ஆரியங்காவில் ஏற்பட்ட சாலைவிபத்தில் சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் படுகாயம் அடைந்ததால், வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப் பட்டு, கேரளத்துக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப் பட்டன.
தமிழக கேரள எல்லையில், ஆரியங்காவு ஐயப்பன் கோவில் முன்பு செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு சோதனைச்சாவடியில் தமிழகத்தில் இருந்து வரும் வாகன ஓட்டி களை சோதனை செய்துகொண்டிருந்தார் தென்மலை சுகாதாரத்துறை அலுவலர் அனீஸ்.
அப்போது, பிரேக் பிடிக்காமல் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தில் மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரி அனீஸ் மீது வாகனம் மோதியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப் பட்ட அனீஸ், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப் பட்டார்.
இதனால் தமிழகத்தில் இருந்து அத்தியாவசியமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தென்காசி மாவட்டம் புளியரையில் நிறுத்தி வைக்கப் பட்டன.