித்வத் காவேரப்பா இன்று பஞ்சாப் அணியில் விளையாடி தொடக்கத்திலேயே டியு பிளேசிஸ் மற்றும் வில் ஜேக்ஸ் விக்கட்டுகளை எடுத்தார். கடைசி ஓவரில் ஹர்ஷல் படேல் மூன்று விக்கட்டுகளை எடுத்தார். மற்றபடி பெங்களூரு அணியின் பேட்டர்கள் பஞ்சாபின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்கள்.
242 ரன் என்ற கடின இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் (4 பந்துகளில் 6 ரன்) மற்றும் ஜானி பெயிர்ஸ்டோ (16 பந்துகளில் 27 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய ரிலீ ரோஸ்கோ (27 பந்துகளில் 61 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஷஷாங்க் சிங் (19 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.
ஆனால் ஜிதேஷ் ஷர்மா (5 ரன்) மற்றும் லியம் லிவிங்க்ஸ்டோன் (பூஜ்யம் ரன்) இருவரும் இன்று ஜொலிக்கவில்லை. சாம் கரண் (16 பந்துகளில் 22 ரன், 2 ஃபோர்), அஷுத்தோஷ் ஷர்மா (8 ரன்), ஹர்ஷல் படேல் (பூஜ்யம் ரன்), ராஹுல் சாஹர் (ஆட்டமிழக்காமல் 5 ரன்), அர்ஷதீப் சிங் (4 ரன்) ஆகியோரால் இலக்கை எட்ட முடியவில்லை.
இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 181 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியத் தழுவியது.
பெங்களூரு அணியின் விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
09.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
கொல்கொத்தா | 11 | 8 | 3 | 16 | 1.453 |
ராஜஸ்தான் | 11 | 8 | 3 | 16 | 0.476 |
ஹைதராபாத் | 12 | 7 | 5 | 14 | 0.406 |
சென்னை | 11 | 6 | 5 | 12 | 0.700 |
டெல்லி | 12 | 6 | 6 | 12 | -0.316 |
லக்னோ | 12 | 6 | 6 | 12 | -0.769 |
பெங்களூரு | 12 | 5 | 7 | 10 | 0.217 |
மும்பை | 12 | 4 | 8 | 8 | -0.212 |
பஞ்சாப் | 12 | 4 | 8 | 8 | -0.423 |
குஜராத் | 11 | 4 | 7 | 8 | -1.320 |