spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeபுகார் பெட்டிவரம்பு மீறுகின்றனர் நீதிபதிகள்: அ.சவுந்தரராசன்

வரம்பு மீறுகின்றனர் நீதிபதிகள்: அ.சவுந்தரராசன்

a soundarrajan citu

வாடி வதங்கியவர்களை  அடக்கச் சொல்லி ஆணையிடுவதா?

போக்குவரத்து ஊழியர்கள் மே 15 ஆம்தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். தொழிலாளர்களுக்கோ, தொழிற்சங்கத் தலைவர்களுக்கோ இதில் மகிழ்ச்சி இல்லை. இதற்கான காரணத்தை விளக்கி முன்னதாக 15 லட்சம் துண்டுப் பிரசுரத்தை மக்களுக்கு வழங்கினார்கள். பொதுமக்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு பேராதரவு தந்தனர்.

கண்டிக்கவும், தண்டிக்கவும்பட வேண்டியவர்கள் அரசும், அரசு அதிகாரிகளுந்தான்.  ஆனால் போக்குவரத்து ஊழியர்களை சிலர் வசைபாடுகின்றனர்.  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் இதில் சேர்ந்து  கொண்டிருக்கிறது.  செந்தில்குமரய்யா என்பவர் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் எம்.வி. முரளி தரன், என். சேஷசாயி ஆகியோர் ‘‘போக்குவரத்து ஊழியர்கள் உடனே வேலைக்குத் திரும்ப வேண்டும், அப்படித் திரும்பாவிட்டால் அவர்கள் மேல் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.  இது வரம்பு மீறிய செயல். நீதிபதிகள் தங்களை அனைத்திற்கும் மேம்பட்டவர்களாக  கருதிக் கொள்வதன் வெளிப்பாடு இது. நீதிபதிகள் சட்டத்திற் கும், இயற்கை நீதிக்கும், சாதாரண மனித இயல்பிற்கும் விரோதமாக செயல்பட்டுள்ளனர்.

உண்மை என்ன?

போக்குவரத்துத் தொழிலாளி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெறும் போது அவர் சேமித்த பணம் ரூ. 15 லட்சத்திற்கு மேல் ரூ. 20 லட்சம் வரை
கணக்கில் இருக்கும். அதிகபட்சம் ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் இந்தப் பணத்தை
அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பது சட்டம்.  போக்குவரத்துக் கழகங்கள்
2010ஆம் ஆண்டிற்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு தொழிலாளர்களின் பணத்தை 7 ஆண்டுகளாக வழங்க வில்லை.

ஓய்வு பெற்றவர்களின் நிலுவைத் தொகை மட்டும் 1700 கோடி ரூபாய்.  இப்போது பணியாற்றுவோரிடமிருந்து வைப்பு நிதிக்காகவும், காப்பீட்டிற்காகவும், கடன் சொசைட்டிக்காகவும் பிடித்த பணத்தை உரிய இடத்தில் செலுத்தாமல் போக்குவரத்து கழகங்களே பயன்படுத்திக் கொண்ட பணம் சுமார் 4500 கோடி ரூபாய். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் வட்டிக்கு கடன்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் வாடிக் கொண்டிருக்கின்றன.

அரசே காரணம்

இந்த இழிநிலைக்கு முடிவு கட்டுங்கள் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. கழகங்களின் நட்டத்தை ஈடுகட்டவும் அரசு முன்வரவில்லை.  புதியஒப்பந்தம் பேசவும் மறுத்து இழுத்தடித்தனர். இதனால் தொழிலாளர் வேலை நிறுத்த அறிவிப்பை பிப்ரவரி மாதமே
வழங்கிவிட்டனர்.  (அதற்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்து வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டனர்.  இதற்கு மேல் பொறுமையாகவும் பொறுப்புணர்ச்சியோடும் யார் இருப்பார்கள்?

கட்டப் பஞ்சாயத்து

உழைத்த பணத்தை கையாடிய வர்கள் குற்றவாளிகளா? பணத்தை பறிகொடுத்துவிட்டு பரிதவித்து நிற்கும் தொழிலாளர்கள் குற்றவாளிகளா?  நீதிபதிகள் யாருக்கு ஆதரவு தருகிறார் கள்? இதே உயர்நீதிமன்றத்தில் இந்தப் பணத்தைக் கொடுக்க உத்தரவிடுமாறு வழக்குகள் போடப்பட்டன.  பணிக் கொடையை 30 நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.  நீதிபதிகள் 12 தவணையில் இதைக் கொடுத்து விடுங்கள் என்று உத்தரவு போடுகிறார்கள்.  நீதிபதிகளுக்கு பணிக்கொடை சட்டம் தெரியாது என்பதுதான் இதன் பொருள்.  அல்லது தெரிந்தே அரசிற்கு துணை நிற்கிறார்கள் என்று
பொருள். நீதிபதிகள் நடு நிலையோடு தீர்ப்பு வழங்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வது எப்படி சரியாகும் ? தொழிலாளிக்கு உரிய பணத்தை 12 தவணையில் பெற்றுக் கொள் என்று உத்தரவு போட்டால் நீதிபதிகள் கையாடலுக்கு உடந்தை என்றே அர்த்தம்.

நீதிபதிகள் தவணையில் பெறுவார்களா?

இதே நீதிபதிகள் ஓய்வு பெற்றுப் போகும் போது பணிக்கொடையை, லீவு சம்பளத்தை அந்தத் தேதியிலேயே வாங்கிச் செல்கிறார்கள்.  இப்போது தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் அவர்களின் ஓய்வுக் காலப் பலன்களை 5 வருடத்திற்குப் பிறகு 12 தவணைகளில் பெற்றுக் கொள்வார் களா?  தொழிலாளியை இவ்வளவு இளக்காரமாக நீதிமன்றம் பார்ப்பதை ஏற்க முடியுமா?

ஒரு தலைப்பட்சம்

தீர்ப்பு வழங்கும் முன்பு எங்கள் கருத்தையே கேட்காமல் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று ஒரு தலைப்பட்சமாக உத்தரவிடுவது சட்டவிரோதம். எங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்ல வாய்ப்பே தராமல் தீர்ப்பு வழங்கினால் அது சர்வாதிகாரம்.  அத்தோடு எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் ஆலோசனை வழங்குகின்றனர்.  இவர்கள் நீதிபதிகளா அல்லது
அரசின் ஆலோசகர்களா?  நடுநிலை எங்கே இருக்கிறது?  இதில் நீதிபதிகளுக்கு என்ன ஆதாயம்?

அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துப் போராடியதே தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு. வேலை நிறுத்த உரிமை சட்ட உரிமை. வெள்ளைக்காரன் காலத்திலேயே நிலைநாட்டப்பட்ட உரிமை.  மாவீரன் வ.உ.சி.யின் தொழிற் சங்க போராட்டத்தை ஒடுக்க வெள்ளை அரசு கையாண்ட அடக்கு முறைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

வேலைநிறுத்த உரிமையை, போராடும் உரிமையை பறிக்கும் முறையில்ஒரு தலைப்பட்சமான திடீர் தீர்ப்புகளை வழங்குவது நீதிபதிகளின் வரம்பு மீறிய செயல். இதை பொது சமூகம் உறுதியுடன் எதிர்க்க வேண்டும்,  நீதித்துறையும் நேர்ப்பட வேண்டும்.

கட்டுரையாளர்: சிஐடியு தமிழ் மாநிலக் குழு தலைவர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe