பத்திரிகைகளில் படிக்கும் பெயர்ச்சி பலன்கள் ஏன் நமக்கு அப்டியே நடக்க மாட்டேங்குது..!? காரணம் இதுதான்!

நம்மில் பலர் வார மாத பத்திரிகைகளில் வரும் குரு, ராகு கேது, சனிப் பெயர்ச்சி கிரக பெயர்ச்சி பலன்கள் புத்தகத்தை படித்துவிட்டு நல்ல பலன்கள் கிடைக்கும் னு போட்டுருந்தாங்களே ஒன்னும் நடக்கலயே னு புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.. அது ஏன் அப்படி தெரியுமா?

எல்லாம் நமது ஜாதகத்தைப் பொருத்துதான் அமையும்! குறிப்பா… அவரவர் ஜாதகத்தில் அப்போது நடந்து கொண்டிருக்கும் தசா புக்தி காலத்தில் எது நடக்குமோ அதான் நடக்கும்.

தசா புத்தி சிறு விளக்கம்:  திசை என்பது நவகிரகங்களும் நம்மை ஆட்கொள்ளும் அல்லது ஆட்டிப்படைக்கும் காலம் எனலாம். இந்த காலம் கிரகத்திற்கு கிரகம் வேறுபடும்.பொதுவாக ஒவ்வொரு கிரகத்திற்க்கும் அதனுடைய திசை காலம் வேறுபடும்.

இந்த காலம் மனிதனின் ஆயுள் அடிப்படையில் நம் முன்னோர்கள் வகுத்தனர். அதாவது 120 ஆண்டுகள். இப்பொழுது யாரும் அவ்வளவு காலம் வாழ்வதில்லை என்றாலும் சராசரியான மனிதனின் ஆயுள் 120 என்ற அடிப்படையில் வகுத்துள்ளனர். அது எப்படியெனில்

சூரியனுடைய திசை காலம்- 6 வருடம்
சந்திரன் ” – 10 வருடம்
செவ்வாய் ” – 7 வருடம்
ராகு ” – 18 வருடம்
குரு ” – 16 வருடம்
சனி ” – 19 வருடம்
புதன் ” – 17 வருடம்
கேது ” – 7 வருடம்
சுக்கிரன் ” – 20 வருடம்

ஆக மொத்தம் – 120 வருடங்கள்

இது நவகிரகங்களின் தசா காலம் ஆகும். அனைவருக்கும் ஆரம்ப திசை சூரிய திசையாக இருக்காது. பின் நமக்கு உரிய ஆரம்ப திசையை எப்படி கண்டு பிடிப்பது எனக்கேட்டால், நமது நட்சத்திரத்தை கொண்டு கண்டறியலாம்.

அது எப்படியெனில், ஒவ்வொரு கிரகத்திற்க்கும் 3 நட்சத்திரம் வீதம் மொத்தம் 9 கிரகத்திற்க்கும் 27 நட்சத்திரங்களை பிரித்துள்ளனர். அந்த 3 நட்சத்திரத்திற்கும் அந்த குறிப்பிட்ட கிரகம் தான் அதிபதி.

அஸ்வினி, மகம், மூலம் -கேது
பரணி, பூரம், பூராடம் – சுக்கிரன்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்- சூரியன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்- சந்திரன்
மிருகசீரிஷம்,சித்திரை, அவிட்டம் – செவ்வாய்
திருவாதிரை, சுவாதி, சதயம் – ராகு
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – குரு
பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சனி
ஆயில்யம், கேட்டை, ரேவதி – புதன்

உதாரணமாக, ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் சதயம் எனில் அவர்களுக்கு ஆரம்ப திசை ராகு திசை. அதன் பின் குரு திசை,சனி திசை என வரும். எந்த திசை ஆரம்பமோ அதற்கு அடுத்ததில் இருந்து தொடரும்.

சரி சதயம் என்று கூறிவிட்டோம், ஆரம்ப திசை ராகு என தெரிந்தது,ராகு திசை 18 வருடம்,அந்த 18 வருடமும் அப்படியே குழந்தைக்கு முதலில் இருந்து ஆரம்பம் ஆகுமா என கேட்டால் இல்லை.

குழந்தை கர்பத்தில் இருக்கும்போதே இந்த திசை ஆரம்பித்துவிடும். ஆகையால் அது எவ்வளவு சென்றது என கணக்கிட வேண்டும். அந்த கணிதம் தான் கர்ப செல் இருப்பு.

சரி 18 வருடம் எனில், 10 மாதம் கர்பத்தில் போக மீதம் உள்ள வருடத்தை அதாவது 17 வருடம் 2 மாதத்தை அப்படியே போட்டுக்கொள்ளலாமே அதற்கு எதற்கு கணக்கு எனக்கேட்கலாம்.

அதாவது ஒருவருக்கு ராகு திசை ஆரம்பம் எனில் போன ஜென்மத்தில் அவர் ராகு திசையில் இறந்திருப்பார், அப்போது எத்தனை வருடம் ராகு திசை சென்றது என கண்டறியவே அந்த கணக்கு.

புத்தி என்பது, ஒவ்வொரு திசையிலும் நவகிரகங்களும் தன் ஆதிக்கத்தை செலுத்தும். உதாரணம்,ராகு திசை 18 வருடம் எனில், அதில் வரும் புத்திகளாவன: ராகு புத்தி, குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி, கேது புத்தி, சுக்கிர புத்தி, சூரிய புத்தி, சந்திர புத்தி, செவ்வாய் புத்தி.

நீங்க பிறந்த நட்சத்திரம் – சித்திரைனு வச்சுக்கோங்களேன் – நீங்கள் , பிறந்ததும் -முதலில வரும் தசை – செவ்வாய் தசை. அதன் பிறகு , ராகு தசை , அப்புறம் – குரு , சனி , புதன் தசை வரும். அதுக்கு அப்புறம் – மேலே போகணும் – கேது தசை , சுக்கிரன், சூரியன்… இப்படியே வரணும்

இப்படி ஒரு சுற்று முடிய – 120 வருஷங்கள் ஆகும். இதனால் , எல்லாருக்கும் , எல்லா திசையும் வாழ்க்கையில் வருவது இல்லை. ஏனெனில் 120 வருடம் வரை நம்மில் பலரும் இப்பூமியில் வாழ போவது இல்லை… உதாரணத்துக்கு , ஒருத்தருக்கு ஜாதகத்திலே சுக்கிரன் – நல்ல நிலையில் இருக்கும் னு வைச்சுக்குவோம். ஆனா , அவர் பிறந்தது கார்த்திகை நட்சத்திரம் னு வைச்சுக்கோங்களேன். அவரு, கிட்டத்தட்ட் – நூறு வருஷம் முடிச்ச பிறகு தான், சுக்கிர தசையை பார்க்க முடியும். அவருக்கு சுக்கிர தசை நல்லா இருந்தும், வயதான காலத்தில் வருவதால் பிரயோஜனம் இல்லை.

மனுஷன் செஞ்ச பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப , சரியாய் இந்த தசை நடக்கும். ..எப்படி எல்லாம் “செக்” வைக்கிறாங்க பாருங்க…

ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் 4 பேருக்கும் வெவ்வேறு திசையும், தசாபுத்தியும் நடக்கும். ஜாதகத்துக்கு ஏற்ப அவர்களின் பிறப்பு நட்சத்திற்கு ஏற்ப திசையும், தசாபுத்தியும் மாறுபடும். அந்தவகையில், நமக்கு தற்போது எந்த திசை நடைபெறுகிறது என்பதை ஜாதகப்படி தெரிந்துகொண்டு அதற்கேற்ப தெய்வதை வழிபட்டு வந்தால், நமக்கு ஏற்படும் தடைகளை தகர்ந்து வாழ்வில் முன்னேறலாம்.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் சிலருக்கு பிறவி ஜாதகப்படி சில கிரகங்கள் கெட்ட இடத்தில் இருந்து பிறப்பு ஜாதக அமைப்பு படி கெட்ட பலன்களை அளித்து கொண்டிருக்கும்.. அந்த கிரக தசை வரும் போது அந்த தசை காலம் முழுவதுமே கெட்ட பலன்களை, சுமாரான பலன்களையே கொடுக்கும். அந்த தசை நடக்கும் போது கோச்சார ரீதியான ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகியவை நல்ல இடத்திற்கு வந்தாலும் ஒரு முன்னேற்றம், நல்ல பலனோ நடக்காது.

இதனால் தான் நம்மில் பலர் பத்திரிகைகளில் கிரக பெயர்ச்சி பலன்கள் புத்தகத்தை படித்துவிட்டு நல்ல பலன்கள் கிடைக்கும் னு போட்டுருந்தாங்களே ஒன்னும் நடக்கலயே னு புலம்பித் தள்ளிக்கொண்டிருக்கிறோம்..

ஒருவரின் நேரம் எப்படி இருக்கிறது என்று அவரின் பிறவி ஜாதகத்தை வைத்து பார்க்க வேண்டும், ராசிபலன் புத்தகங்களை வைத்து அல்ல என்று இதனால் தான் கூறுகிறார்கள்.

அதே சமயத்தில் ஏதாவது ஒரு கிரகம் ஒருவருக்கு ஜாதகப்படி நல்ல இடத்தில் அமைந்து அந்த கிரகத்தின் தசை வரும் போது ராஜவாழ்க்கை தான். அந்த தசை முடியும் வரை அவர் ஜாதகபுத்தகத்தை கையில் எடுக்க வேண்டியதில்லை. நல்ல தசை நடைபெற்றால் அவருக்கு கோச்சார ரீதியாக வரும் கண்ட சனி, ஏழரை சனி, அட்டம சனி, அட்டம குரு போன்ற கெட்ட பலன்களை கொடுக்கும் பெயர்ச்சி சஞ்சார காலங்களிலும் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது..

ஜாதகப்படி சிலருக்கு தொடர்ச்சியாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட வயதில் இருந்தோ நல்ல தசை ஆரம்பிக்கும்…இது சிலருக்கு வாழ்நாள் முழுவதுமோ, வாழ்க்கையில் ஒரு பகுதியாகவோ இந்த நல்ல தசை காலம் இருக்கும்.

இதை வைத்து தான் நம்மில் பலர் அடுத்தவர்களை பார்த்து பெருமூச்சு விட்டு பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறோம். அவன் எந்த கோவிலுக்கும் போவதில்லை, வாழ்க்கையில் எச்சி கையால் காக்கா கூட விரட்ட மாட்டான்,நல்ல காரியம் னு இதுவரை அவன் எதையும் செஞ்சத பார்த்ததே இல்லை இருந்தாலும் செழிப்பாக எந்த கஷ்டமும் இல்லாம கார் பங்களா என சொகுசாக வாழ்கிறான்.

நாம் கோவில் கோவிலா சுத்துறோம் நமக்கு ஒன்னுமே நல்லது நடக்க மாட்டேங்குது என்கிற பல பேரின் புலம்பலுக்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் இதுவே. ஒருவருக்கு குரு வும், சுக்கிரனும் நல்ல இடத்தில் ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே இத்தசைகள் வரும் போது ராஜ யோகத்தை கொடுக்கும். இல்லாவிட்டால் குருதிசை வந்தாலும் சுக்கிர தசை வந்தாலும் வானில் இருந்து எதுவும் பொத்துகிட்டு விழுவதில்லை.

சிலருக்கு ஜாதகத்தில் குரு, சனி, புதன் கிரகங்கள் நல்ல இடத்தில் இருக்கும். இதனால் குரு திசை 16 வருடம்,சனி தசை 19 வருடம், புதன் திசை 17 வருடம் என ஒருவரின் வாழ்க்கையின் பெரும் பகுதி பேரரச வாழ்க்கையை கொடுக்கும். பெரும்பாலான பணக்காரர்கள் ஜாதகத்தில் இப்படித்தான் அவரின் ஜாதகப்படி கிரகங்கள் நல்ல இடத்தில் இருந்து அந்த திசையில் நல்ல நிலைமைக்கு தூக்கி விட்டு விடும்.

சிலர் பணக்காரராக செல்வ செழிப்புடன் இருப்பார்கள். திடீரென பிச்சைக்காரனாக எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள்.. இதெல்லாம் மோசமான திசை வரும் போது வரக்கூடிய நிகழ்வுகள்.

இது தெரியாமல் எவனோ நமக்கு செய்வினை வச்சிட்டான், சூனியம் வச்சிட்டான் னு விவரம் தெரியாமல் புலம்புகிறோம். பொதுவாக நல்ல திசை நடக்கும் போது பல லட்சம் ரூபாயை செலவழித்து நம்மை அழிக்க ஏதாவது தாந்திரீக பூஜைகளை நம் எதிரிகள் செய்தாலும் அது நம்மை எதுவும் செய்ய முடியாது.

அதேசமயம் மோசமான தசை நடைபெற்றால் ஏதாவது 100 ரூபாய் செலவழித்து சின்ன பூஜையை செய்து நமக்கு எவனாச்சும் செஞ்சி விட்டால் அது நம்மை நிர்மூலமாக்கி விடும். பொதுவாக இதைத்தான் நம்மில் பலர் அவனுக்கு நல்ல நேரம் நடக்கிறது என்று பேச்சு வழக்கில் கூறுகிறோம்.

சரி அப்படியென்றால் ஒருவருக்கு சனி தசையோ புதன் தசையோ வருகிறது. அது அவருக்கு கெட்ட பலன்களை அளிக்கும் தசை எனில் அந்த கிட்டதட்ட 19 வருடங்களுக்கு வாழ்க்கையில் ஒன்றுமே நடக்காதா என்ற கேள்வி வருகிறது.

அந்த தசைக்குரிய பொதுவான பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும், ஜாதக ரீதியில் ஜாதக கட்டங்களை பார்த்து தனிப்பட்ட சில பரிகாரங்களை செய்து அந்த தசையை யோகமான தசை ஆக மாற்ற முடியும். ஆனால் அதற்குரிய சரியான பரிகாரங்களை செய்வதும் கடினம். முறையான அந்த பரிகாரங்களை கணித்து கூறும் ஞானியர் மிக மிகக் குறைவே..

இது பொது பரிகாரங்கள்.

ஜாதகருக்கு தற்போது எந்த திசை நடப்பதாக இருந்தாலும் முதலில் விநாயக பெருமானை வழிபட்டு பின்பு, எந்த திசை நடக்கிறதோ அந்த திசைக்கேற்ற இறை வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

• சூரிய திசை – தொடர்ந்து சிவபெருமானை வழிபட்டு வந்தால் பிணிகள் நீங்கும்.

• சந்திர திசை – லோக நாயகியான அம்பிகையை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

• செவ்வாய் திசை – முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் அடையலாம்.

• புதன் திசை – மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்ய வேண்டும். தொடர்ந்து வழிபட விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

• வியாழன் திசை – தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்ய வாழ்வில் பல நல்ல திருப்பங்களை காணலாம்.

• சுக்ர திசை – சக்தி, அபிராமி வழிபாடு செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

• சனி திசை – அனுமனை வழிபடுவதால் தடைகள் அனைத்தும் அகலும்.

• ராகு திசை – துர்க்கையை வழிபட மனகஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

• கேது திசை – விநாயக பெருமானை வழிபட்டு வர தடைகள் அகலும்.

• இதைத் தவிர செவ்வாய் திசை, சனி புத்தி நடப்பவர்களும், வியாழ திசை, சுக்ர புத்தி நடப்பவர்கள் மற்றும் இதுபோல பகை கிரக திசாபுத்தி ஆதிக்கம் நடைபெறும் காலத்தில் பைரவர் வழிபாடு, வராஹி வழிபாடு, பிரதோஷ வழிபாட்டினை செய்து வந்தால் இன்னல்கள் நீங்கும்.

நம்பிக்கையுடன் இறை வழிபாடு செய்து வந்தால் தசா புத்திகளால் ஏற்படும் தடைகள் மற்றும் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

இதில் இன்னும் அந்தரம், சூட்சசம் என்று புக்தி யில் உட்பிரிவுகள் உண்டு, அதிலும் நவகிரகங்களும் மேற்கூறியது போல மாதக் கணக்கில் பிரிந்து பிரிந்து இடம் பெறும்.

  • பகிர்வு….

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...