தடகளத்தில் தங்கம் வென்று சரித்திரம் படைத்த ஹிமா தாஸ்! பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் பாராட்டு மழை!

தாம்ப்ரே: பின்லாந்தில் நடைபெற்று வரும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை செய்த முதல் இந்தியப் பெண் என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்துள்ளார்.

உலக அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் அல்லது வீராங்கனை என்ற வகையில், ஹிமா தாஸின் சாதனையை இந்தியா கொண்டாடுகிறது. போட்டி தொடங்கிய போது 4வது டிராக்கில் ஓடுவதற்கு தயாராக இருந்த ஹிமா தாஸ், தனது பலமே அந்த கடைசி 100 மீட்டர்தான் என்பதை மனதுக்குள் மந்திரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் நினைத்தது போல், ஆஸ்திரேலியாவின் எல்லா கோனோலி, ரொமேனியாவின் ஆண்ட்ரியா மிக்லோஸ், அமெரிக்காவின் டாய்லர் மான்சோன் என அனைவரும் முன்னணியில் ஓடிக் கொண்டிருக்க, முன்னூறு மீட்டர் கடந்து அந்த நான்காவது 100 மீட்டரில் திடீரென வெறி கொண்டு வேகமெடுத்து ஓடுவது போல் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறினார் ஹிமா தாஸ்.

தடகளப் போட்டிகளில் உலக அளவிலான போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை தன் தோள்களில் சுமக்கும் அந்த சுகம், ஓடிய வலியை எல்லாம் மறக்கடித்தது. நாட்டுக்காக சரித்திர சாதனை படைத்த உத்ஸாகத்தில் கையை அசைத்தார்.

தொடர்ந்து வெற்றி பெற்றவர்களை நிற்க வைத்து தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பதக்க மேடையில் நின்ற அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்தக் காட்சியைக் கண்ட இந்தியர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். இதுதான் தேச பக்தி என்று சொல்லாமல் சொன்னது அந்த ஓரிரு கண்ணீர்த் துளிகளும் அந்த ஒரு நிமிடமும்!

ஏழ்மையான விவசாயக் குடும்பம். ஹிமாதாஸின் சொந்த ஊர், அசாம் மாநிலத்தில் உள்ள நாகாவ்ன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமம். ஹிமாவுடன் பிறந்தவர்கள் 4 பேர். ஹிமா தாஸின் மகத்தான வெற்றி, இந்திய நாட்டை உற்சாகத்தில் தள்ளினாலும், அந்தக் கிராமத்தைத் துள்ளிக் குதிக்க வைத்துள்ளது.

18 வயதான ஹிமா தாஸ் தனது வெற்றி குறித்து குறிப்பிடுகையில், ‘தேசத்திற்காக பதக்கத்தைக் கொண்டு வருவது மிகப்பெரிய சாதனை. இந்திய மக்களுக்கு இந்தப் பரிசை அளிப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. என் தோள்களில் இந்தியக் கொடியைச் சுமப்பது எனக்குப் பெருமிதமாக உள்ளது. இந்தியாவுக்கும் என் டீம் தலைவருக்கும் பயிற்சியாளருக்கும் என் நன்றிகள். உலக சாம்பியன் ஆனதன் மூலம் என் கனவு நனவாகி உள்ளது. அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிபேன்’ என்றார்.

தங்கம் வென்று சாதித்த தங்க மங்கை ஹிமாதாஸுக்கு தனது மிகச் சிறந்த எழுத்துகளால் பெருமை சேர்த்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. ஹிமா தாசின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையால் தேசம் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது. அவரது சாதனை இளம் வீரர், வீராங்கனைகளுக்கு நிச்சயம் உந்து சக்தியாக இருக்கும் என்று குறிப்பிட அவர், இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “ஹிமாதாசின் வெற்றி, மறக்க முடியாத தருணங்களைத் தந்துள்ளது. தேசியகீதம் இசைக்கப் பட்ட போது அவர் கண்களில் திரண்ட கண்ணீர்த் துளிகள் என்னை உணர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. இதைக் காணும் போது இந்தியர் எவர்தான் தம் கண்களில் கண்ணீர் வருவதைக் கட்டுப் படுத்த முடியும்!?” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களும், அமைச்சர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சச்சின் தெண்டுல்கர் தனது வாழ்த்து செய்தியில், ‘51.46 வினாடிகளில் இலக்கை எட்டியது என்பது அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. புதிய சகாப்தத்தில் இது வெறும் தொடக்கம் தான். இன்னும் நிறைய பதக்கங்களை அவர் வெல்வார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.