சிவம் பேசினால் சவம் எழும் என்ற மகாகவியின் வரிகளுக்கு சொந்தமான வீரத்துறவி சுப்ரமண்ய சிவா நினைவு தினம் இன்று…
சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள் வ.உ.சி. என்ற கப்பலோட்டிய தமிழனும், சுப்பிரமணிய சிவாவும்.
‘எனது ஜாதி பாரத ஜாதி, எனது மதம் பாரதிய மதம், என் வழிபடு தெய்வம் பாரத மாதா’ என்று பாரத மாதாவுக்கு ஆசிரமம் அமைத்து, ஊர் ஊராகப் பிரசாரம் செய்து நாட்டுப்பற்றை ஊட்டி வளர்த்து 47-ல் நாம் விடுதலை பெற 41 வயதிலேயே வீரமரணம் எய்திய சிவா என்ற சுப்பிரமணிய சிவாவை மறக்க முடியுமா?
ஒருபுறம் வறுமை, மறுபுறம் தொழு நோய் என்ற இருபுறத் தாக்குதலுக்கு அஞ்சாமல், தேச பக்திக்கனலை மூட்டி அந்த தியாக வேள்வியில் கற்பூரமாகக் கரைந்த சுப்பிரமணிய சிவா, பிரிட்டிஷ் அரசுக்கு அடிமடியில் கட்டிய நெருப்பாகவே இருந்தார். ”சிவாவுக்குத் தங்க இடம் தந்து, உணவு தந்து உபசரித்த பெருங் குற்றத்திற்காக வ.உ.சிக்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிப்போம்” என்று பின்ஹே என்ற நீதிபதி தீர்ப்பனித்தார்.
4.10.1884 வத்தலகுண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பிராமண குடும்பமான நாகமய்யர் நாகலட்சுமி அம்மாளின் மகனாக சுப்பிரமணியன் அவதரித்தார். 12 வயது வரை மதுரையில் வாசம். பின் ஊட்டுப்புறை (ஏழை அந்தணப் பிள்ளைகளுக்கு உணவு தந்து படிக்க உதவும் கேரளத்துச் சத்திரம்)யில் திருவனந்தபுரத்தில் தங்கினார். கோவை புனித மைக்கேல் கல்லூரியில் ஒரு வருடம் படிப்பு 1899-ல் மீனாட்சியை மணந்தார்.
லார்டு கர்சான் (பாரதி வாக்கில் கர்சான் குரங்கு) வங்காளப் பிரிவினைத் திட்டம் கொணர்ந்தபோது வங்கம் மட்டுமல்ல இந்திய தேசமே கிளர்ந்தெழுந்தது. வறுமை ஓர்புறம் வாட்ட தேசப்பற்று மறுபுறம் இழுக்க, தேச பக்திக்கனல் மூண்டபோது வயிற்றுத்தீயைப் பொருட்படுத்தினாரா சுப்ரமண்யம்? ’ …..இல்லை.
லால், பால், பால் (லாலா லஜபத்ராய், பாலகங்காதர திலகர், விபின் சந்திபால்) என்ற முத்தலைச் சூலம் ஆங்கிலேயரை எதிர்த்து நின்றது. திருவனந்தபுரத்தில் இளைஞர்களைத்திரட்டிய சுப்பிரமணியம், ‘தர்ம பரிபாலன சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். திருவாஞ்கூர் சமஸ்தானம் அவரை அங்கிருந்து விரட்டிற்று. 1908-ல் தூத்துக்குடி வந்தார். வ.உ.சி என்ற வேளாளன் (உபகாரி என்ற பொருள்) நாட்டு விடுதலை, தொழிலாளர் நலன் என்ற இரண்டையும் இருகண்களாகக் கொண்ட சுப்பிரமணியத்திற்கு அடைக்கலம் தந்தார்.
இந்தியர்களைக் கூலி என்பர் ஆங்கிலேயர். அதிலும் தூத்துக்குடி கோரல் மில்லில் வேலைபார்த்த நமது சகோதரர்கள் கூலிக்காரர்களோடு கூட இல்லை. வாழ்நாள் அடிமைகள் என்று ஆங்கில அரசும் அதிகாரிகளும் நினைத்தனர். காலை 6 முதல் மாலை 6 மணி வரை வேலை. விடுமுறை கிடையாது. உணவு இடைவேலை இல்லை, ஊதியமோ மிகமிகக்குறைவு. சிறு தவறுக்கும் பிரம்படி பலமாக உண்டு.
வந்தனர் சிவமும் பிள்ளையும். போலீஸ் அதிகாரி பத்மநாப ஐயங்காரும் தன்வேலையைத்துறந்து இவர்களுடன் கை கோர்த்தார். துவங்கியது வேலை நிறுத்தம். சிவா 1908, பிப்ரவரி 23-ல் பேசிய உரை ரகசிய போலீஸ் மூலம் ஆங்கில அரசுக்குப் போனது.
ஆண்டுதோறும் இவ்வளவு தொகை இந்தியாவிலிருந்து போகிறது. நீங்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஐரோப்பிய முதலாளிகளின் நிதி நிலை மோசமாகும்.” என்றெல்லாம் எடுத்துச் சொன்னார் சிவா.
‘இயந்திரங்களுக்கு ஊறு செய்வது சரியில்லை. அறப்போராட்டம் வேலை நிறுத்தமே! என்று சுப்ரமண்யசிவா சொன்னது மூவாயிரம் வேலையாட்களின் மனதில் பதிந்தது’ என்றெல்லாம் ரகசியபோலீஸ் அறிக்கை அனுப்பியது.
1908 பிப்ரவரி 27-ல் வேலைநிறுத்தம் தொடங்கியது. முதன் முதலாக நடந்த வேலைநிறுத்தம் இது எனலாம். தூத்துக்குடி சப்கலெக்டர் ஆஷ்துரை எத்தனையோ வழிகளில் தடுத்தும் வந்தேமாதரம் கோஷத்துடன் போராட்டம் வலுவடைந்தது. மக்களின் ஆதரவு நிதியுடன் போராட்டம் வெற்றியடைந்தது. (9 நாளிலேயே; அதுவும் தொழிற்சங்க இயக்கம் வலுவடையாத காலத்திலேயே சிவா, வ.உ.சி பத்மநாப ஐயங்கார். மூவருடைய உழைப்பும் எத்தகையதாக இருந்திருக்கும்!)
9.3.1908 விபின் சந்திரபால் விடுதலை பெற்றதைக் கொண்டாட பாரதி, வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் கூட்டங்கள் நடத்தினர். வீரவுரைகள் ஆற்றிய சிவா, வ.உ.சி. மார்ச் 12-ல் கைதாயினர். ‘தலைவர்களை விடுதலை செய்’ என்று மக்கள் முதன் முதலாக அரசியல் வேலைநிறுத்தம் செய்தனர். 7.7.1908-ல் நீதிபதி பின்ஹே, வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் சுப்பிரமணிய சிவாவுக்கு 10 வருடக் கடுங்காவல் தண்டனையும் அளித்தார்.
1915 மே 15-ல் சுப்பிரமணிய சிவாவின் மனைவி மீனாட்சி காசநோயால் இறந்தார். முழு சன்யாசியானார் சிவா. 1921-ல் செட்டிநாட்டுக் காரைக்குடியில் பாரதமாதா ஆசிரமம் நிறுவினார்.
1921 நவம்பர் 17-ல் கைதானார். இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் விடுதலை பெற்று, பாரதமாதா ஆசிரமத்தை உயிர்ப்பித்தார். திரு.வி.க தனது நவசக்தியில் அறிக்கை வெளியிட்டு தாய் நாட்டுச்சேவைக்கு பொது வாழ்வில் நாட்டமுள்ள தொண்டர்கள் தேவைஎன்று எழுதினார்.
‘வந்தேமாதரம், அல்லாஹு அக்பர்’ இரண்டும் இருபுறம் அச்சிடப்பட்டு பாப்பாரப்பட்டி பாரதாமாதா ஆசிரம பிரதிக்ஞைப் பத்திரம் வெளியானது. தருமபுரி பாப்பாரப்பட்டி நண்பர்கள் பேருதவி செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
சின்னமுத்து முதலியார், தீர்த்தகிரி முதலியார், ஆகியோரை நல்ல நண்பர்களாகப் பெற்றிருந்த சிவா ஸ்வதந்திரானந்தர் என்ற பெயருடன் காவியுடை உடுத்தி பாரதமாதா கோவில் கட்டத் திட்டமிட்டார்.
புலனழுக்கற்ற அந்தணர்:
- ‘அந்தணர் என்போர் அறவோர்’ இது வள்ளுவர் பிற உயிர்கள் வாழத் தான் முனைந்து பாடுபட்ட அந்தணர் சிவா.
நூலாசிரியர் பத்திரிகை ஆசிரியர்.
தொழிற்சங்கம் இல்லாமலேயே பாட்டளிகளை ஒன்றாக்கியவர்.
பொதுவுடைமைவாதி.
தனித் தமிழில் கட்டுரை எழுதுவோருக்கு 5 ரூபாய் பரிசு என்று 1915-லேயே அறிவித்த தனித்தமிழ்ப் பற்றாளர்.
‘ஒன்று எங்கள் ஜாதியே’ என்று திருமூலர் வழியில் நடந்த சித்தர்.
எந்த நேரமும், பாரத விடுதலை, பாரத மாதா வழிபாடு என்று வாழ்ந்த அப்பழுக்கற்ற துறவி.
-இன்னும் வீரத்துறவி சுப்பிரமணிய சிவா குறித்து எவ்வளவோ எழுதலாம்.
நாட்டு விடுதலைக்குப் பேச்சு, எழுத்து, இதழியல், நாடகம், நடிப்பு என்ற பல துறையிலும் தொண்டு செய்த சுப்பிரமணிய சிவம் அடுத்தடுத்த சிறைவாசம், தன் உடல்நலத்தைக் கவனிக்காமல் ஈடுபட்ட விடுதலைப் போராட்டம், வறுமை இவற்றால் நோயுற்றார்.
இவர் காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிர வாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது.
எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார்.
இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்த சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
-கவியரசர் கண்ணதாசன்
தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி சென்று அந்தத் தூய வீரத்துறவி சிவாவின் சமாதியைக் கண்டு தொழுது, ‘பாரத் மாதா கீ ஜய்’ என்று சொல்லிவிட்டு வரலாமே!
- பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன்