காசியாபாத்: காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட நினைத்த சிறுமி, தன் காதலை கண்டித்த தாயின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரசேத மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலைக்கு தனது மகளும் அவளது காதலன் ஜிதேந்திர குமாரும் தான் காரணம் என பெண்ணின் கணவர் போலீசில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணையில் உறுதிப்படுத்தினர். அவர்களிடம் மேற்கொண்டி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொலை செய்யப்பட்ட பெண், தில்லி போலீசில் தலைமை கான்ஸ்டபிளாக உள்ளார். இவரின் மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். மைனர் பெண்ணான இவர், 6ம் வகுப்பை பாதியில் விட்ட 19 வயது இளைஞரான ஜிதேந்திர குமாரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்.,14ம் தேதி காதலர் தினத்தை சிறுமியுடன் கொண்டாட, அவளின் வீட்டிற்கு ஜிதேந்தர் சென்றுள்ளார். இதனால் இவர்களது காதல் விவகாரம் வீட்டில் இருந்த சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது.
ஆத்திரத்தில் சிறுமியை அறைந்த அவர், ஜிதேந்தர் வீட்டிற்கு சென்றும் கண்டித்துள்ளார். அவர்களும் சிறுமியின் வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள் ஜிதேந்தர் அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன்பின்னர், தன் காதலனுக்கு போன் செய்த சிறுமி, தன் தாயை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளாள். இதனால் மதியம் 1 மணியளவில் சிறுமியின் வீட்டிற்கு ஜிதேந்தர் திரும்ப சென்றதால் ஆத்திரம் அதிகமான தாய், அவரையும் அறைந்துள்ளார். இதனால், இருவரும் சேர்ந்து சிறுமியின் தாயின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர்.
பின்னர், கிரைண்டர் கல்லை எடுத்து அவரை தாக்கியுள்ளனர். இதில் கீழே விழுந்த அவரை, காதலர்கள் இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றனர். வெளியே தெரியாமல் இருக்க, பக்கத்து வீட்டாரை அழைத்த சிறுமி, தனது தாய் மயக்கமடைந்ததாக கூறினாள்.
மருத்துவமனைக்கு தாயை அழைத்து சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரியவந்தது.விபரம் தெரிந்து பீகாரில் வேலை பார்த்து வந்த சிறுமியின் தந்தை, மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதை கண்டறிந்து போலீசில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் இந்த அனைத்தும் தெரிய வந்தது. இதனால், காதலர்கள் இருவரையும் கைது செய்து, இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.