தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
அவிவேக புரோஹித நியாயம்
அவிவேகம் – அறிவற்ற (இங்கிதமற்ற),
புரோஹிதர் – புரத்திற்கு ஹிதம் செய்பவர் (மதிப்பிற்குரிய மனிதர்)
பிறர் மனம் புண்படும்படி பேசுவது விவேகமற்றவர்களின் இயல்பு. சின்னக் குழந்தையானாலும் வளர்ப்பு மிருகமானாலும் சிரித்துக் கொண்டே பேசினால் அவை மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைப் பார்க்கிறோம். விளையாட்டாகக் கூட பிறரை கேலி செய்து மனம் புண்படும்படி பேசக் கூடாது என்ற நீதியைக் கூறும் நியாயம் இது.
ப்ரியவாக்ய ப்ரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்துன: |
தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா ||
(சாணக்ய நீதிசாஸ்திரம்)
பொருள் – இனிமையான சொல்லைக் கேட்டால் எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியடையும். அதனால் அன்பாகவே பேச வேண்டும். சொற்களுக்குக் குறைவா என்ன? பேசுவதில் ஏனிந்த தரித்திரம்?
உடலில் ஏற்பட்ட காயம் ஆறிவிடும். ஆனால் பிறருடைய உள்ளத்தில் சூலம் போற்ற கூரான சொற்களால் ஏற்படுத்திய காயம் ஆறுவது கடினம் என்கிறார் விதுரர். பிறர் மனதைப் புண்படுத்தாமல் இனிமையாகப் பேசுவது ஒரு கலை.
சிலருக்கு நல்லவிதமாகப் பேசத் தெரியாததால் கௌரவம் மிக்க ஸ்தானத்தில் இருந்தாலும் மதிப்பை இழக்கிறார்கள். பேசும்போது நாவடக்கம் இல்லாவிடில் மதிப்பை இழக்க வேண்டி வரும் என்று தெரிவிக்கும் நியாயம் இது.
இந்த நியாயத்தில் புரோஹிதர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதில் உள்ள காரணத்தைப் பார்க்கையில், அறிஞர்களால் மதிக்கப்படும் மனிதர் என்றும், அப்படிப்பட்டவர் கூட நாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவமதிப்புக்கு உள்ளாவார் என்றும் நகைப்புக்கு இடமாவார் என்றும் இந்த நியாயம் தெரிவிப்பதை அறிய முடிகிறது.
இந்த நியாயத்தோடு தொடர்புடைய சில கதைகள் புகழ் பெற்றவையாக உள்ளன. இவை சிறுவர் கதைகளில் படித்தவையே. ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் கட்டிய புது மாளிகையில் வாஸ்து பூஜை செய்வதற்காக ஒரு புரோஹிதரும் அவருடைய சீடரும் வந்தார்கள். வீட்டு உரிமையாளரின் மனைவி மிகவும் குண்டாக இருந்ததைப் பார்த்து புரோஹிதரும் அவருடைய சீடரும் அனைவரின் முன்பாக நகைத்தனர்.
“சுவாமி, இந்த வீட்டின் கதவுகள் இத்தனை சின்னதாகவும் குறுகியதாகவும் உள்ளதே. இந்த வீட்டின் யஜமானியம்மாவைப் பார்த்தால் இத்தனை குண்டாக இருக்கிறாரே. அவர் மரணமடைந்தால் எப்படி வெளியில் எடுத்துச் செல்வார்கள்?” என்று கேட்டான் சீடன்.
புரோஹிதர் இன்னும் அறிவிலி. சீடனைக் கண்டிக்காமல், “சீடனே, இதென்ன கேள்வி? உடலைத் துண்டு துண்டாக்கி எடுத்துச் செல்வார்களே தவிர, சுவரை உடைப்பார்களா, என்ன?” என்று கேட்டார். இந்த அரட்டையால் புரோஹிதர் அவமதிப்புக்கு உள்ளாகி விரட்டப்பட்டார். சொல்லுக்கு பாதிப்பு அதிகம் என்பது இந்தக் கதை கூறும் நீதி.
ஒரு அறிவுப்பூர்வமான சொல் எதிரியையும் நண்பனாக்கும். ஒரு அறிவற்ற சொல் நண்பனையும் எதிரியாக்கும். விவேகம் நிறைந்தவரான சுவாமி விவேகானந்தர் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் உரைத்த சொற்கள் இன்றளவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சைனாவோடு 1962 ல் நடந்த போரில் பாரத தேசம் 64,000 சதுர கி.மீ நிலப்பகுதியை இழந்தது. தேச பக்தரான ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அன்றைய பிரதமரை பார்லிமெண்டில் அது குறித்து வினவியபோது, அந்த நிலப்பகுதியை குறைத்து மதிப்பிட்டு, “போனால் போகட்டும். ஒரு புல் கூட முளைக்காத இடம் அது. இருந்தால் என்ன? போனால் என்ன? என்று பொருள்படும்படி, “Even a blade of grass won’t grow there” என்றாராம்.
பிரதமர் பதவியில் இருக்கும் மனிதர் கூறக் கூடிய சொற்களா அவை? அத்தகைய விவேகமற்ற நடத்தை அவருடைய கௌரவத்தைக் குறைத்தது. “அவிவேக புரோஹித” நியாயத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தன் விவேகமற்ற பேச்சின் காரணமாக இகழப்பட்டது வரலாற்றில் நிலைத்து விட்டது. இந்தியர்கள் மூன்று வேளையும் சாப்பிடுவதால்தான் உலகில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்றாராம் அவர். அந்த உளறல் அவருடைய கௌரவத்தைக் குறைத்தது.
இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு சீக்கியர்களின் மீது வன்முறையும் கலவரங்களும் கொலைகளும் நேர்ந்தன. அது குறித்துப் பேசிய இந்திராஜியின் மைந்தர், அதனை நியாயப்படுத்துவதுபோல, “பெரிய மரம் பெயர்ந்து விழுந்தால், அதன் தாக்ககம் நில அதிர்வாக வெளிப்படுவது இயல்புதான்” என்று விளக்கவுரை அளித்து, கௌரவத்தை இழந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் நடந்த ஒரு கொடூரமான கொலையைப் பற்றி மதிப்புள்ள உறுப்பினரான கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. தன் வருத்தத்தை வெளிப்படுத்தி கொலையைக் கண்டித்து உரையாற்றுகையில், அப்போதைய முதல்வர், “இறந்தவர் நம் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. எதற்காக தொண்டையைக் கிழித்துக் கொண்டு பேசுகிறாய்? உட்கார்” என்று ஆத்திரத்தோடு பேசியது அப்போது விமரிசனத்துக்கு உள்ளானது.
காங்கிரஸ் கட்சிக்கும், அதிலும் முக்கியமாக ராகுல் காந்திக்கும் குரு போன்றவரான சத்தியநாராயண கங்காராம் பிட்ரோடா (சாம் பிட்ரோடா), அண்மையில் இந்தியர்களின் உடல் நிறத்தைப் பற்றிப் பேசிய சொற்கள் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, வகித்த பதவியையும் இழக்கச் செய்தது. அவருடைய சீடர் வெளிநாட்டு மேடைகளில் வாய்க்கு வந்தபடி சந்தர்ப்ப சூழ்நிலையை கவனிக்காமல் பேசுவதும், பாரத தேசம் ஒரு தேசமே இல்லை என்று உளறுவதும் இந்த அவிவேக புரோஹித நியாயத்திற்கு உதாரணங்கள்.
ஆனால் இவ்வாறு ஏன் சிலர் நடந்து கொள்கிறார்கள்? இது குறித்து மன தத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து விளக்கியுள்ளார்கள். அவர்கள் கூறிய கருத்துகளில் முதலாவது விவேகமின்மை. இந்த நியாயத்தில் புரோஹிதர் என்ற சொல்லை பயன்படுத்துவது, புகழ்பெற்றவர்கள் கூட விவேகமில்லாமல் நடந்து கொள்வார்கள் என்று கூறுவதற்காகவே. அடுத்தது, மனதில் ஆழத்தில் இருக்கும் அழுக்குகள் வெளிப்படுவது. இன்னொன்று, நாவடக்கமின்றிப் பேசும் சுபாவம் உள்ளவர்களிடம் கட்டுப்பாடற்ற பேச்சு இவ்விதமான விவேகமற்ற சொற்களை உதிர்க்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.
“வாக்பூஷணம் சுபூஷணம்” – நல்லவிதமாகப் பேசுவது மனிதனுக்கு நகையலங்காரம் போன்றது என்று கூறும் நியாயம் இது.