இலங்கையில் வெடித்த குண்டுகள்… நம்மிடம் எழுந்த கேள்விகள்…!

பயங்கரவாதம் என்ற பெயரில் போரும், போர் என்ற பெயரில் பயங்கரவாதமும் இந்த உலகிற்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள் எனது இந்த கார்ட்டூன் பதிவுகளை உங்களால் முடிந்தவரை இன்று உலகமெல்லாம் விரிந்து பரந்திருக்கும் தமிழ் சகோதரர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன் .

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தில் கிறிஸ்துவ தேவாலயங்கள் , பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் என 8 இடங்களில் கிட்டத்தட்ட நாடு முழுவதும் மதத்தின் பெயரால் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதுவரை 300 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ( Srilanka National Thawheed Jamaat, SNTJ ) என்ற இயக்கம் இதை செய்திருக்கிறது என்றும் இவ்வளவு பெரிய தாக்குதலை ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பின் உதவியுடன்தான் SNTJ .நடத்தி இருக்கும் என்றும் இலங்கை அரசு சார்பாக அறிவிப்பு வந்திருக்கிறது. இதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக IS பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்று இருக்கிறது.

சரி! எனது கேள்விக்கு வருகிறேன்! எது பயங்கரவாதம் ? 2009 – ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் கொத்து கொத்தாக கொத்து வெடிகுண்டு போட்டு ஈழத்தமிழர் இனத்தையே கொன்று அழித்தார்களே அது பயங்கரவாதம் இல்லையா ? ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்களே அது பயங்கரவாதம் இல்லையா ? போர் என்ற பெயரில் இவ்வளவு பெரிய கொடூரத்திற்கு தேவையான பயிற்சியும் ஆதரவும் அளித்த சோனியா தலைமையிலான ஐ.மு.கூ அரசு செய்தது பயங்கரவாதமில்லையா ? . ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய நேரத்தில் வெளியேறி மன்மோகன் தலைமையிலான அன்றைய ஆட்சியை கவிழ்த்து இருந்தால் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தவிர்த்திருக்கலாமே. செய்ததா திமுக? இவை அத்தனையும் வாய் பொத்தி,கை கட்டி நின்று வேடிக்கை பார்த்த தி.மு.க-வின் செயல் பயங்கரவாதமா அல்லது பக்கவாதமா?
இத்தனைக்கும் இலங்கை காவல்துறையும் உளவுத்துறையும் 10 நாட்களுக்கு முன்பே தன் நாட்டில் உள்ள முக்கியமான கிறிஸ்துவ தேவலாலயங்களை தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று எச்சரித்திருக்கிறது. இவ்வளவு தெரிந்தும் கூட அதுவும் 200 வருடம் மிகப்பழமையான பிரசித்திப் பெற்ற ஒரு தேவாலயத்தை அதிகபட்சம் 300 … 400 பேர் (?) கூடக் கூடிய ஒரு தேவாலத்தைக் கூட காக்க முடியாத ஒரு நாடு 2009 -இல் எப்படி ஒரு இனத்தையே அழித்தொழித்து ?!தெரியாமல் தான் கேட்கிறோம் ,இதற்குமா பக்கத்து நாடு பயிற்சி அளிக்க வேண்டும் ? ஆயுதப் பயிற்சி முதல் ராடார் வரை அமைத்து தர வேண்டும் ? இந்த ஒரு ஆதாரம் போதாதா ? ஈழ இனப்படுகொலையில் அப்போதைய சோனியா தலைமையிலான ஐ.மு.கூ அரசு எவ்வளவு பெரிய பங்காற்றியிருக்க முடியும் என்று ?! இதே சூழல் தமிழகத்தில் இருந்தால் அந்த ஏரியா காவல் நிலையம் மட்டுமே போதும்.தேவாலயம் தேடி வந்தவர்களை பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்திருப்பார்கள்!

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே “தேச பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டது. எனது ஆட்சியாக இருந்தால் இத்தகைய தாக்குதல் நடந்திருக்கவே செய்யாது” என்று பேசியிருக்கிறார்! என்ன சொல்ல வருகிறார் இவர்? இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை என்ற அழிக்கிறேன் பெயரில் இலங்கையிலுள்ள மொத்த இஸ்லாமியரையும் அழிப்பேன் என்கிறாரா?

SNTJ இதற்கு முன்பு பெரிய அளவில் எந்தத் தாக்குதலும் நடத்தியதில்லை. கடந்த வருடம் இலங்கையிலுள்ள புத்தர் சிலைகளை உடைத்ததன் மூலம் மூலம் தான் பிரபலமானது என்று செய்திகள் கூறுகின்றன! ஆச்சரியம் இதுதான்! இதையே தான் இதுவரை இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் செய்தனர்! ஹிந்து மத கடவுளர்கள் சிலைகளை அகற்றி ஹிந்துக் கோயில்களை பௌத்த விகார்களாக மாற்றினர்! இது பயங்கரவாதம் இல்லையா?

சரி! சர்வதேச அரசியலுக்கு வருவோம் ! Biological weapons வைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டி ஈராக் மீது போர் தொடுத்து 66,000 பொது மக்களை கொன்று குவித்ததே (இது குறைந்த பட்ச கணக்கு) அமெரிக்கா அது பயங்கரவாதமில்லையா ? ஈராக் போருக்குப் பின் சதாம் உசேன் Biological weapons வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சிறு ஆதாரம் கூட அமெரிக்காவால் இன்றுவரை தர முடியவில்லை ! சரி, உலக நாடுகள் என்ன நினைக்கும் என்ற நோக்கில் பொய்யாகக் கூட ஏதாவது ஆதாரம் கொடுக்க முயற்சித்திருக்கலாமில்லையா ? இல்லையே ! அதை தட்டிக் கேட்க எந்த நாடும் இல்லை… எந்த நாதியும் இல்லை! ஏனைய நாடுகளின் இந்த மௌனம் பயங்கரவாதம் இல்லையா ?இதோ சென்ற மாதம் ( மார்ச் -15 ) நியூஸிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் நகரில் 2 மசூதிகளின் மீது தொழுகை நேரத்தின் போது நடந்த ஒரு தனி மனிதனின் கொலை வெறி தாக்குதலில் 50 பேர்கள் பலியானார்களே! மயிரிழையில் வங்காள தேச கிரிக்கெட் அணி உயிர் தப்பியது. தாக்குதல் நடத்தியவன் எந்த இயக்கத்தை சார்ந்தவனும் அல்ல! பிரெண்டன் ஹாரிசன் டாரெண்ட் ( Brenton HarrizonTarrant ) என்ற 28 வயது இளைஞன் தான் இந்த கொடூர தாக்குதலை நடத்தி முடித்திருக்கிறான்! SNTJ என்று கூறுவதுபோல் இவனை ‘BHT’ என்ற ஒரு இயக்கமாக பார்க்க முடியாது! ஏனென்றால் இவன் ஒரு தனிமனிதன்!

ஆம்! இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பல நாடுகளுக்கு பயணித்திருக்கிறான்! நிறவெறி, மதவெறி சம்பந்தமான பலரது பேச்சுக்களை கேட்டிருக்கிறான்… உள்வாங்கியிருக்கிறான்! அத்தகைய விஷ போதகர்களின் போதனைகள் பயங்கரவாதம் இல்லையா? உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு யாரோ ஒரு சிலர் செய்த விஷ போதனைகள்தான் அவனுக்குள் வெறி ஏற்றியிருக்கிறது. அந்த விஷ போதகர்கள் பயங்கரவாதிகள் இல்லையா ?

கொடூரமான பொருத்தம் இதுதான்! நியூஸிலாந்தில் தாக்குதல் நடந்த ஊரின் பெயர் CHRIST CHURCH..! இலங்கையில் தாக்குதல் நடந்த இடத்தின் பெயர் CHRIST CHURCH..! ஒரே வித்தியாசம் நியூசிலாந்தில் தாக்குதல் நடத்தியவன் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவன். பலியானவர்கள் இஸ்லாமியர்கள். இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள். பலியானவர்கள் கிறிஸ்தவர்கள்.

சரி! சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்! மனித தவறுகள் எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன! ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அதிர்ச்சி ,உலகத் தலைவர்கள் கண்டனம் …என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன .உண்மை மட்டுமல்ல சரியானதும் கூட! இந்தக் கொடூர தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் , இலங்கையில் ஒரு கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது அதே நேரத்தில்,அதே கணத்தில் இங்கிலாந்தில் இருந்து கொண்டு தொலைக்காட்சியில் அதை கண்டு களிக்கலாம் என்ற அளவிற்கு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் காலம் இது ! ஹிட்லர் வாழ்ந்த காலம் போல் அல்ல ! ஆனாலும் ஹிட்லருக்கு எந்த விதத்திலும் நான் குறைந்தவன் அல்ல என்று ராஜபக்சே அரசும் சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒரு வல்லரசும் ஓர் இனத்தையே கொன்று ஒழித்ததை உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கொடுமை, ஈழத் தமிழர்களை தவிர உலகில் வேறு எந்த இனத்திற்காவது நடந்திருக்குமா? அனாதைகளாக கொன்றொழிக்கப்பட்டார்களே நம் சகோதரர்கள்… அதை மறக்க முடியுமா? இப்படி எத்தனையோ கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம்!

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது ஐ.மு.கூ -வில் இருந்து ஐ.நா வரை செய்தவை என்ன ? ஈராக் போரின்போது அமெரிக்காவிலிருந்து ஐ.நா. வரை செய்தது என்ன? நான் வரைந்த கார்ட்டூன்களை தினம் ஓரிரண்டு என தமிழ் சமூகத்தின் பார்வைக்கு வைக்கிறேன். தினம் மூன்று கார்ட்டூன்கள் என்ற விகிதத்தில் முதலில் ஈழப்போரின் போது வரைந்த கார்ட்டூன்கள்… பின்னர் ஈராக் போரின் போது வரைந்த கார்ட்டூன்கள்…

எந்த ஒரு தனி மனிதனும், ஆட்சியாளரும், நாடும் இத்தகைய தவறுகளை இனி செய்யக்கூடாது என்ற நோக்கில் மட்டுமே இவைகளை உங்கள் முன் காட்சிப் படுத்துகிறேன். மற்றபடி எனக்கு எந்தக் கட்சியும் கிடையாது எந்த உள்நோக்கமும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்! அதை கடந்த காலத்தில் நான் வரைந்த கார்ட்டூன்களை பார்க்கும் பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

ஆம்! 1990 இல் இருந்து நியூஸ் டுடே, துக்ளக், கல்கி, சாவி, தினமணி என்று கடந்த 30 ஆண்டுகாலம் நான் வரைந்த கார்ட்டூன்கள் கிட்டத்தட்ட 17000. அவற்றில் எனது கைகளில் இருக்கும் கார்ட்டூன்களில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது உங்கள் கண்முன் காட்சிப்படுத்த இருக்கிறேன் ! அதற்கான இணையதளமும் தயார்! 30 வருட தமிழகம் மற்றும் தேசிய அரசியல் வரலாற்றை எனது கார்ட்டூன்கள் மூலமாக படக்கதையாகவே திரும்பிப் பார்க்கலாம். அடுத்த தலைமுறையினரும் படிக்கலாம்!

பயங்கரவாதம் என்ற பெயரில் போரும், போர் என்ற பெயரில் பயங்கரவாதமும் இந்த உலகிற்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள் எனது இந்த கார்ட்டூன் பதிவுகளை உங்களால் முடிந்தவரை இன்று உலகமெல்லாம் விரிந்து பரந்திருக்கும் தமிழ் சகோதரர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன் .

அன்புடன்,
மதி

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...