உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த புலி ஒன்று, தில்லியில் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா காரணமாக அது உயிரிழந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள புலியின் உடற்கூறுகள் கொரோனா சோதனைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.
தில்லியில் உள்ள உயிரியில் பூங்காவில் புலி ஒன்று உயிரிழந்துள்ளது. 14 வயதான அந்தப் பெண் புலியின் பெயர் கல்பனா என்றும், அது, சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறப் படுகிறது. இந்நிலையில், அந்தப் புலி புதன்கிழமை அன்று, உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
இருப்பினும், என்.ஐ.ஹெச்.எஸ்.ஏ.டி., அந்தப் புலியின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டிருக்கிறது. கொரோனா பரவல் இருந்ததா என்பது குறித்த ஆய்வு செய்ய அந்தப் புலியின் இரத்த மாதிரிகள் பரேலிக்கு அனுப்பப் பட்டிருக்கின்றன.
உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு மரணடைந்த புலியின் மாதிரிகள் அனுப்பட்டுள்ளன என்றும், அதன் ஆய்வு முடிவுகள் வந்த பிறகே தகவல் தெரியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்..
முன்னர், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் கடந்த 5ஆம் தேதி 4 வயதான மலேசியாவின் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அந்த புலியிடம் இருந்து மேலும் 4 புலிகளுக்கும், மூன்று ஆப்ரிக்க நாட்டு சிங்கங்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.
மேலும், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதன்முறையாக இரண்டு வளர்ப்புப் பூனைகளுக்கும், மேலும் 7 வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உரிமையாளரிடம் இருந்து ஒரு பூனைக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறப் பட்டது.
இதை அடுத்து, தங்கள் செல்லப் பிராணிகளை வீட்டுக்கு வெளியே விட வேண்டாம் என்றும் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அறிவுறுத்தப் பட்டது.