கொரோனா வைரஸ் தொற்று ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வேகமாகப் பரவி வருவதால் மக்கள் பெரும் பீதி அடைந்து வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் ஆந்திர மாநிலத்தில் 67 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் மொத்தமாக 111 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளது.
தமிழக எல்லையில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (ஏப்.2) காலை திருப்பதி தியாகராஜ நகர் பகுதியில் வசிக்கும் ‘கூரியர் பாய்’ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பதி நகரில் முதன்முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து செல்லும் நகரம் என்பதால் இது மேலும் பரவக்கூடும் எனும் அச்சம் எழுந்துள்ளது. மேலும் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் ஏற்கெனவே தில்லி சென்று வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த நிலையில், இன்று காலை மேலும் ஒருவர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் தற்போது 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் இதில் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை தெலங்கானாவில் மொத்தம் 9 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.