
தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
மகாபாரதம் பற்றி…!
கடந்த இரண்டு பகுதிகளாக ராமாயணம் குறித்து வந்தேறிகளின் வம்புப் பிரசாரத்தைப் பார்த்து வருகிறோம்.
அண்மையில் கூட மகாபாரதம் ஹிம்சையை ஊக்கப்படுத்துகிறது என்று வர்ணிக்கும் செய்திகள் இடதுசாரி மீடியாக்களில் இடம் பிடித்து வருவதைப் பார்க்கிறோம்.
மேற்கத்திய இன்டாலஜிஸ்டுகள் வெண்டி டோனிகர், ஷெல்டன் போலக் என்ற இரு போலி மேதாவிகளான கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் மகாபாரத்தை குரூரமான கதையாக வர்ணித்தனர். அவர்களின் மானசிக புதல்வர்களான இந்தியர்கள் சிலர் இன்றளவும் மகாபாரதத்தின் மீது இப்படிப்பட்ட விமரிசனங்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
“ஒரு நூலைப் படிக்காதவர்கள் கூட படித்தேன் என்று கூறினால் அந்த நூலை வெற்றி பெற்றதாக கருதலாம்.” (A book is a success when people haven’t read pretend they have) என்ற பழமொழிக்கு உதாரணமாக மகாபாரதத்தைக் கூறலாம்.
ஸ்ரீமத் மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்கள் உள்ள மிகப்பெரும் நூல். மகாபாரதத்திற்கு ஈடு மகாபாரதமே! உலகில் உள்ள எந்த ஒரு நூலும் இலியட், ஒடிஸ்ஸீ முதலானவை கூட மகாபாரதத்திற்கு இணை கிடையாது.
“சாமானிய ஜனங்களுக்கு மகாபாரதத்தைப் படிப்பது என்றாலே பயம். அதனால்தான் இராமாயண வாசகர்களில் பத்தில் ஒருவர் கூட மகாபாரதத்தை படிப்பதில்லை. மகாபாரதம் படிப்பதென்றால் பண்டிதர்களுக்குக் கூட சிரமமானது. பலருக்கும் உள்ள மகாபாரத அறிவு, திரைப்படங்கள் டிவி சீரியல் மூலம் வந்தவையே!” என்கிறார் சமஸ்கிருத பண்டிதர் சலமசர்ல வேங்கட சேஷாசார்யுலு.

சனாதன தர்மத்தைச் சேர்ந்த புனித நூல்களை அவமதிப்பது கிறிஸ்தவ சமூகத்திற்கு புதிதல்ல. சகிப்புத்தன்மையின்மையால் ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்லாயிரம் நூல்களை தீக்கிரையாக்கிய தீய கலாச்சாரம் அவர்களுடையது.
ராமாயணமும் மகாபாரதமும் ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல… முழு உலகிற்குமே நீதி நெறிகளை போதிக்கும் நூல்கள்.
புராதன பாரத தேசத்தின் வரலாற்றை கண்ணாடியில் காட்டிய இந்த இதிகாசங்களை மக்களிடமிருந்து விலக்கியதால் மிகப் பெரும் நஷ்டம் நேர்ந்தது. தன்னம்பிக்கையும் சுயகௌரவமும் நலிந்த தலைமுறைகள் உருவாகின. ஆங்கிலக் கல்விக்கு பழக்கப்பட்டவர்கள் மிகவும் மதிப்பு வாய்ந்த விஞ்ஞானம் உள்ள இந்த அரிதான நூல்களை விட்டு விலகியுள்ளனர். வாழ்க்கையில் ஆதரிசமாக ஏற்க வேண்டிய பல பாத்திரங்கள் இன்றைய தலைமுறைக்கு அறிமுகமாகாமல் போயின.
மகாபாரதத்தில் என்ன உள்ளது?
உலக இலக்கியங்களிலேயே இணையற்ற மிக அற்புதமான இதிகாசம் மகாபாரதம். இது நம் தேசிய காவியம். இதனை இதிகாசம் என்கிறோம். அதாவது பண்டைய கால வராற்றை போதிக்கும் நூல். (இதி பாரம்பர்யோபதேஸ: ஆஸ் இதிஹாஸ:).
இந்த இதிகாசத்தில் வியாச மகரிஷி தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்குவித புருஷார்த்தங்களை சாதித்து அடைவதற்குத் தேவையான விஞ்ஞானத்தை பத்திரப்படுத்தி வைத்துள்ளார். வேதங்களின் சாரம் இதில் இடம் பெற்றுள்ளதால் இந்த நூல் ஐந்தாவது வேதமாக போற்றப்படுகிறது. ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உள்ள மிகப் பெரும் நூல் மகாபாரதம்.
“இதில் என்ன உள்ளதோ அதுவே எங்கும் இருக்கும். இதில் என்ன இல்லையோ அது எங்குமே இருக்காது” என்று வியாச மகரிஷி மகாபாரதம் பற்றிக் கூறுகிறார்.
“யதி ஹாஸ்தி ததன்யத்ர, யன்னே ஹாஸ்தி ந தத் க்வசித்” – (What is in Mahabharata is everywhere, what is not in Mahabharata is nowhere).
மகாபாரதம் ஆயிரக்கணக்கான பாத்திரங்களும் உணர்ச்சிப் பெருக்கும் திடீர் திருப்பங்களும் கொண்ட மாபெரும் காவியம். இதில் பாயசத்தில் முந்திரிப்பருப்பு போல வியாச மகரிஷி அளித்திருக்கும் தர்ம சூட்சுமங்கள் உளளன. விலங்குகளின் பார்த்திரங்கள் உள்ள ஆர்வமூட்டும் கதைகள் எல்லா வயதினரும் படிக்க ஏதுவாக உள்ளன. இந்த கதைகள் வெறும் காலட்சேபத்திற்காக அல்ல. வாழ்க்கைக்குப் பயனளிக்கும் நீதிப் பாடங்கள்.
சாந்தி பர்வத்தில் உள்ள நீதிக் கதைகளும் தர்ம சூட்சுமங்களும் தர்ம சூத்திரங்களும் எண்ணற்றவை. சோம்பல் கூடாது என்று கூறும் ஒட்டகத்தின் கதை, தேசகால சூழலைப் பொறுத்து தேவையானால் அரசன் தன் எதிரியோடு கூட சமரசம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறும் எலி பூனை கதை, தனி மனிதனானாலும் அரசனானாலும் முன்னோக்குப் பார்வை கொண்டிருக்க வேண்டும் என்று போதிக்கும் மூன்று மீன்களின் கதை போன்றவற்றின் மூலம் வரப் போகும் ஆபத்துகளை யூகிப்பது, சமயத்திற்கு ஏற்ப சிந்தித்து எவ்வாறு உபாயத்தோடு அதிலிருந்து மீண்டு வருவது… போன்ற செய்திகளை அளிக்கிறது.
வேலைகளை ஒத்திப்போடும் மனநிலை கொண்ட மூன்றாவது மீன் ஆபத்தில் சிக்குகிறது. இது மனித இனத்திற்கு வியாசமுனிவர் அளிக்கும் செய்தி. சரணடைந்தவரை காப்பாற்றுவது உத்தம அரசரின் தர்மம் என்று தெரிவிக்கும் ஜோடிப் புறாக்களின் கதை…. இவ்வாறு மனோரஞ்ஜகமான, மனமலர்ச்சி அளிக்கும் கதைகள் பல மகாபாரதத்தில் உள்ளன.
கஷ்டமும் சுகமும் சக்கரத்தில் உள்ள ஆரங்கள் போல வந்து போய்க் கொண்டிருக்கும் என்று கூறி ஆறுதல் அளிக்கும் இந்த ஸ்லோகம் மகாபாரதத்தில் உள்ளது…
சுகஸ்யானன்தரம் து:கம் து:கஸ்யானன்தாரம் சுகம் !
சுகத்து:கே மனுஷ்யாணாம் சக்ரவத்பரிவர்தித: !!
பொருள்: இன்பத்திற்குப் பிறகு துன்பம், துன்பத்திற்குப் பிறகு இன்பம் வரும். மனிதன் தினமும் சுகமே அடையமாட்டான். தினமும் துக்கமே அடையமாட்டன்.
இது போன்ற ஸ்லோகங்களும் நள சரித்திரம் போன்ற (உபாக்கியானங்கள்) உப கதைகளும் மனிதன் துயரத்திலும் சோர்வடையாமல் திடமாக எழுந்து நிற்க வேண்டும் என்ற செய்தியை அளிக்கின்றன.

மகாபாரதம் சபா பர்வத்தில் தர்மராஜனுக்கு நாரத மகரிஷி உபதேசித்த பரிபாலனை தர்மங்கள், ராஜநீதிப் பாடங்கள் போன்றவை நாகரிகத்தில் மேம்பாடு அடைந்த தேசத்திலேயே கிடைக்கும்.
தர்மராஜனை நாரதர் குசலம் விசாரித்ததை விளக்கும் 110 ஸ்லோகங்கள் அரசாளுபவருக்கும் தலைவனுக்குமான நீதிப் பாடங்கள். (சபாபர்வம், 5. 35-5.145)
மகாபாரதத்தின் சிறப்பை விளக்கும் அரசாட்சி தர்மத்தில் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம்.
*அறிஞர்களை ஆதரிக்க வேண்டும். ஏதாவது சிக்கலான பிரச்னை எதிர்ப்பட்டால் தீர்வு காண்பதும் அறிவுரை கூறுவதும் இவர்களே!
*போரில் வீர மரணம் எய்திய வீரர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கு அரசு உதவி புரிய வேண்டும்.
*அரசாங்க வருமானத்தில் பாதி அல்லது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலவழிக்க வேண்டும்.
*தலைவர்களின் புதல்வர்கள், திருடர்கள், பணத்தாசை கொண்ட அதிகாரிகள் மக்களை கொள்ளையடிக்காமல் ஜாக்கிரதை வகிக்க வேண்டும்.
*விவசாயிகளை மகிழ்ச்சியாக இருத்த வேண்டும்.
*மழையின் மீது மட்டுமே ஆதாரப்பட்டு விவசாயம் இருக்கக் கூடாது. பெரிய பெரிய குளங்களை பல இடங்களிலும் தோண்டி வகை செய்ய வேண்டும்.
*சேவகர்களுக்கு சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். உத்தியோகிகளின் துயரம் தலைவனுக்கு நல்லதல்ல.
*(சமுதாயத்தில் உண்மையான மைனாரிடிகள் என்று கூறத் தகுந்த) உடல் ஊனமுற்றோர், ஊமை, குருடர், அனாதைகள் போன்றோரை தயவோடு ஆதரிக்க வேண்டும்.
*நன்மை செய்த மனிதருக்கு சபை முன்னிலையில் தகுந்த விதத்தில் சன்மானம் செய்யவேண்டும்.
*சாமர்த்தியம் மிகுந்த ஒற்றர் படை இருக்கவேண்டும்.
இவை மட்டுமின்றி அரசன் நீக்க வேண்டிய பதினான்கு ராஜ தோஷங்களை நாரத மகரிஷி தர்மராஜனுக்கு விவரித்தார்.
- அரசன் நாஸ்திகனாக (வேதங்களை எதிர்ப்பது, கடவுளை நிந்திப்பது) இருக்கக் கூடாது.
- பொதுமக்களிடம் பொய் சொல்வது கூடாது.
- பாதுகாப்பு விஷயத்தில் அஜாக்கிரதை கூடாது.
- சோம்பல், சூரியன் உதித்து நெடுநேரம் கழித்து எழுந்திருப்பது தோஷம்.
- புத்தி கூர்மையற்றவரை அறிவுரை கூறுபவராக நியமித்து அவர்களின் பேச்சைக் கேட்பது தோஷம்.
- அதிக கோபம், எல்லோரிடமும் எரிந்து விழுவது குற்றம்.
- நடந்த தவறுகளுக்கு அதிக காலம் துயரப்பட்டு செயலற்று இருப்பது.
- தாமதமாக முடிவெடுப்பது.
- வேலைகளை ஒத்திப் போடுவது.
- திறமையுள்ள அறிஞர்களை கௌரவிக்காமல் இருப்பது.
- சார்ந்திருப்பவர்களை ஏளனம் செய்வது.
- ரகசிய விஷயங்களை வெளியில் சொல்வது.
- சுபகாரியங்களையும் பண்டிகைகளையும் கடைபிடிக்காமல் இருப்பது. (தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகளை கடைபிடிக்கவிடாமல் தடுப்பது)
- தீய பழக்கங்களுக்கு அடிமையாவது. (தற்காலத்தில் மது, போதை மருந்துகளுக்கு அடிமையான சில பிரபல தலைவர்கள்)
மேற்சொன்ன குற்றங்கள் இருப்பவர் அரசாளுவதற்குத் தகுதியற்றவர்.
குறை எது? நிறை எது? என்பவற்றை மாணவப் பருவத்திலிருந்து சொல்லிக் கொடுத்தால் புதிய தலைமுறை உருவாகும். அவர்கள் சிறந்த அர்சாளுபவராகத் திகழ்வர். ஆனால் ராமாயணமும் மகாபாரதமும் மத நூல்கள் என்றும் அவற்றை அரசாங்கம் தொடக் கூடாதென்றும் கூறும் வந்தேறிகளின் தொண்டர்களால் இந்த ஞானத்திற்கு இளைய தலைமுறை தொலைவாகவே உள்ளது.
நம் ஹிந்து கலாசாரத்தின் சிறப்பு இந்தியர்களில் அதிகம் பேருக்கு தெரியாதிருப்பதால் மத மாற்றங்களுக்கு மார்க்கம் எளிதாகிறது. ஸ்ரீமத்ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் சில டிவி சேனல்களில் நிந்தனை செய்து நடந்த விவாதங்கள் வந்தேறிகளின் மனநிலைக்கு உதாரணம். இந்த தீய பிரசாரங்களின் காரணமாக இவை முதியோர் பொழுது போக்கிற்காக படிப்பவை என்றும் இளைய தலைமுறைக்கு இவற்றோடு தொடர்பு இல்லை என்றும் நினைக்கும் மனநிலை உருவாகியது.
இதன் காரணமாக இந்திய மக்களிடம் தன்னம்பிக்கையும் சுயகௌரவமும் குறைந்து சமுதாயம் வலுவிழந்தது.
ஸ்ரீமத் பகவத்கீதையில் உள்ள தனிமனித ஆளுமைப் பாடங்கள் சேரவேண்டியவர்களுக்குச் சேராமல் போனதால் மாணவர்களில் நிராசையும் மனச்சோர்வும் அதிகரித்தன. தாழ்வு மனப்பான்மையால் தற்கொலைகளின் எண்ணிக்கை பெருகியது.
வந்தேறிகளின் பாதையில் நடைபோடும் நிகழ்கால அரசாங்கம் கல்வித் துறையில் (செக்யூலரிசம் என்ற பெயரில்) இராமாயண, மகாபாரத நூல்களை மாணவர்களிடமிருந்து இன்னமும் விலக்கியே வைத்துள்ளது துரதிருஷ்டமே!.

புகழ்பெற்ற விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் மரங்களிலும் உயிர் உள்ளதென்று ஆய்வு செய்தார் என்று நாம் படித்துள்ளோம். இது போன்ற ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றியது? என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
“மகாபாரத்தில் உள்ள சாந்தி பர்வத்தில் 17வது ஸ்லோகம் எனக்கு ஊக்கத்தை அளித்தது” என்றார் ஜகதீஷ் சந்திர போஸ்.
அந்த ஸ்லோகத்தைப் பார்ப்போம்…
சுக து:கயோஸ்ச க்ரஹணா சின்னஸ்ய ச விரோஹனாத் !
ஜீவ: பஸ்யாமி வ்ருக்ஷாணாம் சைதன்யம் ந வித்யதே !!
பொருள்: மரங்களும் சுக, துக்கங்களை அனுபவிக்கின்றன. மரங்களை வெட்டிய இடத்தில் புதுக் கிளை முளைக்கிறது. அதனால் விருட்சங்களில் உயிர் இருப்பது தெரிகிறது. மரங்கள் ஜடமல்ல.
இவ்விதமாக நம் கலாசார நூல்களின் மீது பரிசோதனைகள் செய்தால் அறிவியலுக்கு இன்னும் எட்டாத விஷயங்கள் பலவற்றை வெளிப்படுத்த முடியும்.
க்ளோனிங் பற்றி ஆய்வு செய்த நம் இந்திய மருத்துவர் டாக்டர் பாலகிருஷண கணபதிராவு மாதாபூர்கர் இவ்வாறு கூறுகிறார், “நான் செய்ததில் புதியது எதுவும் இல்லை. நம் பூர்விகர்கள் இந்த மருத்துவ விஞ்ஞான முறையை மகாபாரத காலத்திலேயே பிரயோகித்ததை அறிய முடிகிறது. காந்தாரிதேவி 101 பிள்ளைகளை எவ்வாறு பெற்றாள் என்ற அம்சம் குறித்து நான் சிந்தித்துப் பார்த்தேன். இதற்கு ஆதி பர்வத்தில் 115 வது அத்தியாயத்தில் பதில் கிடைத்தது. அதைப் படித்து நான் வியப்பில் ஆழ்ந்து போனேன். அப்போது தோன்றியது நான் புது விஷயம் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்று”.
Source: ருஷிபீடம் மாத இதழ், ஜூலை, 2019