புது தில்லி: நிலம் கையகப்படுத்துதல் மசோதா மீது மக்களவையில் செவ்வாய்க்கிழமை இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதம் திங்கள்கிழமை நேற்று தொடங்கியது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியும் தனது ஆட்சேபங்களை எழுப்பியிருந்தது. முன்னதாக, இந்த மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற பல்வேறு கட்சித் தலைவர்களையும் மத்திய அமைச்சர்கள் சந்தித்தனர். எனினும், இந்த முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. முந்தைய ஐ.மு.கூட்டணி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் திருத்தங்களைச் செய்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, மக்களவையில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவை தாங்கள் எந்த வடிவத்தில் கொண்டு வந்தோமோ அதே வடிவில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அப்படி இருந்தால், இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் என்று அது தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கியது. இது குறித்து சிவசேனா கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த் பேசுகையில், “”விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகம் செய்வதற்குப் பதிலாக அவற்றை குத்தகைக்கு எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இதன்மூலம், நிலத்தை வழங்குவோருக்கு குத்தகை மூலம் தொடர்ந்து நிலையான வருமானம் கிடைக்கும்” என்றார். தெலுங்கு தேச எம்.பி. ஜெயதேவ் கல்லா, “”ஆந்திரத்தில் புதிய தலைநகரை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு சாதகமான நிலம் கையகக் கொள்கையை மாநில அரசு உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், நிலம் கையக மசோதாவை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும்” என்று கோரினார். தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, “”விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டியது கட்டாயம் என்ற ஷரத்தை அரசு நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்குவது விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமையும்” என்றார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அதை விரிவாகப் பரிசீலிப்பதற்காக நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது, எம்.பி.க்களின் விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, இந்த மசோதா நிறைவேற எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில் அவசரச் சட்டத்துக்கு மாற்றான இந்த மசோதா, அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். வரும் 20ஆம் தேதி வரைதான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதன் பிறகு மசோதாவை நிறைவேற்ற இயலாது. சமூகம் மற்றும் நாட்டின் நலனைக் கருதி, நிலம் கையக மசோதாவில் மேலும் திருத்தங்களைச் செய்யவும் அரசு தயாராக உள்ளது என்றார். இத்தகைய சூழலில், மக்களவையில் இன்று இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மசோதாவை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நிலம் கையகப் படுத்தும் மசோதா மீது மக்களவையில் இன்று வாக்கெடுப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari