புதுச்சேரியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக அவரது பெற்றோர் ஆண்ட்ராய்டு போனை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த சிறுமி எப்போதும் செல்போனிலே மூழ்கிபோயுள்ளார். தங்கள் மகள் இரவு பகலாக செல்போனும் கையுமாக இருந்ததால் ஆன்லைன் வகுப்பில் நன்றாக படிக்கிறாள் என்று நினைத்து பெற்றோர் சந்தோஷப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் 4 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நள்ளிரவில் எழுந்த தாய், பக்கத்து அறையில் செல்போன் முன்பு தனது மகள் ஆடையின்றி நிற்பதை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது முகநூலில் ஒரு நபர் சிறுமியை மிரட்டி இந்த செயலில் ஈடுபடவைத்தது தெரியவந்தது.
ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த போது, சிறுமி பொழுது போக்கிற்காக பேஸ்புக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.
அப்போது சேலம் என்ற முகவரியில் அழகான போட்டோவுடன் இருந்த இளைஞருடன் நட்பாக பேச ஆரம்பித்துள்ளனர். நாளடைவில் சிறுமியை காதலிப்பதாகக் கூறிய அந்த இளைஞன், சிறுமியுடன் பாலியல் ரீதியாக பேச ஆரம்பித்துள்ளான்.
ஒருகட்டத்தில் அந்த இளைஞனின் ஆசை வார்த்தைக்கு மயங்கிய அந்த சிறுமி அவர் சொல்வதை எல்லாம் கேட்க துவங்கியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை அனுப்ப வலியுறுத்தியுள்ளான் அந்த இளைஞன்.
ஒரு நாள் அந்த இளைஞன் ஆபாசமாக வீடியோ கால் பேசும்படி சிறுமியை வற்புறுத்தியுள்ளான். இதனை மறுத்த சிறுமியிடம், உனது ஆபாச புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் விட்டுவிடுவேன் நான் சொல்வதை செய் என்று மிரட்டியுள்ளான்.
இதனையடுத்து வேறு வழியின்றி சிறுமியும் பெற்றோர்களுக்கு தெரியாமல் வீடியோ கால் என தொடர்ந்திருக்கிறார். இதனால் தான் நள்ளிரவு நேரத்திலும் ஆடையின்றி செல்போன் முன் நின்றுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுயின் பெற்றோர், இது போன்று வேறு யாரும் அவனிடம் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சைபர் க்ரைம் காவல்துறையினர் உதவியுடன் விசாரித்த போது அந்த நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது.
இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் திருப்பூர் சாயப் பட்டறை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்த கமலகண்ணன் போலி பேஸ்புக் முகவரி மூலம் பல பெண்களை ஏமாற்றி, அவர்களுடன் பாலியல் ரீதியில் சாட் செய்து, காதலிப்பது போல நடித்து அவர்களிடம் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்களை வாங்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
கமலக்கண்ணன் வைத்திருந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் அந்த சிறுமி மட்டுமல்லாமல் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்து கொண்டால் இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
மேலும் தற்போதைய சூழலில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது முழு கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. படித்து உயர்ந்த நிலையில் இருக்கும் பலர் இணையத்தில் பலரிடம் ஏமாறுகிறார்கள்.
எனவே குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும் போது பெற்றோர்கள் உடன் இருந்தால் பிள்ளைகள் ஏமாறாமல் இருப்பதை தவிர்க்கலாம்.