ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அன்சாரி காஸ்வா உல் இந்த் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா மாவட்டம், அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல்துறையினர் தேடுதலில் ஈடுபடுவதைப் பார்த்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு காவல்துறையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இருதரப்பிலும் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. முடிவில் இன்று அதிகாலையில் மூன்று தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.
அந்த தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டதில் அவர்கள், அன்சாரி காஸ்வா உல் இந்த் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஜஹாங்கிர் ரபிக் வானி, ராஜா உமர் மெக்பூல் பாட், உஜையர் அகமது பாட் என அடையாளம் காணப்பட்டனர்.
இந்த 3 தீவிரவாதிகளிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அன்சாரி காஸ்வா உல் இந்த் தீவிரவாத அமைப்பு முன்பு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்போடு முன்பு இருந்து, பின்னர் அதிலிருந்து பிரிந்தது.
என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜஹாங்கிர் ரபிக் வானி, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் கமாண்டராக இருந்த ஹமாத் கானுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். கடந்த ஜனவரி மாதம்தான் ஜஹாங்கிர் அன்சாரி அமைப்பில் சேர்ந்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அன்சாரி காஸ்வா உல் இந்த் தீவிரவாத அமைப்பு கடந்த காலங்களில் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் ராணுவ ட்ரக் ஒன்றுக்கு தீ வைத்தல், ட்ரால் பகுதியில் மிரட்டல் விடுக்கும் பதாகைகளை ஒட்டியது போன்ற செயல்களைச் செய்துள்ளது.
Three Ansar Ghazwa ul Hind terrorists killed in encounter in J-K's Tral
— ANI Digital (@ani_digital) February 19, 2020
Read @ANI Story | https://t.co/MpgdBZiiSx pic.twitter.com/TLZhDcE4B9