ரயில் மூலம் பொருள்கள் கொண்டுசெல்ல கட்டண விலக்கு… அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மத்திய ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கஜா புயல் தமிழகத்தின் நான்கு கடலோர மாவட்டங்கள் உள்பட, 12 மாவட்டங்களை சீர்குலைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மக்கள் வீடுகள், உடைமைகள், கால்நடைகள், பயிர்கள் உள்ளிட்டவற்றை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாகக் கூறியுள்ள அவர், கேரளாவில் வெள்ளத்தின் போது அளிக்கப்பட்டதைப் போல் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டண விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.