தேச பக்தியும் ஆன்மிகமும் !

உரத்த சிந்தனை கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
vandemadaram bharathaannai - 2026

சனாதன தர்மம் நம் தேசத்தின் முதுகெலும்பு என்பர் விவேகானந்தர். நம் பெருமைகளை நாம் உணராததும் உணர்த்தாததுமே நம் மதம் தொய்வடைந்ததற்கு காரணம் எனலாம்.

தேசத்தின் முதுகெலும்பான நம் மதம் தொடர்ச்சியான அன்னிய மதங்களின் படையெடுப்புகளினால்; சொல்லொணாத துயரங்களைச் சந்தித்து வந்துள்ளது.

தீயவர்களின் துஷ்ப்ரசாரத்தினால் மதம் என்றாலே அது ஏதோ பிரச்சினைகளின் ஊற்றுவாய் என்பது போலச் சித்தரித்தும், மதம் ஒழிந்தாலே தேசத்தில் பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பது போலவும், சாமானியர்களிடையே தவறான புரிதலை உண்டாக்கி அதில் வெற்றியும் கண்டு விட்டதாகக் கொக்கரிக்கின்றனர்.

உண்மையில் மதம் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலே நோக்குடையவை. நம் சனாதன தர்மம் பிரச்சினைகளைக் கையாள்வதிலும் தீர்வுகளைச் சொல்வதிலும் மற்றைய மதங்களுக்கு முன்னோடி என்றால் அது மிகையாகாது.

மேலும் தேச பக்தி, தேசியம் இவைகளோடு இயைந்த ஆன்மிகம் / மத உணர்வு, நம் நாட்டில் பன்னெடுங்காலமாக உயிரூட்டப்பட்டு வந்துள்ளமை நம்மை வியப்பிலாழ்த்திப் பெருமை கொள்ளச் செய்கிறது.

உதாரணத்திற்கு, நாம் எந்த கர்மாவினைச் செய்தாலும், தான தர்மங்களைச் செய்தாலும், நம்முடைய இருப்பிடத்தை, தேசத்தை; கண்டத்தை ( பாரத வர்ஷே பரதகண்டே .. ) சொல்லிவிட்டே செய்து வருகின்றமை, எந்த காரியமும், ஆன்மிக சம்பந்தப்பட்ட எந்த ஒன்றும் தேசத்தின் நினைவுடனேயே அனுட்டிக்கப்படுகின்றமை தேசத்தின் பால் ஆன்மிகத்திற்குள்ள பரிவினை உணர்த்தும்.

தேச விடுதலைக்காகப் பாடுபட்டவர்களும், ஆன்மிக சக்தியை விடுதலை உணர்விற்கான ஆக்க சக்தியாகவும் ஊக்க சக்தியாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்..

திலகர் போன்றவர்கள் பிள்ளையார் ( சதுர்த்தீ ) ஊர்வலங்களை மக்களிடையே சுதந்திர வேட்கையுணர்வை விதைத்திடவும், அவர்களை ஒன்று திரட்டிடவும் சாதனமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். அங்கும் தேச பக்தி எனும் விருட்சத்திற்கு ஆன்மிகம் / தெய்வபக்தியே விதையாக இருந்துள்ளது !

வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே ! போன்ற கோஷங்கள் தேசபக்தியை தெய்வ பக்திக்கு நிகரான ஸ்தானத்தில் வைத்துப் போற்றுவது கவனத்திற்குரியது.

நம் பிரார்த்தனைகளில் உள்ள, தேசம் ஸுபிட்சமாகவும் (வளமாக, நிறைவாக ), உபத்திரவமின்றியும் சிறந்து விளங்கிட வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் பக்தி என்பது ஆன்ம நலனோடு கூட நாட்டு நலன் சார்ந்ததும் கூட என்பதற்கு உதாரணங்களாகும்.

bharathamahaharathi - 2026

‘கடல்சூழ்ந்த மன்னுலகம் வாழ’ என்கிற பிரார்த்தனையும் இங்கே நினைத்தற்குரியதாம் ! இப்படிப் பல வகைகளால் தேசமும் தெய்வீகமும் இணைந்தும் பிணைந்தும் காட்சியளிக்கின்றன என்பதறிந்தோம்.

தேசத்திற்கு ஒரு நட்டமென்றால் அது ஆன்மிகத்தின் நட்டம்… ஆன்மிகத்திற்கு ஒரு நட்டம் என்றால் அது தேசத்தைக் கவலை கொள்ளச் செய்யும் ஒரு விஷயமும் கூட என்கிற புரிதல் மிக முக்கியமானது. இன்றைய நிலைமையைச் சிந்தியுங்கள் !

அந்நிய மதங்களின் வீரியம் நம்மை அச்சத்திற்குள்ளாக்கும் காலம் இது.. ஆயினும் அஞ்ச வேண்டியதில்லை.. ஒரு காரியத்தை நாம் திட்டமிட்டுச் சரியாகச் செய்து வந்தால்..

akkarakkani srinidhi - 2026
அக்காரக்கனி ஸ்ரீநிதி

கிராமங்களைக் கருத்திற் கொள்ளுங்கள்.. கிராம மக்களைத் தவறாமல் சந்தியுங்கள்.. நம் மதத்தின் மேன்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்.. நாம் அவர்களை நாடுவதில்லை & சந்திப்பதில்லை என்கிற குறை அவர்களிடம் உண்டு..

அக்குறை தீர, அவர்களை நோக்கிய நம் பயணம் தொடங்கப்படட்டும்.. உண்மையான அன்பு, தூய்மையான பக்தி இவற்றிற்கு இலக்கணமாவதே கிராம மக்கள் தானென்பேன்.. அவர்களை அரவணைத்தால் நம்மைச் சூழ்ந்திருக்கும் இடர்ப்பாடுகள், தளைகள் அகன்று போகும்..

அதனைச் செய்திடுவோம் ! தேச, தெய்வீகங்களின் பிணைப்பினை வலுப்படுத்துவோம் ! ஸநாதன தர்மம் வாழ்க ! வெல்க !!

  • அக்காரக்கனி ஸ்ரீநிதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.